Monday, February 12, 2018

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா?

த்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஸ்டார் அந்தஸ்து பெறுவது, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமை. மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை அழுத்திவரும் நிலையில், ‘இனி மருத்துவத்தை அரசியல்வாதிகள் புறக்கணிக்க முடியாது’ என்ற உண்மையை மத்திய அரசு உணர்ந்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின்  கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டின் பிரதான திட்டங்களில் ஒன்று, நாடு முழுக்க 10 கோடி குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு பெறும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம். ‘‘50 கோடிப் பேர் பயன்பெறப் போகும் உலகின் மிகப் பிரமாண்டமான காப்பீட்டுத் திட்டம் இது’’ என்று பெருமிதமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அருண் ஜெட்லி. 

காந்தி ஜயந்தியான அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தத் திட்டத்தில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு செய்யப்படும். இதற்கான பிரீமியத்தில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும். 

ஏற்கெனவே தமிழகத்தில் ஒரு காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இதை வேறுசில மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைச் சேவைகளிலிருந்து ஒதுங்கி, அரசுகள் வெறும் கண்காணிப்பாளராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற உலக வங்கியின் செயல் திட்டம் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. `போதிய நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாகக் குளறு படிகளை நீக்கி, அரசு மருத்துவமனைகளைச் சிறப் பாக நிர்வகிக்க வேண்டிய மத்திய - மாநில அரசு கள், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுப் பதற்காகவே இதுபோன்ற பிரமாண்ட காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

‘‘மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்தக் காப் பீட்டுத் திட்டமே ஒரு மோசடி. `10 கோடி குடும் பங்களுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு’ என்று அறி வித்துவிட்டு, வெறும் 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது செயல் படும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் காப்பீடு செய்யப்படுகிறது. அதற்காக, மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 700 ரூபாய் பிரீமியம் செலுத்துகிறது. இந்தாண்டு முதல் இந்தத் தொகை அதிகரிக்கும் என்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், 5 லட்ச ரூபாய்க்கு ஒரு குடும்பத்துக்கு 2,000 ரூபாயாவது பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால், 10 கோடி குடும்பங்களுக்குப் பிரீமியம் கட்ட 20,000 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த நிதி எங்கிருந்து வரும்? மருத்துவத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை 54,667 கோடி ரூபாய். அதில் 20,000 கோடியைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் வாரிக் கொடுக்கத்தான் இந்தத் திட்டமா? 
20,000 கோடி ரூபாயில் 20 எய்ம்ஸ் மருத்துவ மனைகளை உருவாக்கிவிட முடியும். இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு களையும் வசதிகளையும் சரிசெய்தாலே மக்க ளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் கிடைத்து விடும். ஆனால், மத்திய அரசு மருத்துவத்தைத் தனியார்மயமாக்குவதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளிலேயே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தோல்வியைத் தழுவி யிருக்கிறது. இந்திய மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் செயல் இது’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத். 

அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு அந்த நாட்டுக்  காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்காவின் மொத்த மருத்துவமும் காப்பீட்டு நிறுவனங் களின் பிடிக்குள் உள்ளது. ஆனால், அடித்தட்டு ஏழை மக்களால் ஒவ்வோராண்டும் பிரீமியம் செலுத்தித் தாக்குப் பிடிக்க முடியவில்லை. `காப்பீடு இருந்தால் மட்டுமே சிகிச்சை பெற முடியும்’ என்ற நிலையில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் தவித்தார்கள். அதிபராக இருந்த ஒபாமா தன் ஆட்சிக்காலத்தின் இறுதியில், `ஒபாமாகேர்’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். பணம் படைத்தவர் களிடம் சிறப்பு வரி வசூலித்து, அடித்தட்டு ஏழை மக்க ளுக்கு அரசே பிரீமியம் செலுத்துவதோடு, காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையிலான அந்தச் சட்டம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அதிபர் ட்ரம்ப் அந்தச் சட்டத்தை, `செல்லாது’ என்று தற்போது அறிவித்துள்ளார். அந்த அளவுக்கு அமெரிக்க அரசியல் கொள்கை முடிவுகளில் காப்பீட்டு நிறுவனங்க ளின் ஆதிக்கம் தொடர்கிறது. அப்படியொரு நிலையை இந்தியாவில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கும் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
``உணவு, மருந்து... என எல்லா வணிகத் துக்கும் இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தை. இந்தச் சந்தையை ஆட்கொள்ள உலகம் முழுவதும் பலத்த போட்டி நிலவுகிறது. மருத்துவத்தைத் தனியார் மயமாக்கும் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே தொடங்கிவிட்டன. அரசு மருத்துவ மனைகள் திட்டமிட்டுக் கைவிடப்பட்டன. மருத்துவத் துறைக்குப் போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்தார்கள். உலக அளவில் மிகக்குறைவாக மருத்துவத் துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் 190 நாடுகளின் பட்டியலில் இந்தியா 16-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கைகூட நம்மைவிடச் சிறப்பாகச் செயல்படு கின்றன. 

நலிவடைந்த அரசு மருத்துவமனை களையும், ஆரம்ப சுகாதார மையங்களையும் தனியாருக்கு வழங்கும் திட்டம் ஒன்றை ஓராண்டுக்கு முன்னர் கொண்டு வந்தார்கள். `இந்த மருத்துவமனைகளை மேம்படுத்த போதிய நிதியை மாநில அரசே தனியா ருக்குத் தர வேண்டும்’ என்றும், `அப்படிக் கொடுத்தால்தான் மத்தியிலிருந்து சுகாதாரத்துக்கான நிதி மாநிலங்களுக்கு வழங்கப் படும்’ என்றும் மிரட்டினார்கள். அவர்களது தொலைநோக்குத் திட்டம் இப்போது செயலுக்கு வந்திருக்கிறது. தம் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பூனையைத் திறந்து விட்டிருக்கிறார்கள். இது, தனியார் மருத்துவமனைகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் லாபத்துடன் இயங்கச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தமிழக அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காப்பீட்டுத் திட்டத்தின் பேரில் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொடுத்திருப்பது 2,700 கோடி ரூபாய். இதில் சகல வசதிகளுடன் 10 அரசு மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம். இந்தப் படிப்பினையை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்திவிட்டு, நிறைவாக நிதி ஒதுக்கி, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்” என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.காசி.

உலக அளவில் தம் மக்களை மருத்துவ உதவிக்காக அலையவிடும் நாடுகளில் இந்தியாதான் முதன்மை வகிக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாதது, நிர்வாகக் குளறுபடி, ஊழல், அக்கறை யின்மை காரணமாக அரசு மருத்துவமனைகளை வெறுத்து நடுத்தர மக்கள் தனியார் மருத்துவ மனைகளை நாடுகிறார்கள். இந்தியாவில் சுமார் 78 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்து வாழப் பழகிவிட்டார்கள். ‘வசதியற்றவர் களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனை’ என்ற நிலையை அரசே உருவாக்கிவிட்டது.அதன் வெளிப்பாடுதான் காப்பீட்டுத் திட்டங்கள். இப்போது 100 சதவிகிதம் பேரையும் தனியார் மருத்துவமனைகள் பக்கம் திருப்பிவிடும் யுத்தியே இந்த மெகா காப்பீட்டுத் திட்டம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
“காப்பீட்டுத் திட்டங்கள் பல நாடுகளில் தோல்வியைத் தழுவியி ருக்கின்றன. இந்தியா போன்ற, அதிக ஏழைகள் வாழும் நாட்டுக்கு காப்பீட்டுத் திட்டம் சிறிதும் பொருந்தாது. இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கும் தொகையை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஒதுக்கலாம். தற்போது தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் ஒவ்வொரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் தமிழக அரசு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. அதுபோல, அரசு மருத்துவ மனைகளில் தற்போதைக்குச் செய்ய வாய்ப்பில்லாத பெரிய சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்யலாம். ஆனால் சாதாரண பிரச்னைகளுக் கெல்லாம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி னால், அரசு மருத்துவமனைகளில் என்ன சேவை நடக்கும்? இணைப்பு என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை மூடுவதைப்போல, ஒரு கட்டத்தில், அரசு மருத்துவமனைகளும் மூடப்படலாம். அதுதான் காப்பீட்டுத் திட்டத்தின் பின்னுள்ள நோக்கம்” என்கிறார், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். 

பி.ஜே.பி-யின் மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதியிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் வசிக்கும் சரிபாதி மக்கள் சிறப்பான மருத்துவ வசதி பெறுவதற்கு என வந்திருக்கும் ஆக்கபூர்வமான திட்டம் இது. நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கலாம். மொத்தமாக இந்தத் திட்டத்தைக் குறைகூறுவது உள்நோக்கம் கொண்டது. ஏற்கெனவே, மாநில அரசு காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அது நன்றாகத்தான் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது வேறு விஷயம். இதோடு அதை சம்பந்தப்படுத்திப் பார்க்கத் தேவையில்லை. மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்களின் சுகாதாரத் தேவையில் மத்திய அரசு மிகவும் அக்கறையோடுதான் இருக்கிறது’’ என்கிறார் அவர். 

மத்திய அரசின் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசும் பங்களிப்புச் செலுத்த வேண்டுமென்றால், தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் காப்பீட்டுத் திட்டம் என்னவாகும்? இப்படி விடை தெரியாத கேள்விகள் ஏராளம் இருக்கின்றன. 

- வெ.நீலகண்டன்

அநாதையாகிவிட்ட ஆரம்ப சுகாதாரம்!

‘ஒபாமாகேர்’ போல ‘மோடிகேர்’ என அழைக்கப்படும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும், இதில் இருக்கும் பல குறைகளையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘‘மருத்துவ பட்ஜெட்டில் பெரும்தொகை இதற்கே போய்விடும் என்பதால், ஆரம்ப சுகாதாரம் என்ற விஷயம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படும். தற்காப்பு மற்றும் தடுப்பு சிகிச்சைகள் முறையாக இருந்தால், உயிர்க்கொல்லி நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். அதைச் செய்யாமல் உயர்சிகிச்சையை மட்டும் கவனிப்பது என்பது, வேரை மறந்துவிட்டு கிளைகளைப் பராமரிப்பது போன்றது’’ என்கிறார்கள் அவர்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் மட்டுமே இந்தக் காப்பீடு பொருந்தும். ஆனால், இந்தியர்களின் பெரும்பகுதி மருத்துவச் செலவு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவதற்கும், பரிசோதனைகளுக்குமே போகிறது. அந்த விஷயத்தை மருத்துவக் காப்பீடோ, அரசு மருத்துவமனைகளோ கண்டுகொள்வதில்லை. ‘‘சரிசெய்ய வேண்டிய விஷயம் இதுதான்’’ என ஆதங்கத்தோடு சொல்கிறார், பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி.
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment