Thursday, August 09, 2018

வைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன்! - தென் தமிழகத்துக்கு ஆபத்து

‘வைகை அணை மீனுன்னா அவ்வளவு ருசி...’ என்று சிலாகித்துப் பேசிய தேனி மாவட்ட மக்கள் இப்போது, வைகை மீன் என்றால், “அய்யய்யோ...’’ என்று அலறுகிறார்கள். ஏன்?

‘‘அரசு அனுமதியுடன் 70 பரிசல்களில் 150-க்கும் மேற்பட்டோர் அணையில் மீன் பிடிக்கிறோம். தினமும் காலையில் தேனி சுற்றுவட்டார மக்களும், மீன் வியாபாரிகளும் அணைக்கு வந்து மீன் வாங்கிச்செல்வார்கள். கடந்த ஆறு மாதங்களாக, அணையில் எங்கு வலை வீசினாலும் அழுக்கு மீன்கள்தான் சிக்குகின்றன. இவற்றுக்கு, ‘கரட்டான் மீன்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். கண்ணாடித் தொட்டியில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு வளரும் இந்த மீன்கள், வைகை அணைக்கு எப்படி வந்தன என்று தெரியவில்லை; ஆறு மாதங்களில் அணையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன. பார்க்க அருவருப்பாக இருப்பதால், இந்த மீன்களை யாரும் வாங்குவதில்லை. இதனால், எங்கள் பிழைப்பே கெட்டுவிட்டது. இப்படியே போனால், அடுத்த ஆறு மாதங்களில் வைகை அணையில் இந்த மீன்கள் மட்டும்தான் இருக்கும்’’ என்று வேதனைப்படுகிறார்கள் வைகை அணையில் மீன் பிடிப்பவர்கள்.
வைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன்! - தென் தமிழகத்துக்கு ஆபத்து
திருச்சி பாரதியார் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மணிமேகன், ‘‘சக்கர் ஃபிஷ் அல்லது அழுக்கு மீன் என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர், Pterygoplichthys. இந்த மீன்களால் எந்த சூழலிலும் உயிர்வாழ முடியும். தமிழக நாட்டு மீன் இனங்களை வளரவிடாமல், வேகமாக இனப்பெருக்கம் செய்து நீர்நிலைகளை இந்த மீன்கள் ஆக்கிரமித்துவிடும். நாட்டு மீன்களின் முட்டைகளையும் குஞ்சுகளையும் இந்த மீன்கள் உண்டுவிடுவதால், நம் உள்நாட்டு மீன்களின் பல்லுயிர்ப் பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படும். இதன் பிறப்பிடம் தென் அமெரிக்கா. அங்கேயும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டதால், பெரும் முயற்சி செய்து இந்த மீன்களை அகற்றினார்கள். இதேபோன்ற குணமுள்ள ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை ஓர் ஏக்கர் குளத்தில் 20 டன்கள் முதல் 25 டன்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நாட்டு மீன்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்பதால், இந்த ஆப்பிரிக்க கெளுத்தி மீனை தமிழக அரசு தடைசெய்துள்ளது. அதைப்போல இந்த அழுக்கு மீனையும் தடைசெய்ய வேண்டும். இல்லையென்றால், நாட்டு மீன் இனங்களை நாம் இழக்கும் சூழல் உருவாகும்’’ என்று எச்சரித்தார்.
வைகை அணையை ஆக்கிரமிக்கும் அமெரிக்க மீன்! - தென் தமிழகத்துக்கு ஆபத்து
ஏற்கெனவே ஆந்திராவின் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணையில் இந்த மீன்கள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தின. மீனவர்களின் வலைகளைக் கடித்ததுடன், மீனவர்களையும் கடித்துக் காயப்படுத்தின. அந்த மாநில அரசு இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் திண்டாடிவருகிறது. அதற்குமுன்பாக மேற்கு வங்காளமும் இதே பிரச்னையைச் சந்தித்தது. மீனவர்களின் வலையில் சிக்கும் இந்த மீன்களைச் சும்மா தூக்கிப்போட்டால், பறவைகள் கூட சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறுவழியின்றி, சில பகுதிகளில் இதைக் கோழிக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள்.  
மீன்வளத்துறையின் மாவட்ட ஆய்வாளர் இந்து சாராவிடம் கேட்டபோது, ‘‘அமெரிக்க மீன் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அணை என்றால் ஆயிரம் மீன்கள் இருக்கத்தானே செய்யும்... இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?” என்றார் அலட்சியமாக.

மீன்வளத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் காசிநாத பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘அமெரிக்க மீன் தொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது” என்றார்.
இந்த மீன்கள் அணையை ஆக்கிரமித்துள்ளதால், கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலமாக மதுரைக்குச் செல்லும் குடிநீரில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என மதுரை மண்டலக் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் விஜயகுமாரிடம் கேட்டோம். ‘‘இதுவரை தண்ணீரில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும்போல, தண்ணீரைப் பரிசோதித்து சுத்திகரித்துதான் அனுப்புகிறோம்” என்றார்.

உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால். வைகை நதிநீர் வழியாக இந்த மீன்கள் சென்று மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட நீர்நிலைகளையும் ஆக்கிரமிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது தென் தமிழகத்துக்கே மீன் பஞ்சம் ஏற்படலாம். எளிய மக்களின் சத்துணவுத் தேவையை நிறைவு செய்பவை, உள்நாட்டு நீர்நிலைகளில் கிடைக்கும் மீன்கள்தான். அவற்றுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது. 

- எம்.கணேஷ்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment