Thursday, August 09, 2018

குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்!

யங்கரவாத அச்சுறுத்தல், கொலை மிரட்டல் உள்ள அரசியல் தலைவர்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது நடைமுறை. இதைப் பயன்படுத்தி, குற்றப்பின்னணி உள்ளவர்களும் போலீஸ் பாதுகாப்புடன் பந்தாவாக வலம் வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நபர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்க வேண்டும் என்று பி.ஜே.பி-யின் மதுரை மாவட்ட முன்னாள் தலைவரும், ஹெச்.ராஜாவின் தீவிர ஆதரவாளருமான ராஜரத்தினம் மதுரை போலீஸ் கமிஷனரிடம் சமீபத்தில் மனு கொடுத்தார். தமிழகத்தில் பி.ஜே.பி உள்பட பல்வேறு இந்து இயக்க நிர்வாகிகளுக்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பி.ஜே.பி-யின் முன்னாள் நிர்வாகியான ராஜரத்தினம் கொடுத்துள்ள புகாரால் பரபரப்பு கூடியது.
குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்!
இதுபற்றி ராஜரத்தினத்திடம் பேசினோம். ‘‘மதுரை நகரில் குற்றங்கள் குறைய காவல்துறை என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிய கோரிக்கை மனுவை, புதிய கமிஷனரிடம் அளித்தேன். அதில்தான், சிலருக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அரசியல்வாதிகளுக்கும், சில அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் காவல்துறை மூலம் பி.எஸ்.ஓ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காகப் போராடக் கூடியவர்களுக்கும், தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யும் பிரபலங்களுக்கும், தங்கள் மேடைப்பேச்சுகளால் அச்சுறுத்தல்களைச் சந்திக்க வாய்ப்புள்ளவர்களுக்கும் இதுபோன்ற பாதுகாப்பை வழங்கலாம். ஆனால், குற்றப்பின்னணி உள்ளவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வதைப் பார்த்து காவல்துறையை மக்கள் குறை சொல்கிறார்கள். இந்தப் பாதுகாப்பை இவருக்கு வழங்கலாம் என்பதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு உளவுத்துறைக்கு உரியது. அவர்களின் விசாரணை சரியானதா என்பதை கமிஷனர் தெரிந்துகொண்டு, உண்மையிலேயே அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றார். 

இவரின் புகாரை உண்மையாக்கும் வகையில் மறுநாளே ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பாலமுருகன் என்பவருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது கார், பைக் மற்றும் வீட்டில் அவரே ஆள் வைத்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதைக் கண்டுபிடித்து இவர்மீது திருப்புவனம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்!
திருப்புவனம் அருகே புலியூர் கிராமத்தில் உள்ள பாம்பாட்டி சித்தர் கோயிலின் பூசாரியாக இருப்பவர் பாலமுருகன். பில்லி-சூனியம் எடுப்பது, பேய் விரட்டுவது, போலீஸாருக்கு மாந்திரீக மை கொடுப்பது போன்ற தொழில் (!) செய்து, பெருமளவில் பணம் சேர்த்தவர். முதலில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக ஆனவர், சில மாதங்களில் அந்தக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக உயர்ந்தார். கட்சியின் பதவி மற்றவர்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, தன் தம்பி ஆனந்தவேலுக்கு சிவகங்கை மாவட்டத் தலைவர் பதவியையும் வாங்கிக்கொடுத்தார். இதற்கிடையில், தனக்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகச் சொல்லி திருப்புவனத்திலும் மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், இவருக்கு போலீஸ்  பாதுகாப்பு வழங்கப்பட்டது.
குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்!
தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கு விசாரணையில் எங்களுக்குக் கிடைத்த ஒரே தடயம், அவர் வீட்டில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஹீரோ ஹோண்டா பைக்தான். அந்த பைக்கின் இன்ஜின் மற்றும் சேஸ் நம்பரைக் கண்டுபிடித்து, அதைவைத்து அது தென்காசியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடையது என்று கண்டறிந்தோம். அது திருடுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தோம். பாலமுருகனின் கார் டிரைவர் குமார் தென்காசியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர்தான் தென்காசியிலிருந்து அந்த பைக்கை புலியூருக்குக் கொண்டுவந்திருக்கிறார். பெட்ரோல் குண்டு வீச, தன் நண்பர்களான மதுரையைச் சேர்ந்த கார்த்திக், விஜய் ஆகியோரைப் பயன்படுத்தியிருக்கிறார். பலருக்குச் சூனியம் எடுப்பதாகச் சொன்னவர், சொந்தக் காசில் தனக்குச் சூனியம் வைத்துக் கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் கெத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார்’’ என்றனர்.

இதுபற்றி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம். ‘‘பாலமுருகன்மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறேன். நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பு வந்தால் நிரந்தரமாக நீக்கிவிடுவோம்’’ என்றார்.
குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்!
பாலமுருகன் தரப்பினரோ, ‘‘புலியூர் கிராமத்தில் சி.ஐ.டி.யு சுமைதூக்கும் தொழிற்சங்கத்திலிருந்து பிரிந்து பாம்பாட்டி சித்தர் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் உருவானது. இந்தச் சங்கத்துக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களுக்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார் பாலமுருகன். சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதற்காக, பாலமுருகனுக்கான போலீஸ் பாதுகாப்பைத் திரும்பப்பெற்றார் எஸ்.பி. ஜெயச்சந்திரன்’’ என்கிறார்கள்.

சிவகங்கை எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் பேசினோம். ‘‘பாலமுருகன்மீது தனிப்பட்ட விரோதம் எங்களுக்கு இல்லை. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோதுதான், பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட பைக் தென்காசியில் திருடப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் ஆதாரங்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

யாரிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு தேவையோ, அவர்களையே போலீஸ் பாதுகாப்பது நியாயமா?

- செ.சல்மான், தெ.பாலமுருகன்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், வீ.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment