Thursday, August 09, 2018

கழுகார் பதில்கள்!

பி.சூடாமணி, திருச்சி.

மக்களுக்கு செய்யப்போவதாக ராகுல் காந்தி இப்போது கூறும் நலத்திட்டங்களை, அவருடைய கட்சி ஆட்சியில் இருந்தபோதே செய்திருக்கலாமே?


புரியாமல் பேசாதீர்கள்... அப்போது செய்திருந்தால், மறுபடி மறுபடி அதைச் சொல்லிச் சொல்லியே வாக்கு கேட்கமுடியுமா?

ஆர்.ராகவி, தெற்கு வாட்டாக்குடி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி - இவர்களில் யார் அதிர்ஷ்டசாலி?


இரண்டு பேருமேதான். ஆனால், கூடுதல் அதிர்ஷ்ட சாலி... குமாரசாமிதான். 36 இடங்களை மட்டும்தான் வென்றார் குமாரசாமி. 104 இடங்களில் வென்றது பி.ஜே.பி. 79 இடங்களை வென்றது காங்கிரஸ். கூட்டிக்கழித்துப் பார்த்தால், கணக்கு இடிக்கத் தான் செய்கிறது. குழப்பக் கணக்காக இருந்தாலும் குமாரசாமிகள் வெற்றி பெற்றுவிடுகிறார்களே.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரண்டு பேருமே என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். வந்திருந்தால் நான் முதல்வராகி யிருப்பேன்” என்றெல்லாம் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறுவது பற்றி?

அந்த இரண்டு பேருமே இப்போது இல்லையே!

ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.

‘‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்க, காந்தி நடத்திய உப்புச் சத்தியாக்கிரகம் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை’’ என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கூறியுள்ளாரே?


உப்பு சத்தியாக்கிரகம் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பல்வேறு போராட்டங்கள் போட்ட பிச்சைதான், இவர் போன்றவர்களுக்குக் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி. ஆனாலும், இப்படியெல்லாம் எப்படித்தான் தைரியமாகப் பேசமுடிகிறதோ!

எஸ்.பரணி, மதுராந்தகம்.

‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மாதம் மும்மாரி பெய்கிறது’’ என்கி றாரே அமைச்சர் செல்லூர் ராஜு, இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?


ஒரு மனிதர் எவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார். குபீர் என்று சிரிப்பதை விட்டுவிட்டுக் கேள்வி கேட்டுக்கொண்டிருக் கிறீர்களே!

ஜி.நீலகண்டன், பெங்களூரு.

சோழ, சேர, பாண்டிய, பல்லவர்கள் என்று வீரதீர மன்னர்கள் வாழ்ந்த தமிழகம் இது. ஆனால், நகைச்சுவை என்கிற பெயரில் மன்னர்களைக் கோழைகளாகவும், யுத்தங்களுக்குப் பயந்து ஓடுபவர்களாகவும் சித்திரித்துப் பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் வெளியிடுவது சரியா?


பழங்கால மன்னர்கள் அத்தனை பேருமே வீரர்கள் என்று சொல்லிவிட முடியாதல்லவா? சம்பந்தப் பட்டவர்களாலேயே எழுதப் பட்ட கல்வெட்டுகள், அவர்களின் பரிசுப் பொருள்களுக்காகவே எழுதப்பட்ட இலக்கியங்கள்... போன்றவைதான் அதிகம். இவற்றையெல்லாம் அப்படியே நம்பிவிடக் கூடாது.

இப்போது கூடத்தான் வீதிக்கு வீதி மாவீரன், போர்ப்படைத் தளபதி, வரலாற்று வரிப்புலி என்றெல்லாம் ஃபிளெக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். அந்த பேனர்களில் இருப்பவர்களில் பலரைப் பார்த்ததுமே உங்களுக்குச் சிரிப்பு பிய்த்துக் கொள்கிறதுதானே!

இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்தில், ஒரு பயில்வானின் உடலில், நோஞ்சானாக இருக்கும் புலிகேசி மன்னரின் தலையை வரைந்து ஓவியம் உருவாகும். ‘‘என் உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்தால், சற்று டொங்கன்போல் இருக்கும். பிற்காலத்தில் உலகமே வியந்து போற்றும் அளவுக்குச் சரித்திரத்தில் இடம்பெறுவ தற்குத்தான் இந்த ஏற்பாடு. வரலாறு முக்கியம் அமைச்சரே’’ என்று விளக்கம் கொடுப்பார் மன்னர்.

இன்றைய ஆட்சியாளர்கள் பலரையும் நேருக்கு நேராகப் பார்க்கிறீர்கள்... இன்னுமா உங்களுக்கு இந்தச் சந்தேகம்?

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘‘இந்தியாவிலேயே அதிக அறிவாளிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்’’ என்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது குறித்து?


இப்படி உசுப்பேற்றி உசுப் பேற்றித் தமிழகத்தை ரணகளப் படுத்துவதே வேலை யாகிவிட்டது. கிங்மேக்கர் என்கிற பட்டம் மட்டும்தான் மாறி மாறிக் கிடைக்கிறதே தவிர, இந்தியாவுக்கு கிங் ஆகும் நிலை தமிழகத்துக்கு வரவே இல்லையே! எதிராளி உள்ளே இருக்கின்றார் என்பது வேறுகதை.

ஏ.அன்பரசன், விழுப்புரம்.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆவதற்கு மோடிதான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறுவது பற்றி?


அவர், கிச்சுகிச்சு ராஜாவாக மாறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இப்படித்தான் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுவார். சிரித்துவிட்டுக் கடந்து செல்லுங்கள்.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

அரசியல் நாகரிகம் என்று சொல்லப்படுவதற்குச் சமீபத்திய உதாரணம் ஏதேனும் உண்டா?


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க-வைச் சேர்ந்த பலரும் மருத்துவமனைக்குச் சென்றதுதான்.

ஒரு காலத்தில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தனர். பெரியாரும் ராஜாஜியும் இதற்கு உதாரணம். ஆனால், தி.மு.க-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்த பிறகு, இரண்டு திராவிடக் கட்சிகளிடையே இடைவெளி அதிகரிக்க ஆரம்பித்தது. எதிரில் பார்த்தால் சிரித்துக்கொள்ளக்கூட பயந்தனர் அ.தி.மு.க-வினர். ஜெயலலிதா காலத்தில் இது இன்னும் மோசமானது. பிற கட்சியினரை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தனர். எதிர்க்கட்சிக் குடும்பத்தில் சம்பந்தம் என்கிற காரணத்துக்காகச் சொந்த மகளின் திருமணத்துக்கே செல்ல முடியாமல் அவதிப்பட்டவர்கள் அந்தக் கட்சியில் உண்டு. தி.மு.க. தரப்பில் இத்தகைய பாராமுகம் அவ்வளவாகக் காட்டப்பட வில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நலம் விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனை சென்றார் மு.க.ஸ்டாலின். தற்போது, அ.தி.மு.க-வின் பாதி அமைச்சரவையே கருணாநிதியின் நலம் விசாரிக்க வந்துவிட்டது. 

இந்த நற்பண்பு இனி என்றென்றும் தொடரட்டும்.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

‘இந்தத் தருணத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால்’ என்று எப்போது நினைத்தீர்கள்... ஏன்?


ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் மூன்று நாள் முகாமுக்கு வந்திருந்தார், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்நிகழ்ச்சிக்கு தொல்.திருமாவளவனும் டாக்டர் தமிழிசையும்கூட வந்திருந்தனர். மூன்று பேரும் அளவளாவியதைப் பார்த்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. அதிலும், வலியச் சென்று அந்த இருவரிடமும் ஜெயக்குமார் ஜாலி கேலியில் இறங்கியது... அப்பப்பா!

தன்னைப் பற்றிய மீம்ஸ்களைத் தயங்காமல் எதிர்கொண்ட ஜெயக்குமார், ‘சிஸ்டர்... சிஸ்டர்...’ என்று தமிழிசைக்கு வக்காலத்து வாங்கியது... சமயங்களில் அதே சிஸ்டரைக் கலாய்த்தது... ‘கருணாநிதியிடம் பிடித்த குணம் என்ன’ என்ற கேள்விக்குப் பளிச்சென்று பதில் சொன்னது... 

‘ம்... ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால்’ என்று அந்த நேரத்தில் நினைத்துக்கொண்டேன்; பெருமூச்சுதான் வந்தது.

பொன்விழி, அன்னூர்.

ரஜினியின் கட்சி பெயர், ரஜினியின் புதுப்பட பெயர்... இரண்டுமே இன்னமும் வெளிவரவில்லை. ஆனால், கழுகார் கண்டறிந்திருப்பாரே?


கட்சியின் பெயர் ஊரறிந்ததுதான் (அம்மா, ஒரு கண்டத்தில் தப்பிவிட்டேன்). படத்தின் பெயர், உலகறிந்ததுதான் (சர்வேஸ்வரா... இரண்டாவது கண்டத்திலிருந்தும் தப்பிவிட்டேன்).

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,  சென்னை- 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment