Friday, February 09, 2018

அப்துல் கலாம் பெயரில் அடடே மோசடி!

ப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளை நடத்தி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மோசடி நடப்பதாகப் பாதிக்கப் பட்டவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டார்கள். திருச்சி ஏர்போர்ட் அருகே கலைவாணர் தெருவில் இயங்கிவரும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் யூத் பவுண்டேஷன்-2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் ஆகியவற்றை நடத்திவரும் முகமது இஸ்மாயில் என்பவர் மீதுதான் குற்றச்சாட்டு. ஆயிரம் கோடி ரூபாயில் மெகா திட்டங்கள் போடுவதாக மயக்கினார்... பல நூறு ஏழை மாணவர்களைத் தங்கள் அறக்கட்டளைச் செலவில் படிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றினார்... இரண்டு இடங்களில் அலுவலகங்கள் திறந்து பலரை வேலைக்குச் சேர்த்து, சம்பளம் தராமல் ஏமாற்றினார் என அடுக்கடுக்காகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. 
ஜான் போஸ்கோ என்பவர், “என் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிடுவதாகக் கூறி இஸ்மாயில் ஏமாற்றினார்” என்றார். அவரிடம் பேசினோம். ‘‘என் மகனின் கல்வி விவரங்களை வாங்கிக்கொண்ட இஸ்மாயில், ‘மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட உதவுகிறேன்’ என்றார். நீட் தேர்வுக்காகத் தயாராகிவந்த என் மகன், இடையே இஸ்மாயில் நடத்திவந்த இலவச டியூஷன் சென்டரில் பாடம் நடத்தி வந்தார். அவரின் அறக்கட்டளையும், சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதாக இஸ்மாயில் ஆவணங்களைக் காட்டினார். அடுத்த சில வாரங்களில்,  எஸ்.ஆர்.எம் கல்லூரியில் என் மகனுக்கு மெடிக்கல் சீட் வாங்கி விட்டதாக ஆணைகளைக் கொடுத்து, 11 லட்ச ரூபாய் பணம் கேட்டார். அவர் சொன்னதை உண்மை என நம்பி, பல பேரிடம் கடன் வாங்கிப் பணத்தைக் கொடுத்தேன். 

கடந்த அக்டோபர் மாதம், அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு விஜய், விவேக் உள்ளிட்ட நடிகர்கள் வரு வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை. அதனால், நிகழ்ச்சிக் குப் போன எங்களைச் சிறப்பு விருந்தின ராக அறிவித்தார். இவரின் நடவடிக்கை கள் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவே, சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரிக்கே சென்று விசாரித்தோம். ‘இஸ்மாயில் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை’ என்று அவர்கள் கூறினர். அப்போதுதான் இஸ்மாயில் ஏமாற்றியது எங்களுக்குத் தெரியவந்தது. அதன் பிறகு, நான் கொடுத்த 11 லட்சத்தைத் திருப்பித் தரும்படி கேட்டேன். அதனால், அவரை நான் மிரட்டியதாக என்மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். ஏமாந்தவர்கள் அவரது அலுவலகத்துக்குத் தேடி வருவதால், அலுவலகத்தையும் காலிசெய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார்” என்றார் வேதனையுடன்.
இதேபோல இஸ்மாயிலால் பாதிக்கப் பட்டவர்கள், திருச்சி உறையூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்கள்.  

குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க, முகமது இஸ்மாயிலைச் சந்தித்தோம். ‘‘ஒரு விசாரணைக்காக உறையூர் காவல் நிலையம் செல்கிறேன். இப்போது உங்களுடன் பேச நேரமில்லை” என நமக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். “உங்கள் அமைப்புப் பதிவுசெய்யப் பட்டுள்ளதா?” என்று கேட்டோம். “விரிவாகப் பேச இப்போது நேரமில்லை. பிறகு பேசுகிறேன்” எனக் கூறினார். அவரிடம் நமது செல்போன் எண்ணைக் கொடுத்தோம். ஆனால், அவர் பேச வில்லை. அவரது விளக்கத்தைக் கேட்பதற்காகத் தொடர்புகொண்ட போது, அவர் நம் அழைப்புகளைத் தவிர்த்தார். நம்மிடம் பேச மறுத்ததுடன், “ஜூ.வி நிருபர் என்னை மிரட்டுகிறார்” என்று போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி ஏர்போர்ட் போலீஸார், நம்மைத் தொடர்புகொண்டு பேசினர். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, நடந்த சம்பவங்களை விவரித்தோம். முகமது இஸ்மாயிலைச் சந்தித்தபோது, நமக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடலை வீடியோவாகப் பதிவு செய்திருந்தோம். அதை போலீஸாரிடம் கொடுத்தோம். தவிர, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜைச் சந்தித்தும் நடந்ததை விவரித்தோம். “இதுகுறித்து உரிய விசாரணை நடத்துகிறோம். இஸ்மாயில் ஏமாற்றியது உண்மையெனில், நடவடிக்கை எடுப்பதற்கு உத்தர விடுகிறேன்” என உறுதியளித்தார். 

இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக, இஸ்மாயில்மீது புகார் கொடுத்தவர்களை அழைத்த போலீஸார், “இனிமேல் இஸ்மாயிலிடம் பிரச்னை செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள்’’ என்று அச்சுறுத்தும் விதத்தில் சொல்லி, அவர்களிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். இஸ்மாயில்மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொன்ன போலீஸார், புகார் கொடுத்தவர்களிடமே இப்படி எழுதி வாங்கியது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இரண்டு இடங்களில் அலுவலகம் திறந்து மூடிய இஸ்மாயில், இதன் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் போட்டிருந்த அலுவலகத்தையும் இரவோடு இரவாகக் காலி செய்துவிட்டார்.
‘‘இஸ்மாயிலுக்குத் துணைபோகும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏமாந்தவர்கள் குமுறுகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை ‘துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டுள்ளார்’ என்று நமக்குத் தகவல் கிடைத்தது.

கலாம் பெயரில் நடக்கும் மோசடிகள் தடுக்கப்பட வேண்டும்.    

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment