Sunday, February 18, 2018

எம்.ஜி.ஆர் பேரைச் சொல்லி ஏப்பம்?

பதில் சொல்லத் தேவையில்லை என்கிறார் அமைச்சர்
மிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் குறித்து இத்தனை நாள்களாக எழுந்த அத்தனை சர்ச்சைகளையும் அடித்துச் சாய்க்கும் அளவுக்குப் புறப்பட்டிருக்கிறது ஒரு புதிய சர்ச்சை. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் எந்தப் பணத்தில் நடக்கின்றன, யார் நடத்து கிறார்கள்...’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டதற்குக் கிடைத்துள்ள பதிலில் முளைத்துள்ள இந்த சர்ச்சை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது அ.தி.மு.க அரசு. கந்துவட்டிக் கொடுமையால் நெல்லையில் இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்தபோதும், ஒகி புயலில் கன்னியாகுமரி மக்கள் சிக்கித் தவித்தபோதும், கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையை மறைத்து அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் விபத்தில் சிக்கி ரகு என்ற இளைஞர் பலியானபோதும், அ.தி.மு.க அரசுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்தான் முக்கியமாக இருந்தது.  ‘‘இதையெல்லாம் எம்.ஜி.ஆரைக் கொண்டா டுவதற்காக செய்தார்களா அல்லது 
எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதற்காகச் செய்தார்களா என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்றுள்ளார்.
என்ன நடந்தது என லோகநாதனிடம் கேட்டோம். ‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாகவே நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்தான், அந்த விழாவுக்குப் பொறுப்பேற்றார்கள். பல அமைச்சர்கள் கூட்டமாக வந்து பூஜை போட்டு, பந்தக்கால் நட்டு, விழா ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பல நூறு பேர் இணைந்து அலங்காரப் பந்தல் அமைத்தார்கள். தரையைச் சீரமைக்க பல நூறு லோடு மணல் கொட்டினார்கள். அலங்கார வளைவுகள், ஃப்ளெக்ஸ் என நகரையே திக்குமுக்காட வைத்தார்கள். அத்தனை துறை அதிகாரிகளும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இதே வேலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையே திரண்டு விழாவுக்கு வந்தது. ஆனால், ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டதற்கு ‘மாவட்ட நிர்வாகம் சார்பாக எந்தத் தொகையும் செலவிடப்படவில்லை’ என்று பல மாவட்டங்களில் பதில் தந்துள்ளனர்’’ என்று திகைப்பூட்டிய லோகநாதன் தொடர்ந்தார்.  
 
‘‘நான் கேட்ட கேள்விகள் நான்கு.

1. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற இடம் அரசுக்குச் சொந்தமானதா அல்லது தனியாருக்குச் சொந்தமானதா? தனியாருக்குச் சொந்தமெனில் அதன் உரிமையாளர் விவரம் தரவும்.  

2. விழாவுக்காகப் பல்வேறு வகைகளில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? 

3. மாவட்ட நிர்வாகத்தால் செலவழிக்கப்பட்ட தொகை, எதிலிருந்து எடுக்கப்பட்டது? விழாவுக்காகத் தமிழக அரசு பணம் ஒதுக்கியதா? ‘ஆம்’ எனில் எவ்வளவு? 

4. விழாவில் முதலமைச்சர் அறிவித்த புதிய திட்டங்கள் குறித்த விவரங்களின் நகல்.  
முதல் கேள்விக்கு மட்டும் எல்லா மாவட்டங்களி லிருந்தும் பக்காவாக பதில் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு மற்றும் மூன்றாம் கேள்விகளுக்குப் பயங்கர சுத்தலில் விட்டுவிட்டார்கள். சில மாவட்ட ஆட்சியர்கள் இந்தக் கேள்வியைச் செய்தி மக்கள்தொடர்புத் துறைக்கு ஃபார்வேர்டு செய்தார்கள். சிலர் வட்டாட்சியருக்கும், சிலர் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறைக்கும், சிலர் நகராட்சி அலுவலகத்துக்கும் என்று யார் யாருக்கோ ஃபார்வேர்டு செய்து மண்டையைக் குழப்பினார்கள். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் செய்ததுதான் பயங்கரக் கூத்து. தீயணைப்புத் துறையில் ஆரம்பித்து பொதுப்பணித் துறை வரைக்கும் மாவட்டத்தில் உள்ள அத்தனை துறைகளுக்கும் என்னுடைய ஆர்.டி.ஐ  மனுவை ஃபார்வேர்டு செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குத் தீயணைப்புத் துறையா செலவு செய்யும்?

பெரம்பலூரிலும், அரியலூரிலும், ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எந்தத் தொகையும் ஒதுக்கப்படவில்லை’ என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள். கரூரிலும், திருப்பூரிலும் ‘இது தொடர்பாக எந்தத் தகவலும் இந்த அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை’ என்று பதில் தந்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் கூட உருப்படியான பதில் இல்லை. என்ன தந்திரம் இது? யாரும் செலவு செய்யாமலேயே விழா எப்படி நடந்தது? மாவட்ட நிர்வாகம் சார்பாக விழா நடத்தப்படும்போது, அந்தத் தகவல்கள் அந்தந்த மாவட்டங்களில்தானே பராமரிக்கப்பட வேண்டும்? ‘விழாவை நடத்தியது நாங்கள்தான். ஆனால், செலவை நாங்கள் செய்யவில்லை’ என்பது, ‘குழந்தை என்னுடையதுதான். ஆனால், நான் பெற்றெடுக்கவில்லை’ என்று சொல்வதைப்போல இருக்கிறது.
இதே கேள்வியை செய்தித்துறை யிடமும் ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தேன், அவர்கள் கொடுத்த தகவல் இன்னும் ஷாக். ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெறும் 25 லட்ச ரூபாய் மட்டும்தான் செலவு செய்தார்களா? இது பந்தல் அமைக்கக்கூட போதுமானதாக இருந்திருக்காது. இந்த விழாக்களில் பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து பல பணிகளையும் அமைச்சர்களுக்கு வேண்டப்பட்ட ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளிடம் மொத்தமாக பேக்கேஜ் பேசி, அதில் கமிஷன் அடித்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் மழுப்புவதைப் பார்த்தால் சந்தேகம் வலுக்கிறது. மொத்தமாக செலவு செய்திருக்கும் பட்சத்தில், அதற்காக முறைப்படி டெண்டர் விட்டார்களா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேர்மையாகக் கொண்டாடப்பட்டிருந்தால், செலவழித்த தொகை பற்றிய தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதிலிருந்து ஆளும்கட்சி சார்பாக நடத்தப்பட்ட கட்சி நிகழ்ச்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். உற்று கவனித்துப் பாருங்கள்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தவை, பெரும்பாலும் அரசு விழாக்கள்தான்.  இறைக்கப்பட்டது அத்தனையும் மக்களுடைய பணம்தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகச் செலவு செய்யப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதைத் தமிழக அரசு வெளிப்படை யாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அது மக்களுடைய வரிப்பணம்’’ என்றார் லோகநாதன் ஆதங்கத்தோடு.
இது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நல்லபடியாதான் நடத்தி முடிச்சிருக்கோம். அதிலென்ன குறை? யார் செலவு செஞ்சாங்கனு எல்லாம் உங்ககிட்ட சொல்லத் தேவையில்லை’’ என்று கோபமாகச் சொன்ன அமைச்சர், படக்கென்று இணைப்பைத் துண்டித்தார்.

மக்களுக்காவது அதைச் சொல்வீர்களா அமைச்சரே?

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய், க.விக்னேஷ்வரன்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment