Monday, February 12, 2018

வரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி!

துரை கே.கே. நகரில்,  மாநகராட்சிக்கு வரி செலுத்தத் தவறிய இரு வணிக வளாகங்கள் முன்பாக, குப்பைகள் நிரம்பிய இரண்டு பெரிய தொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் வைத்துச்சென்றனர். அதனால், அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால், அங்கிருந்த கடைகளுக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கடைக்காரர் ஒருவர் வரி செலுத்தாததால், அவரது கடையின் முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டியை வைத்து, அவரை அவமானப்படுத்தினர். 

சில ஆயிரம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள சாமானிய மக்களிடம் இப்படி நடந்துகொள்ளும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்தான்... ரூ. 2,77,01,979 வரி பாக்கி வைத்துள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம், ரூ. 2,68,11,088 கோடி வரி பாக்கி வைத்துள்ள சாய்ராம் கல்வி நிறுவனம், ரூ. 2,55,01,968 வரி பாக்கி வைத்துள்ள மகாத்மா கல்வி நிறுவனம் உள்பட பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள பெரும் பணக்காரர் களிடம் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.
மாநகராட்சிப் பகுதிகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டு வரி, குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வதற்கு வரி என வரிகள் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றைச் செலுத்தி விடுகிறார்கள். ஆனால், அரசியல் செல்வாக்கு, அதிகார செல்வாக்கு, தனிப்பட்ட செல்வாக்கு உள்ள பலர் வரிகளைச் சரியாகச் செலுத்து வதில்லை. அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ, அல்லது கட்டத் தவறிய வரியைச் செலுத்த வைக்கவோ நிர்வாகத்தில் இருப்பவர்கள் முயற்சி எடுப்பதில்லை. ஆனால், சாமானியர்களில் யாராவது வரி செலுத்தத் தவறிவிட்டால், அவ்வளவுதான்! உடனே அந்தச் சாமானியரின் வீட்டுக்குச் சென்று, வாசலில் நின்று அவர்களை இழிவாகத் திட்டுவார்கள், அவர்களின் வீட்டுக்கான குடிநீர் இணைப்பைத் துண்டிப்பார்கள். 

மதுரையில் மாநகராட்சிக்குச் சொத்து வரி செலுத்தாமல் பல வருடங்களாக ஏமாற்றி வருபவர்களின் பெயர் பட்டியலைக் கண்டு, மதுரை மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யாரும் சாமானியர்கள் இல்லை; மாவட்டத்தையே ஆட்சி செய்யும் கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் என பணபலம் மற்றும் அதிகார பலம் கொண்டவர்களும், சமூகப்பொறுப்பு மிக்கவர்களும்தான். இப்படிப்பட்டவர்கள், சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றுவது மிகப்பெரும் அக்கிரமம். 

சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றி வருபவர்களின் பெயர்ப் பட்டியலை, மதுரை மாநகராட்சி தன் இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது. அதில், முதல் 100 பேர் செலுத்த வேண்டிய வரி பாக்கி மட்டுமே ரூ. 47,64,45,282 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த விவகார மாக இருந்தாலும், அதைச் சாமர்த்தியமாகக் கையாளும் மாநகராட்சி நிர்வாகம், இந்தப் பட்டியல் மூலம் இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறது. இதற்குக் காரணம், சாலை அமைப்பது தொடர்பான ஒரு விவகாரம்தான். 
சாலைகள் சீரமைப்பு மற்றும் கட்டட விதிமீறல்கள் தடுப்பு ஆகியவை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை கோ.புதூரைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அக்டோபர் 20-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியம் செய்தனர். அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுந்தரராஜ் தொடர்ந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 2-ம் தேதி மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ‘‘சாலைகளைச் சீரமைக்க மதுரை மாநகராட்சியில் போதிய நிதி இல்லை. சொத்து வரி நிலுவைத்தொகை 168.92 கோடி உள்ளது’’ என்று அவர் தெரி வித்தார். அதையடுத்து, “மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் அனுப்புங்கள். வர்த்தக நிறுவனங்கள் இரண்டு வாரங்களிலும், குடியிருப்புகள் நான்கு வாரங்களிலும் சொத்து வரி செலுத்தத் தவறும்பட்சத்தில், சீல் வைத்து நடவடிக்கை எடுங்கள்’ என மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்தான், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள முதல் 100 நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. அது பற்றிய விவரங்களை எடுத்து உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியவர், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் நெல்பேட்டை ஹக்கீம்.  “சாமானிய மக்கள் சில ஆயிரங்கள் வரி பாக்கி வைத்திருந்தால், அவர்கள்மீது மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், மதுரையில் தனியார் கல்வி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வரி செலுத்தாதவர்களின் பட்டியலில் உள்ளன. சுந்தரராஜ் தாக்கல் செய்த மாநகராட்சிக்கு எதிரான வழக்கில், ‘ரூ. 168.92 கோடி வரி நிலுவை உள்ளது. அதனால், மாநகராட்சியில் நிதி இல்லை’ என்று மாநகராட்சி ஆணையாளர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
அப்போதுதான், மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரி செலுத்தாதோர் பட்டியலை எடுத்து நீதி மன்றத்துக்கு அனுப்பினேன். இதை வசூலிக்க என்ன தடை? இதை வசூலித்தாலே மக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தாமல் பல திட்டங்களைச் செயல்படுத்தலாம். 1975 முதல் தற்போது வரை, சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 10 நிறுவனங்கள், ரூ.18 கோடி பாக்கி வைத்துள்ளன. நான் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பார்வைக்கு மாநகராட்சியே வெளியிட்டவைதான்.
வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டவுடன், அந்தப் பட்டியலில் உள்ளவர்களைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி குறுக்கு வழியில் செயல்படுகிறது. பழைய பட்டியலை மாற்றி, வேறு நபர்களை வரி செலுத்தாத முதல் 100 பேர் பட்டியலில் வைத்து, உயர் நீதிமன்றத்தை ஏமாற்றி அவமதிக்கும் செயலில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களுக்குச் சலுகை காட்டியதன் மூலம், மாநகராட்சி அதிகாரிகள் அந்தத் தனியார் நிறுவனங்களிடம் சலுகை பெற்றதுபோல தெரிகிறது. அது தொடர்பாக, ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்ய வேண்டும். அவர்கள் எதை மாற்றினாலும், இணையத்தில் வெளியிட்ட பட்டியலை மறைக்க முடியாது. இதை நாங்கள் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம்’’ என்றார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகரைச் சந்தித்தோம். “இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, வசூல் செய்வதில் புதிய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. பாக்கி மற்றும் வீடு விரிவாக்கம் போன்ற காரணத்தால் கட்ட வேண்டிய வரித்தொகை அதிகரித்துள்ளது. வரி வசூல் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகுதான், அதன் விவரங்களை முழுமையாக வெளியிட்டோம் இதில் ஒளிவு மறைவு இல்லை. அரசுக்குமுன் எல்லோரும் சமம் தான். கட்ட வேண்டிய நிலுவைத்தொகையை அனைவரும் கட்ட வேண்டும். தொகையின் அளவு போன்ற பிரச்னைகள் ஏதாவது வரி பாக்கியைச் செலுத்த வேண்டியவர்களுக்கு இருந்தால், அதை மாநகராட்சிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் அப்போதுதான், அதை விரைவாகச் சரிசெய்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க ஏதுவாக இருக்கும்” என்று ‘அக்கறை’யுடன் சொன்னார் மாநகராட்சி ஆணையர்.

ஓஹோ! 

- செ.சல்மான், சே.சின்னதுரை 

படம்: வி.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment