Sunday, February 18, 2018

துரத்தப்பட்ட நிழல் குடும்பம்!

‘‘ஊழல் குற்றச் சாட்டுகளுக் காக இந்த ஆட்சியாளர் பதவி விலக வேண்டும்’’ என உத்தரவு வந்ததும், மக்கள் வீதிகளில் வந்து கொண்டாடினார்கள். ‘‘ஆட்சி செய்த இவரின் பெயரை வைத்துக் கொள்ளையடித்தது ஒரு குடும்பம் தான்’’ என மக்களின் ஆத்திரம் அவர்கள் பக்கம் திரும்பியது. அந்தக் குடும்பத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப் பட்டபோது மக்கள் மகிழ்ந்தார்கள். ‘‘இவர்களை நாட்டைவிட்டே துரத்த வேண்டும்’’ எனக் கொதிப்பு டன் சொன்னார்கள். போலீஸ், அந்தக் குடும்பத்தில் சிலரைச் சிறையிலும் அடைத்துள்ளது.

வெயிட்... வெயிட்... உங்கள் மைண்ட் வாய்ஸில் ஒலிக்கும் அந்தக் குடும்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. தென்னாப்பிரிக்க அதிபராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜேக்கப் ஜுமா, பிப்ரவரி 14-ம் தேதி புதன்கிழமை ராஜினாமா செய்திருக்கிறார். தொடர்ச்சியான ஊழல் குற்றச் சாட்டுகளால் அவரின் கட்சியே அவரைக் கைவிட, வேறு வழியின்றி நாற்காலியை அவர் துறந்தார். அவர் பதவி விலகக் காரணம், குப்தா குடும்பம். ஜுமா பதவி விலகிய சில மணி நேரங்களில், ஜோகன்னஸ்பர்க் நகரில் இருக்கும் குப்தாவின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அந்தப்பகுதி மக்கள் ஆரவாரம் செய்து போலீஸை வரவேற்றனர். ‘‘அதிபரைத் தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தென்னாப்பி  ரிக்காவையே சுரண்டியது இந்தக் குடும்பம்’’ எனத் தேசமே இப்போது கொந்தளிக்கிறது. கறுப்பினத்தவரின் விடுதலைக்காக மகாத்மா காந்தி போராடிய மண்ணில், இந்த ஒற்றைக் குடும்பத்தால் அவமானப்பட்டு நிற்கிறார்கள் இந்தியர்கள்.
யார் இந்த குப்தாக்கள்?

உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் நகரில், நம்ம ஊர் அண்ணாச்சி கடை போன்ற கடை வைத்திருந்த சிவகுமார் குப்தா என்பவருக்கு மூன்று மகன்கள். தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்ற நேரத்தில், இந்த மூவரில் அதுல் குப்தா அங்கு பிசினஸ் செய்யப் போனார். சில ஆண்டுகளில் அவரின் அண்ணன் அஜய் குப்தாவும், தம்பி ராஜேஷ் குப்தாவும் அங்கு போனார்கள். ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை இவர்கள் அங்கு தொடங்கினார்கள். மலிவு விலையில் வெளிநாடுகளிலிருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வரவழைத்து, இவர்கள் உருவாக்கிக் கொடுத்த கம்ப்யூட்டர் நல்ல விலைக்குப் போனது. 

நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அங்கு ஆட்சியைப் பிடித்தபோது, அந்தக் கட்சியின் தலைவர்களுடன் குப்தாக்கள் நெருக்கமானார்கள். அவர்களின் பிசினஸ் சாம்ராஜ்ஜியம் வளர ஆரம்பித்தது. அப்போது ஜேக்கப் ஜுமா சாதாரண அமைச்சராக இருந்தார். ஆனால், ‘எதிர்காலத்தில் இவர் கட்சியைக் கைப்பற்றி ஆட்சிக்கு வருவார்’ எனக் குப்தாக்கள் உணர்ந்தனர். எனவே, அவரைக் கிட்டத்தட்ட தங்களின் கைப்பாவையாக ஆக்கினர். ஜுமாவுக்கு நான்கு மனைவிகள். அவர்களில் ஒருவரான போங்கி நெகிமா, மகன் டுடுஸேன், மகள் டுடுஸைல் ஜுமா ஆகிய மூவருக்குமே குப்தாவின் நிறுவனங்களில் உயர் பதவிகள் தரப்பட்டன.

2009-ம் ஆண்டு ஜுமா தென்னாப்பிரிக்க அதிபரானார். அதன்பிறகு குப்தா குடும்பத்தின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது. ஜுமாவை புகழ்வதற்காகவே ‘The New Age’ என்ற செய்தித்தாளையும், ‘ANN7’ என்ற செய்தி சேனலையும் தொடங்கி மீடியா தொழிலில் கால் பதித்தவர்கள், ‘யார் அமைச்சராக வேண்டும்’ என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு நிழல் அரசாங்கத்தையே நடத்த ஆரம்பித்தனர்.
2013-ம் ஆண்டு, அனில் குப்தாவின் மகள் வேகாவுக்குத் திருமணம் நடந்தது. அதற்காக இந்தியாவிலிருந்து 217 விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு வந்த சிறப்பு விமானம், பிரிட்டோரியா விமானப்படை தளத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் மட்டுமே இப்படி சிறப்பு அனுமதி தரப்படும். விதிகளைமீறி இவர்களுக்கு அதிபரே தலையிட்டு அனுமதி கொடுத்தார். வழக்கமான எந்தச் சோதனைகளும் இல்லாமல், அத்தனை பேரும் வந்து போனார்கள்.  

*  தென்னாப்பிரிக்க நிதியமைச்சராக இருந்த நீனே, 2015-ம் ஆண்டு பதவி விலகினார். ‘‘குப்தா குடும்பத்தை எதிர்த்ததால்தான் பதவியை இழந்தேன்’’ என்றார் அவர். நிதித்துறைத் துணை அமைச்சராக இருந்த ஜோனாஸ், ‘‘குப்தாக்கள் தங்கள் வீட்டுக்கு என்னை அழைத்து, அவர்கள் சொல்வதைச் செய்வதாக இருந்தால், என்னை நிதியமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார்கள்.பணமும் தரத் தயாராக இருந்தார் கள்’’ என்றார். ஜோனாஸ் தயங்கிய தால் நிதியமைச்சராக முடியவில்லை. அதன்பின் மூன்றே நாள்களுக்கு ஒரு வரும், 15 மாதங்களுக்கு இன்னொரு வரும் அந்தப் பதவியில் இருந்தனர். 
  தென்னாப்பிரிக்காவும் ரஷ்யாவும் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. தென்னாப்பிரிக்காவில் ஒரு யுரேனிய சுரங்கத்தை குப்தா குடும்பம் வாங்கியதும், அவர்கள் சம்பாதிக்கவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 

*  தென்னாப்பிரிக்க அரசின் மின்துறை, மார்க்கெட் விலையைவிட மிக அதிகமான விலைக்கு நிலக்கரி சப்ளை செய்யும் கான்ட்ராக்டை குப்தா குடும்பத்துக்குக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக சுரங்கத்துறை அமைச்சரே சுவிட்சர்லாந்து சென்று வந்தார். 

இப்படி நீளும் குற்றச்சாட்டுகள் எல்லாமே அதிர வைக்கின்றன. குப்தா சகோதரர்கள் இதிலிருந்து தப்பிக்க, துபாய்க்கு அடைக்கலம் போகக்கூடும் என்கிறார்கள். நிழல் குடும்பங்களால் அரசுகள் வீழ்வதும், மக்கள் வதைபடுவதும் உலகம் முழுக்க நடக்கின்றன.

- தி.முருகன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment