Thursday, August 09, 2018

மிஸ்டர் கழுகு - கவலை... கண்ணீர்!

கஸ்ட் 6-ம் தேதி திங்கள்கிழமை இரவு... கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக, காவேரி மருத்துவமனை ஆறாவது மருத்துவ அறிக்கை வெளியிட்டது. ‘உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருடைய வயது மூப்பினைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவரது உடலின் முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்ற அந்த அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்தபோது கழுகாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’’ என்றார். பின்னணியில் கண்ணீரும் கவலையுமாக உணர்ச்சிமயமான குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.
கழுகார் நம்மிடம் சொன்ன தகவல்கள் அப்படியே இங்கே...

மீண்டும் மீண்டும் பரபரப்பு! 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நம்பிக்கையுடன் காத்திருந்த தி.மு.க தொண்டர்களுக்கு இந்த தினம் தூக்கமற்ற இரவைத் தரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகஸ்ட் 6-ம் தேதி காவேரி மருத்துவமனை மீண்டும் பரபரப்பானது. வழக்கமாக, காலை 8.30 மணிக்குத்தான் மகள் செல்வி கருணாநிதியைப் பார்க்க வருவார். மருத்துவமனைக்கு வருவதற்கு முன், கோபாலபுரம் வீட்டுக்கும் போய் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு வருவார். ஆனால், 6-ம் தேதி காலை 7 மணிக்கே காவேரி மருத்துவமனைக்கு நேராக வந்துவிட்டார். அதுபோல, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்துவிட்டனர். கருணாநிதியை மருத்துவமனையில் அட்மிட் செய்த அன்று மட்டும் வந்த அவரின் ஆத்மார்த்த உதவியாளர் சண்முகநாதனும், 6-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியது.
வந்தார் தயாளு அம்மாள்!

அப்போது மருத்துவமனையில் இருந்த அழகிரி, “அம்மாவையும் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார். உடனே மு.க.தமிழரசுவும் அவரின் மனைவியும் கோபாலபுரம் இல்லத்துக்குக் கிளம்பிப் போனார்கள். அழகிரியின் மகன் துரை தயாநிதியும், தமிழரசுவின் மகன் அருள்நிதியும் கூடப் போனார்கள். கருணாநிதி வீல் சேருக்கு மாறியபிறகு வெளியில் பயணம் செல்வதற்கு பிரத்யேக காரைப் பயன்படுத்துவார். அந்த காரில்தான் தயாளு அம்மாளை காவேரி மருத்துவமனைக்குக் கூட்டிவந்தார்கள்.

ஜூலை 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு முதல்முறையாக ஆம்புலன்ஸில் கருணாநிதி அழைத்துவரப் பட்டார். அதற்குப் பிறகு அவரைப் பார்க்க குடும்பத்தில் மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். ஆனால், தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தது அதுதான் முதல்முறை. கடந்த சில நாள்களாகவே தயாளு அம்மாளுக்கு உடல்நலமில்லை. ஆகஸ்ட் 4-ம் தேதி சனிக்கிழமை அவர் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்கு வீட்டிலேயே குளூக்கோஸ் ஏற்றும் அளவுக்கு சீரியஸ். ஸ்டாலின் அவசரமாகக் கிளம்பிப் போய் நள்ளிரவு இரண்டு மணி வரை அம்மா பக்கத்தில் இருந்தார். அந்த சோர்வில் இருந்தாலும், ஆகஸ்ட் 6-ம் தேதி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியைப் பார்த்தார். அப்போதே, வெளியில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு நிலைமை புரிந்துவிட்டது.
மீண்டும் பின்னடைவு

‘போராளியான கருணாநிதி மீண்டு வருவார். நம்பிக்கையுடன் இருப்போம்’ என காவேரி மருத்துவமனை வாசலில் கவலையும் குழப்பமுமாக இருந்த தொண்டர்களை தலைவர்கள் பலரும் சமாதானப்படுத்தியபடி இருந்தனர். கிட்டத்தட்ட நாற்காலியில் உட்கார வைக்கப்படும் அளவுக்கு சிகிச்சையில் முன்னேற்றம் கண்டார் கருணாநிதி. திடீரென ஏன் பின்னடைவு?

சிறுநீரகத் தொற்று காரணமாக ஜூலை 26-ம் தேதி கருணாநிதிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. அது அதிகரிக்கவே, மறுநாள் உடல்நிலை மோசமானது. கோபாலபுரம் வீட்டிலேயே, காவேரி மருத்துவமனையிலிருந்து சென்ற மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம் மிக மோசமாகக் குறையவே, ஜூலை 28-ம் தேதி அதிகாலை இரண்டரை மணிக்கு அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். ஆன்டி பயாடிக் மருந்துகளைக் கொடுத்து மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையால் அவரின் ரத்த அழுத்தம் சீரானது.   

ஆனால், அடுத்த நாளே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்தன. இதயத்துடிப்பும் சீரற்ற வகையில் இருந்தது. டாக்டர்கள் மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்க்க, மருத்துவமனை வாசலில் பெரும் கூட்டம் திரண்டது. வதந்திகள் பலவிதமாகப் பரவ, பதற்றம் தொற்றிக்கொண்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையிலேயே தங்கினர். அதுவரை வராதவர்கள்கூட வந்துவிட, கண்ணீர்க் கடலில் தத்தளித்தது காவேரி. ஆனால், எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டுவந்தார் கருணாநிதி. டாக்டர்களே அதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். ‘கல்லீரல் தவிர அவரது உடலில் எல்லா முக்கிய உறுப்புகளும் சீராக இயங்குவதாக’ மருத்துவமனை சார்பில் அறிக்கை தரப்பட்டது. அந்தக் கல்லீரல் பிரச்னைதான் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இரண்டு புகைப்படங்கள்!

மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதியின் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஒன்று, துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வந்தபோது எடுக்கப்பட்டது. இரண்டாவது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது எடுக்கப்பட்டது. வெங்கய்ய நாயுடு வந்தபோது கருணாநிதி மோசமான நிலையில் இருந்தார் என்பதை அந்தப் புகைப்படம் காட்டியது. ஆனால், ராகுல் வந்தபோது எடுத்த புகைப்படத்தில், கவனிக்கத்தக்க முன்னேற்றம் தெரிந்தது. ராகுல் புன்முறுவலுடன் நின்றிருக்க, கருணாநிதியின் காதருகே சென்று ஸ்டாலின் ஏதோ சொல்வார். கருணாநிதி கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டிருப்பார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு கருணாநிதி கண்களைத் திறந்து பார்த்தது அப்போதுதான்.

தொண்டையில் பொருத்தப் பட்டிருக்கும் ட்ரக்கியோஸ்டமி ட்யூபை மாற்றுவதற்காக ஜூலை 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. அப்போது தரப்பட்ட மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து அவர் தெளியவே இல்லை என்று சொல்லப்படுகிறது. காலில் மட்டும் லேசாக அசைவுகள் இருக்க, படுத்த படுக்கையாகவே இருந்தார். அவர் சிரமப்பட்டு மூச்சுவிடும் ‘கர்...புர்...’ ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இந்த மயக்கத்திலிருந்து அவர் கண் திறந்து பார்த்தது, மருத்துவமனைக்கு ராகுல் வந்த நாளில்தான். அதனால், மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் நம்பிக்கை தென்பட்டது. ‘‘சில நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரை வீட்டுக்குக் கூட்டிச் செல்லலாம். அதன்பின் வீட்டிலேயே அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கலாம். முக்கிய உறுப்புகள் சீராக இயங்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று சொன்னார்கள். அரிதாக சில நேரங்களில் ஏற்ற இறக்கங்கள் தென்பட்டாலும், அவரின் இதயத் துடிப்பு சீராக இருந்தது; ரத்த அழுத்தம் இயல்பாகவே இருந்தது.

கவலைப்பட வைத்த கல்லீரல்!

ஆகஸ்ட் 3-ம் தேதி திடீரென கருணாநிதியின் கால்கள் வீங்கத் தொடங்கியதை டாக்டர்கள் கவனித்தனர். கல்லீரல் பிரச்னையால் இது ஏற்பட்டிருக்கலாம் என யூகித்த டாக்டர்கள், உடனடியாக bilirubin பரிசோதனை செய்துபார்த்தனர். கல்லீரலில் நோய்த்தொற்று இருக்கலாம் என்பதை அந்தப் பரிசோதனை உணர்த்தியது. ஆகஸ்ட் 4-ம் தேதி காலை ஏழரை மணிக்கு, உலக அளவில் கல்லீரல் சிகிச்சையில் புகழ்பெற்ற டாக்டர் முகமது ரெலா வரவழைக்கப்பட்டார். கல்லீரல் அறுவைசிகிச்சை நிபுணரான இவர், சென்னை குளோபல் மருத்துவமனையில் பிராக்டீஸ் செய்கிறார். இவரை அழைத்து வந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதை டாக்டர் ரெலா உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கான சிகிச்சையை ஏற்கும் நிலையில் கருணாநிதியின் உடல் இல்லை என்பதை உணர்த்திய முகமது ரெலா, அதுவரை தரப்பட்டுவந்த ஆன்டிபயாடிக் மருந்துகளையே தொடரச் சொன்னார். திடீரென கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை ஏன் தொற்றியது என்பதைக் கண்டறியமுடியாமல் டாக்டர்கள் திணறிவிட்டனர்.
ஜனாதிபதி வருகை சொன்ன செய்தி! 

வெங்கய்ய நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் வந்து கருணாநிதியைப் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து, கருணாநிதியைப் பார்க்காமல்தான் திரும்பிப்போனார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 5-ம் தேதி நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார். இவர் வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே, கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டனர். கருணாநிதியின் உதவியாளர் நித்யாவும், ஆகஸ்ட் 3-ம் தேதியிலிருந்தே அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு தலைவரின் உடல்நிலையைக் குறித்து விசாரிப்பதற்காக அலுவல்ரீதியில் ஒரு ஜனாதிபதி வருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்குமுன்பு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உடல்நிலை பற்றி விசாரிக்க, அலுவல்ரீதியாக வந்தார். அடுத்தது அந்த சிறப்பு, கருணாநிதிக்குத்தான்!

கருணாநிதியின் உடல்நிலை பற்றி ஜனாதிபதியிடம் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் விவரித்தனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியைப் பார்க்க ஜனாதிபதி எழுந்தார். அந்த அறைக்கு முன்பாக நின்று ஷூக்களைக் கழற்றிவிட்டு உள்ளே நுழையப் போன நிமிடத்தில் ஜனாதிபதி திடீரென மனம் மாறிவிட்டார். ‘‘மனம் என்னவோ போல இருக்கிறது. நான் தூரத்தில் இருந்தபடியே பார்க்கிறேன்’’ என்றவர், அப்படித்தான் கருணாநிதியைப் பார்த்துவிட்டுப் போனார்.
ஆகஸ்ட் 6-ம் தேதி நடந்தது என்ன?

காவேரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட மறுநாள்... அதாவது ஜூலை 29-ம் தேதி கிட்டத்தட்ட மரணத்தின் வாசலுக்குச் சென்று மீண்டுவந்தார் கருணாநிதி. ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலையில் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கிட்டத்தட்ட ஜூலை 29-ம் தேதி நிலைமைக்கு அவர் உடல் சென்றிருப்பதை உணர்ந்தனர். உடனடியாக ஸ்டாலினுக்கும் செல்விக்கும் தகவல் பறந்தது. ஜூலை 29-ம் தேதிக்கும், ஆகஸ்ட் 6-ம் தேதிக்கும் இருந்த மிக முக்கியமான வித்தியாசம்... ஜூலை 29-ல் கல்லீரல் ஓரளவு இயக்கத்தில் இருந்தது; ஆகஸ்ட் 6-ம் தேதி மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் கல்லீரல் செயல்பட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.

பொதுவாக ஒருவரின் உடலுக்குள் செல்லும் மருந்துகள், கல்லீரலால் சுத்திகரிக்கப்பட்டு வெளியில் செல்லும். ஆனால், ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதிக்குத் தரப்பட்ட மருந்துகள் அதே நிறத்துடனும், அதே அளவிலும் உடலைவிட்டு வெளியேறுவதை டாக்டர்கள் கவனித்தனர். கூடவே ரத்தக்கசிவும் இருந்தது. கல்லீரலின் செயல்பாடு முடங்கிப்போனதை இவை உணர்த்தின. ஏற்கெனவே அவருக்கு இருந்த சிறுநீரகத் தொற்றை, தொடர்ச்சியாகத் தரப்பட்ட ஆன்டி பயாடிக் மருந்துகள் கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால், இப்போது மருந்துகளின் வீரியம் குறையத் தொடங்கியதால், சிறுநீரகமும் பாதிப்புக்கு உள்ளானது.

மதியவாக்கில் அவரின் பல்ஸ் குறையத் தொடங்கியது. உடலுக்குள் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போனதால், போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்தார் கருணாநிதி. மூச்சுவிடவே சிரமப்பட்டார். இதற்கிடையே அவரின் இதயத் துடிப்பு சீராக இருந்தது மட்டும்தான் ஒரே ஆறுதல்.
மாலை 3 மணியளவில் அவருக்கு வென்டி லேட்டர் பொருத்தி சுவாசத்தை சீராக்கலாமா என டாக்டர்கள் முயற்சிசெய்து பார்த்தனர். ஆனால், ஏற்கெனவே ட்ரக்கியோஸ்டமி ட்யூப் பொருத்தப்பட்டிருப்பதால், வென்டிலேட்டரை வைக்க முடியவில்லை.

தோல்விகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்து, அவற்றிலிருந்து மீண்டுவந்த வரலாற்றுப் பெருமை தி.மு.க-வுக்கு உண்டு. கருணாநிதியின் உறுதியும் போராட்ட குணமும் அதையெல்லாம் சாத்தியமாக்கின. பல பின்னடைவுகளை தன் சாமர்த்தியமான பேச்சாலும் எழுத்தாலும் மாற்றிக் காட்டினார் அவர். அரசியல் போராட்டங்களிலும் தேர்தல் களத்திலும் அதைச் சுலபமாக அவரால் செய்ய முடிந்தது. ஆனால், உடல்நிலையில் பின்னடைவு என்பது அவர் சந்திக்காத பிரச்னை. அதுதான் தொண்டர்களைக் கவலையும் கண்ணீருமாக நிற்க வைத்திருக்கிறது.

ஓவியம்: ஹாசிப் கான்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வி.ஸ்ரீனிவாசுலு, வெ.நரேஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment