Thursday, August 09, 2018

“எனக்கு நீ வேண்டும்!” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்

மொபைல் ட்ராக் ஆப் மூலம் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டுள்ளார். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரம் ஒன்றைச் சேர்ந்தவர் அல்ல அவர். ராமநாதபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதுதான், இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம். 

நடந்தது இதுதான்... ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். அங்கிருந்து தன் மனைவிக்குப் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி அனுப்பியுள்ளார் அவர். போனை எப்படி உபயோகிப்பது என்று தன் வீட்டருகே வசிக்கும் தம்பி உறவுமுறை கொண்ட தினேஷ்குமார் என்பவரிடம் கமலா கேட்டுள்ளார். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்துகொடுத்தவர், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்றும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
“எனக்கு நீ வேண்டும்!” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்
சில நாள்கள் கழித்து கமலாவின் செல்போனுக்கு வெளிநாட்டு எண் ஒன்றிலிருந்து மெஸேஜ் வந்துள்ளது. அதில் ‘நீ உன் கணவருக்கு அனுப்பிய அந்தரங்கப் படங்கள், தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து
விட்டது. அவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்க, எனக்கு நீ வேண்டும். சம்மதிக்கவில்லையென்றால், உன் அந்தரங்க விஷயங்களை பல நாடுகளுக்கு அனுப்பிவிடுவேன்’ எனக் கூறப்பட்டிருந்தது. இதேபோன்ற மிரட்டல்கள் தொடர, மன உளைச்சலுக்கு ஆளான கமலா தன் கணவரிடம் இதைச் சொன்னார். மிரண்டுபோன கணவர், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 

அதன்பின் நடந்தது பற்றி, கமலாவின் கணவர் சொன்னார். ‘‘என்னிடம் கமலா பேசிய விவரங்களை ஒன்றுவிடாமல் குறிப்பிட்டு, அந்த மர்ம நபர் மெஸேஜ் அனுப்பியிருந்தான். விஷயம் தெரிந்து, நான் ஊருக்குத் திரும்பி வந்தேன். நான் ஊருக்கு வந்தது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நபர் நான் வீட்டில் இருக்கும் செய்தியையும் குறிப்பிட்டு மெஸேஜ் அனுப்பினான். இவ்வளவு விஷயங்கள் அவனுக்கு எப்படித் தெரிகிறது என்று திகைத்துப்போனோம். 

என் மனைவியின் சிம்கார்டை மாற்றினேன். அதன்பிறகும் மெஸேஜ்கள் வருவது நிற்கவில்லை. என் மனைவியின் போனிலிருந்து, ‘தயவுசெய்து இதுபோன்று மெஸேஜ்களை அனுப்ப வேண்டாம்’ என்று கெஞ்சிக் கேட்டு மெஸேஜ் அனுப்பினோம். ஆனாலும், பலனில்லை. இதற்கிடையே வீட்டில் துவைத்துப் போட்டிருந்த என் மனைவியின் உள்ளாடைகள் திடீரெனக் காணாமல் போயின. அவன் எங்கோ எங்கள் வீட்டுக்கு அருகில்தான் இருக்கிறான் என்பது புரிந்தது.
“எனக்கு நீ வேண்டும்!” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்
அவனைக் கண்டுபிடிக்க அவன் போக்கிலேயே செல்வது என முடிவுசெய்து, அவனை ஓர் இடத்துக்கு வரச் சொல்லி கமலாவின் போனிலிருந்து மெஸேஜ் அனுப்பினோம். அந்த இடத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே நாங்கள் சென்று மறைந்திருந்தோம். அங்கு வந்த அவனைப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. அவன் வேறு யாருமல்ல, தினேஷ்குமார்தான். அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். முதலில், ‘நான் அப்படிச் செய்யவில்லை’ என்று மறுத்தான். அவன் லேப்டாப்பை போலீஸார் சோதனையிட்ட பின்புதான் உண்மையை ஒப்புக்கொண்டான். செல்போனை அவனிடம் கமலா கொடுத்தபோது, அவளுக்குத் தெரியாமல் அதில் மொபைல் ட்ராக் ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்திருக்கிறான். அதை வைத்துதான், நாங்கள் பேசுவதைக் கண்காணித் துள்ளான். காணாமல் போன கமலாவின் உள்ளாடை களையும், அவனது வீட்டிலிருந்து போலீஸார் கண்டுபிடித்தனர். சகோதரி உறவுமுறையைப் பற்றிக்கூட நினைத்துப் பார்க்காத வக்கிரபுத்தி கொண்டவனாக இருந்திருக்கிறான். இதுபோன்ற நிலை வேறு பெண்களுக்கு ஏற்படக்கூடாது என்றுதான் தைரியமாக அவன்மீது புகார் செய்தோம்’’ என்றார்.

இந்த வழக்கு குறித்துப் பேசிய ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி, “தினேஷ்குமாரின் செயல்களுக்கு அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் யாரும் உதவியுள்ளனரா, வேறு பெண்கள் இதுபோன்று சிக்கியுள்ளனரா, பெண்களின் படங்கள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்று தனி டீம் அமைத்து விசாரணை நடத்துகிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் செய்யலாம். அவர்களின் ரகசியம் காக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து செல்போன் நிறுவன உரிமையாளர் சிராஜுதீனிடம் பேசினோம். ‘‘ஒருவர் தன் ஸ்மார்ட் போன் மூலம் என்னவெல்லாம் செய்கிறார் என்று வேறு யாரோ கண்காணிக்கக் கூடிய உளவு ‘ஆப்’கள் வந்துவிட்டன. சிம் கார்டை மாற்றினாலும்கூட, இதைத் தடுக்க முடியாது. தவிர, ஒருவரது செல்போன் நம்பரைக் குறிப்பிட்ட ‘பெய்ட் ஆப்’-ல் பதிவிட்டால், அந்த போனில் உள்ள வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கால் ரெக்கார்டர், எஸ்.எம்.எஸ் தகவல் என அனைத்தையும் பெறக்கூடிய சாத்தியம் உண்டு. எனவே, எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும், அவரது கைகளுக்கு நம் செல்போன் போகக்கூடாது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்தலாம். அந்தரங்க விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளாமல் இருப்பது நல்லது’’ என்றார்.

விஞ்ஞானம் வளர வளர வக்கிர எண்ணங்களும் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment