Monday, February 12, 2018

"விருதுபெற்ற கோயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதா?”

‘‘கோயில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டி லிருந்து பிடுங்குவதற்கு, மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். இதற்குப் பின்னால் பெரிய அரசியல் உள்ளது’’ என்று சொல்லிவருகிறார், வரலாற்று ஆய்வாளரும் சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளருமான  சு.வெங்கடேசன். அவரிடம், ‘‘இந்து அமைப்புகள் கோயில்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்பது குறித்து தங்கள் விமர்சனம் என்ன?’’ என்றோம். 

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போல் தோன்றும். ஆனால், ‘திராவிட அறநிலையத் துறையின் வசமிருந்து கோயில்களை மீட்க வேண்டும்’ என்று ஹெச்.ராஜா, ராமகோபாலன் போன்றவர்கள் கூறுகிறார்கள். ‘திராவிட அறநிலையத் துறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் வன்மம் தெரிகிறது. இப்படியொரு விபத்துக்காகக் காத்திருந்தது போல் உள்ளது அவர்களின் பேச்சு. ‘அறநிலையத் துறையைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும்’ என்று அரசை வலியுறுத்துவதை விட்டு, ‘அரசே வெளியேறு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்கிறார்கள்.
ஆன்மிகத் தலங்களைத் தங்கள் அரசியல் தலங்களாக மாற்ற இந்துத்வா சக்திகள் முயற்சி செய்கின்றன. சில பிரபலங்கள்கூட, ‘கோயில்களை உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. மதுரை ஆதீனத்தின் கட்டுப் பாட்டில் மீனாட்சியம்மன் கோயில் இருந்தபோது எண்ணற்ற முறைகேடுகளும், நிர்வாகச் சீர்கேடு களும் நடைபெற்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் மதுரை கலெக்டராக இருந்த பிளாக்பெர்ன், கோயிலை ஆதீனத்திடமிருந்து மீட்டுச் சிறப்பான புதிய நிர்வாகத்தை உருவாக்கினார். அதன்பிறகு கோயில் சொத்துகள் முறையாகப் பாதுகாக்கப் பட்டன. அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பிளாக்பெர்ன் பெயரில் மதுரை மக்களின் ஆதரவுடன் ஒரு விளக்குத்தூண் அமைக்கப்பட்டு, அதற்கான எண்ணெயை மீனாட்சியம்மன் கோயி லிலிருந்து பல ஆண்டுகள் கொடுத்திருக்கிறார்கள். 

கோயிலின் நிர்வாகக் குறைபாடுதான் இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறுபவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் கோயில் நிர்வாகத்தின் செயல் பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. கடந்த ஆண்டு தூய்மைக்கான தேசிய விருதை மத்திய அரசு இந்தக் கோயிலுக்கு வழங்கியது. அப்படியென்றால், இவர்கள் ஆதரிக்கும் மத்திய அரசுமீது குறை சொல்கிறார்களா? இதே விருது 2016-ம் ஆண்டு திருப்பதி கோயிலுக்கு வழங்கப்பட்டது. அதோடு ஒப்பிடும்போது மீனாட்சியம்மன் கோயிலின் வருமானம் மிகவும் குறைவு.

முன்பு பொற்றாமரைக் குளத்தில் நீரைத் தேக்கத் தெரியாமல், டைல்ஸ் பதித்துத் தேக்கி வைத்திருந்தனர். ஆனால், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆலோசனையில் களிமண்ணை அடியில் வைத்து, எப்போதும் குளத்தில் நீர் வற்றாத வகையில் இப்போது செய்துள்ளார்கள். கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தற்காலிகத் தடுப்புகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப் படுகினறன. இது கோயிலின் தரையையோ சுவரையோ சேதப்படுத்தாது. ‘இதேபோல் அமையுங்கள்’ என்று மற்ற கோயில்களுக்கும் கூறியுள்ளது அறநிலையத் துறை. மீனாட்சி மற்றும் சொக்கநாதர் கருவறைகளில் காற்றோட்ட வசதி இல்லாமல், பக்தர்கள் அவதிப்படக்கூடாது என அப்பகுதியில் குளிர்சாதன வசதியைச் செய்துள்ளனர். இப்படி கோயில் நிர்வாகம் சிறப்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது’’ என்றார்.
மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் பேசினோம். ‘‘நடந்த தீ விபத்து அனைவருக்கும் கவலையை அளிக்கிறது. தீ பெரிய அளவில் பரவிவிடாமல் தடுக்க அனை வரும் பணியாற்றினார்கள். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்போம். கோயிலை வைத்து வருமானம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் நான் வரவில்லை; அதற்கான தேவையும் இல்லை. என்னால் முடிந்த அளவு கோயிலுக்கும் இங்கு வருகிற பக்தர்களுக்கும் நன்மைகளைச் செய்து வருகிறேன். 
பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதால், கோயிலுக்குள் அமைந்திருக்கும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென்று அறநிலையத் துறைக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளோம். அதற்குச் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். நான் தக்காராகப் பொறுப்புக்கு வந்தபோது, கோயில் சொத்துகளைச் சிலர் இஷ்டத்துக்கு அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். நீதிமன்ற உத்தரவு மூலம் அதை மாற்றினோம். அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தோம். சிலர், கோயிலுக்குள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெளியேற்றினோம். இதனால் பாதிக்கப் பட்டவர்கள் அவ்வப்போது கோயில் நிர்வாகத்துக்கு எதிராக அவதூறு கிளப்பிக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக, கோயிலில் பிரசாதக்கடை நடத்தியவர்கள் ஆண்டுதோறும் 25 லட்சம் ரூபாய்க்கே டெண்டர் எடுத்தனர். பிரசாதக் கடையைக் கோயில் நிர்வாகமே எடுத்து நடத்தியபோது, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் வந்தது. இப்படியெல்லாம் செய்தால் சிலருக்குக் கோபம் வருவது இயற்கைதான். கோயிலுக்கு வருகிற வருவாய், தனிநபர்களுக்குச் செல்லக் கூடாது என்பதுதான் என் எண்ணம். மீனாட்சியம்மன் கோயில் வருவாயின் மூலம் அதன் உபகோயில்களுக்குச் செலவு செய்கிறோம். பள்ளிக்கூடம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துகிறோம். அம்மன் சந்நிதிக்கு தங்கக்கூரை அமைத்தோம், தங்கக் கொடி மரமும் அமைத்தோம். அதுபோல, சித்திரை வீதியில் பெரும் முயற்சி எடுத்துப் போக்குவரத்தை நிறுத்தினோம். அரசியல் செய்ய இந்தத் தீ விபத்தைப் பயன்படுத்த வேண்டாம். சேதமான பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும். மீனாட்சியம்மன் கோயில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும்’’ என்றார் கருமுத்து கண்ணன். 

- செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment