Thursday, February 15, 2018

புது டெக்னிக்கில் கொல்லப்பட்ட புதியவன்!

சென்னையில் பிப்ரவரி 9-ம் தேதி ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஜே.கே.புதியவன் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தில், விடைதெரியாத கேள்விகள் ஏராளம். ஐ.சி.எஃப் பகுதியில் வசித்து வந்த புதியவனை, வீட்டுப் படுக்கையறையில் வைத்து, காலை 9 மணியளவில் கொன்றனர். அடுத்த அரை மணி நேரத்திலேயே, புதியவனின் முன்னாள் கார் டிரைவர் பாஸ்கரன்தான் கொலையாளி என்ற தகவல் பரவியது. அன்று மாலையே பாஸ்கரன் தன் கூட்டாளி ஆனந்தனுடன் போலீஸில் சரணடைந்தார். ‘ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 5 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்ததே புதியவன் கொலைக்கான காரணம்’ என்கிறது போலீஸ் தரப்பு. 

கொலை நடந்த பாட்டைத் தெருவில் வசிக்கும் மக்கள், புதியவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்துள்ளனர். மாடியில் படுக்கை அறையில் துடித்துக் கொண்டிருந்த புதியவனைக் கீழே இறக்கியபடி ஆம்புலன்ஸுக்கும், புதியவன் மனைவிக்கும் ஒரே நேரத்தில் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வரும் வரை மரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த புதியவன், தன்னை வெட்டியது யார் என்பதையும்  அப்போது சொல்லியிருக்கிறார். ஆம்புலன்ஸ் வந்ததும், ஐ.சி.எஃப். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டார்.
ஜே.கே.புதியவனுக்குத் தொழிற்சங்க குருவாக இருந்தவர் நடராஜன் என்பவர். நடராஜனை விட்டு விலகித் தனியாக ஒரு தொழிற்சங்கத்தைப் புதியவன் தொடங்கியுள்ளார். புதியவனின் சங்கம் வேகம்பிடித்த காலத்திலேயே நடராஜன் இறந்துவிட, நடராஜனின் சங்கத்தில் இருந்தவர்கள் புதியவனோடு இணைந்தனர். புதியவன் சங்கம் அதன்பின் வலுவான சங்கமாக மாறியிருக்கிறது. புதியவனின் நண்பரும், தொழிற்சங்கப் பிரதி நிதியுமான தாமஸ், ‘‘மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அப்போது தான், ரயில்வே தொழிலாளர் நலனுக்காக ‘அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சங்கம்’ (ஏ.ஐ.ஓ.பி.சி.) என்று தொடங்கி, அதன் பொதுச் செயலாளராக புதியவன் செயல்பட்டார். சங்கத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்தார். தொழிலாளர்களின் குடும்ப நண்பராகவே மாறிப் போனார். சொந்தப் பணத்தைக் கொடுத்து எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறார். நாங்கள் நல்ல நண்பரை இழந்து விட்டோம்’’ என்றார் தாமஸ்.
ஜே.கே.புதியவனின் முதல் மனைவி  20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதன்பின்னர், உடன் பணியாற்றிய ரஞ்சித குமாரியை இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டின் முதல் தளத்தையும், தரைத்தளத்தையும் வாடகைக்கு விட்டுவிட்டு, இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் புதியவன் வசித்து வந்துள்ளார். 9-ம் தேதி காலை, மனைவி ரஞ்சித குமாரி வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் போய்விட... வீட்டில் புதியவன் மட்டும் இருப்பதை உறுதிசெய்த பின்னரே கொலையாளிகள் உள்ளே நுழைந்துள்ளனர். திரும்பிப் போகும்போது அவர்கள், வாசலில் இருந்த  சி.சி.டி.வி கேமராவையும், புதியவன் அறையில் இருந்த கேமரா பதிவுகள் அடங்கிய கருவியையும் கொண்டுபோய் விட்டதாகக் கூறப்படுகிறது.
கொலைக்கான பின்னணி குறித்துப் பல்வேறு தரப்பில் விசாரித்தோம். ‘‘ரயில்வே பணியிடங்களில் தமிழர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதை எதிர்த்து கண்டனக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தவர், புதியவன். ரயில்வே பணியிடங்களில் வெளிமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கண்டித்துக் குரல் கொடுத்த தொழிற்சங்க நிர்வாகியும் இவர்தான். அண்மையில், ‘புயலாய்ப் புறப்பட்டு விட்டான் புதியவன். இனி தமிழர் தலை நிமிர்வர்’ என்ற வாசகங்களைக் கொண்ட போஸ்டர்களை ஜே.கே.புதியவனின் ஆதரவுத் தரப்பு ரயில்வே பகுதிகளில் ஒட்டியது. அப்போதே புதியவனுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே புதியவனின் தொழிற்சங்கத்துக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்ந்தபடி இருந்தன. அதனால்தான், வீட்டின்முன் சி.சி.டிவி கேமராவைப் பொருத்தினார். எல்லா கோணங்களிலும் இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.
புதியவனின் குடும்பத்தினரிடம் புகாரை வாங்க போலீஸார் பெரிதும் சிரமப் பட்டிருக்கின்றனர். போலீஸ் விசாரணைக்கும் அவரின் குடும்பத்தார் உதவ முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையும் போலீஸார் கவனத்தில் கொண்டுள்ளனர்.

ஜே.கே.புதியவனைக் கொன்றவர்கள், மார்பிலும், கை கால்களிலும் லேசாகவும், பின்மண்டையில் மிக ஆழமாகவும் வெட்டியுள்ளனர். புதியவனின் அலறல் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், சம்பவ இடத்தில் புகைமூட்டத்தில் சிக்கி, சில நிமிடங்கள் திணறியுள்ளனர். புகை கலைந்து அவர்கள் சுதாரிப்பதற்குள், கொலையாளிகள் சாதாரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். புகை மூட்டத்தை எழுப்பிக் கொலையை அரங்கேற்றியது புது டெக்னிக் என்பதால், போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். இந்தப் புகை குறித்து, சரணடைந்த பாஸ்கர் வாயைத் திறக்கவில்லையாம்!

- ந.பா.சேதுராமன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment