Friday, February 09, 2018

கழுகார் பதில்கள்!

லஞ்சத்தையும் ஊழலையும் கமல், ரஜினியால் ஒழிக்க முடியுமா?

ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமன விஷயத்தில் முதலில் ஊழலை ஒழிக்க முடியுமா?
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
அரசியலில் தான் சீனியர் என்றும் ரஜினியும் கமலும் ஜூனியர் என்றும் விஜயகாந்த் கூறுவது பற்றி?

கல்லூரியில் மட்டும்தான் சீனியர்களுக்கு மரியாதை. மற்ற இடங்களில் இல்லை என்பதை யாராவது கேப்டனுக்குச் சொல்லவும்!
எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

அ.தி.மு.க-வினர் எப்படி நடந்துகொண்டாலும்  அவர் களைத் தட்டிக்கேட்பதற்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இல்லை என்பது, அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டதா?


 ‘பணத்தாலும்’ தட்டலாம் அல்லவா? அதனால், அவர்கள் அடங்கித்தான் இருக்கிறார்கள்!

தீ.அசோகன், திருவொற்றியூர்.

‘பஸ் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு சொல்கிறாரே?


பஸ்ஸில் பயணம் செய்யாதவர்கள் அனைவரும் இப்படித்தான் சொல்வார்கள்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).


‘எங்கள் ஆட்சியைக் கலைக்கவோ, கவிழ்க்கவோ முடியாது’ என்று அமைச்சர்கள் சொல்கிறார்களே?


 அவர்கள் உண்மை தெரியாமல் பேசுகிறார்கள். காவிரிப் பிரச்னையில் மத்திய அரசை விமர்சித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்துச் சொல்லியிருக்கிறார். ‘‘தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை’’ என்று துணை முதல்வர்.பன்னீர்செல்வம் சொல்கிறார். தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை. இவை அனைத்துமே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான விரிசலைக் காட்டுகின்றன. இந்த பயத்தில்தான் அமைச்சர்கள் இப்படிப் புலம்புகிறார்கள்போல!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.


‘திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகத்தில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது’ என மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறாரே?


தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என்று கூறுகிறாரோ?

எஸ்.காந்தி தியாகராஜன், சின்னசொக்கிக்குளம்.

சென்னை புத்தகக்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையானது குறித்து..?


புத்தகங்களின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் பெருகிவருவதை இது காட்டுகிறது. குறிப்பிடத்தகுந்த அரசியல் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. இந்தியாவின் இருண்ட காலம் - சசி தரூர்; இந்திய அரசியலமைப்பு - ஆலடி அருணா; இந்தியா என்கிற கருத்தாக்கம் - சுனில் கில்நானி; இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள் - ஜெயரஞ்சன்; தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் - நொபொரு கராஷிமா; சமூக நீதி - க.நெடுஞ்செழியன்; தை எழுச்சி: குடிமைச் சமூகமும் அதிகார அரசியலும் - செ.சண்முகசுந்தரம், இர.இரா, தமிழ்க்கனல், யமுனா ராஜேந்திரன்; அம்பேத்கர் அன்றும் இன்றும்; நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் - பெரியார் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்க வரவுகள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.


இன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்டம்தோறும் ஆய்வு செய்வதை அ.தி.மு.க-வினரே கண்டுகொள்ளாதிருக்கும் போது, தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவிக்கிறார்களே?


பொதுவாக அ.தி.மு.க-வினர் இந்த மாதிரியான விஷயங்களை சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை. ‘‘கவர்னர் தனது கடமையைத்தான் செய்கிறார்’’ என்று அமைச்சர்களே சொல்கிறார் கள். தி.மு.க பதறுவதற்குக் காரணம், நாளை அவர்களும் இந்தச் சிக்கலை அனுபவிக்க வேண்டும் என்பதால் இருக்கலாம்!
சம்பத்குமாரி, பொன்மலை.
‘ஜெயலலிதா எப்போதும் தமிழக நலனை விட்டுக் கொடுத்ததில்லை’ என்று கனிமொழி இப்போது சொல்கிறாரே. எதனால்?


கருணாநிதி இதையெல்லாம் கேட்கவோ, படிக்கவோ மாட்டார் என்ற தைரியத்தில்தான்!
பாரதி முருகன், மணலூர்பேட்டை.

 நடிகை பாவனா திருமணம்?


கடந்த கால கசப்புகளை மறந்து இனியாவது அவர் நிம்மதியாக வாழட்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் நவீனை காதலித்து வந்தார் பாவனா. இதற்கிடையில்தான் அவருக்குச் சிக்கல் மேல் சிக்கல் வந்தது. ‘இந்தக் கல்யாணம் நடக்காது’ என்றும் சிலர் செய்தி பரப்பினார்கள். ஆனால், நவீன் தனது காதலில் உறுதியாக இருந்தார். ‘‘கல்யாணத்துக்குப் பிறகு அவர் நடிக்கமாட்டார்’’ என்று செய்தி கிளப்பினார்கள். ஆனால், ‘‘தொடர்ந்து நடிப்பேன், என் கணவரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்’’ என்று சொல்லியிருக்கிறார் பாவனா. எல்லா துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி அவர் மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்து வருகிறார். அதனால்தான் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா, ‘பாவனா சக்தி வாய்ந்தவர், தைரியசாலி’ என்று பாராட்டியுள்ளார். வாழ்வில் துயரங்களைச் சந்திப்பவர்கள், அவற்றிலிருந்து கடந்துவர பாவனா போல சக்தி பெற வேண்டும்.
கே.குணசீலன், கரூர்.
சமீபத்தில் உங்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்?


முன்பெல்லாம் எங்காவது காட்டுப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவதைக் கண்டுபிடித்து போலீஸார் அழிப்பார்கள். ஆனால், ‘இன்றைய சூழலில் கஞ்சா பயிரிடுவதற்குக் காட்டுக்குப் போகத் தேவையில்லை’ என்பதை உணர்த்தியுள்ளன இரண்டு சம்பவங்கள். சென்னை ராயப்பேட்டையில் பிஸியான சாலையில் இருக்கும் தன் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்திருக்கிறார் கமல் என்பவர். இவரை போலீஸ் பொறி வைத்தெல்லாம் பிடிக்கவில்லை. தன் சாகசச் செயலை சசிகுமார் என்ற நண்பரை அழைத்து கமல் காட்டியிருக்கிறார். சசிகுமார் அந்தக் கஞ்சா செடிகளுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட, இருவரும் இப்போது சிக்கியிருக்கிறார்கள். 

இவராவது பரவாயில்லை. காஞ்சிபுரத்தில் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் வளாகத்தை ஒட்டிய குப்பை கொட்டும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்திருக்கிறார் மூர்த்தி என்பவர். கோயிலில் எடுபிடி வேலைகள் செய்பவர் என்பதால், அவரது குற்றச்செயல் யார் கண்ணிலும் படவில்லை. ஏதோ மூலிகைச் செடி வளர்க்கிறார் போல என நினைத்துவிட்டார்கள். நண்பர் ஒருவர் கஞ்சா கேட்டு மூர்த்தி கொடுக்காததால், அந்த நண்பர் போலீஸில் போட்டுக் கொடுத்து விட்டார்.
வேண்டாதவர்களைக் கஞ்சா வைத்து கைதுசெய்வதில் கைதேர்ந்தவர்களான தமிழக போலீஸாருக்கு, இதையெல்லாம் கண்டறிவதைத் தாண்டிய வேறு பல வேலைகள் இருக்கின்றன போல!

வீரலட்சுமி, 
(தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர்)


ஆயிரம் ரூபாய் திருடினால்கூட கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கும் தமிழக கிராமத்து மக்கள், கோடிக்கணக்கில் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்டாடித் தீர்க்கிறார்களே?’’
அவர்கள்தான் ரூ.2,000, ரூ.4,000, ரூ.6,000 என மக்களுக்கும் கொடுத்து, கூட்டு சேர்த்துக் கொள்கிறார்களே!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:  
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment