Monday, February 12, 2018

ரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்!

மிழக அரசியல் களத்தில் நம்பிக்கை தரும் புதிய வரவாகத் தனது அரசியல் பிரவே சத்தை ரஜினி அறிவித்தார். அதற்குப் பாதை போட களமிறங்கியுள்ளது ரஜினி மக்கள் மன்றம். முதல்கட்டமாக, தமிழகம் முழுக்க ஒரு கோடிப் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளனர். அதற்காக, உறுப்பினர் சேர்க்கை படிவங்களுடன் தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வலம் வருகிறார்கள். இதைப் பலர் உற்சாகமாகச் செய்ய, ‘‘தலைமை கொடுத்த முதல் பணியே பெரும் சுமையாக இருக்கிறது’’ என்ற புலம்பலும் கேட்கிறது.

ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்கள் சிலர், ‘‘தலைவருடன் சேர்ந்து போட்டோ எடுத்த தையே பெரும் பாக்கியமா நினைக்கறவங்க நாங்க. அரசியலுக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் பணியை எங்களுக்குக் கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் முயற்சியில், பல மாவட்டத் தலைவர்களிடம் போனில் பேசி ரஜினி உற்சாகப்படுத்துகிறார்.

உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தைத் தலைமையிலிருந்து இ-மெயிலில் அனுப்பியிருந்தார்கள். அதை நாங்கள் பிரின்ட் எடுத்து ஒரு மாவட்டத்துக்கு, குறைந்தது மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் பேரைச் சேர்க்க வேண்டும். அந்த வகையில் திடீரென எங்களுக்கு விண்ணப்பப் படிவம் அச்சிட ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிவிட்டது. சிலர் கடன் வாங்கியும், சிலர் நகைகளை அடகு வைத்தும் இந்தச் செலவைச் சமாளித்துள்ளனர். சென்னை மாநகரத் துக்கு மட்டும் இந்தப் பொறுப்பை ஒரு தயாரிப்பு நிறுவனம் ஏற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். 
முதல்கட்டப் பணியே தலைமைக்கு ஒரு பைசா செலவில்லாமல் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், மன்றப் பொறுப்பாளர்களில் சிலர் இப்போதே எம்.எல்.ஏ ஆகிவிட்ட மாதிரி தங்கள் பகுதிகளில் கழக பாணியில் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து போஸ்டர் அடித்து விளம் பரம் செய்கிறார்கள்  இதெல்லாம் எதில் போய் முடியுமோ?’’ என்றனர்.  

இதுவரை ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்துவந்த மாவட்டத் தலைவர் என்ற பதவி, இனி ரஜினி மக்கள் மன்றத்தில் கிடையாது. திராவிடக் கட்சிகள் போல் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் பதவி உருவாக்கப் பட்டுள்ளது. ரசிகர் மன்றத்தில் மாவட்டத் தலைவராக இருந்தவர்களே மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளனர். மகளிர் அணி, இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு என அணிகளுக்கும் மாவட்டவாரியாக நியமனம் நடந்துவருகிறது. ‘இந்தப் பதவிகளில் இருப்பவர்களுக்குத்தான் தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும்’ என்ற ஒரு செய்தி பரவியதால், இந்தப் பதவிகளைப் பெறுவதற்குப் பெரிய அளவில் திரைமறைவு நடவடிக்கைகளும் நடப்பதுதான் அதிர்ச்சியான செய்தி. 
இதுபற்றி நம்மிடம் பேசிய ரஜினி மன்ற உண்மை விசுவாசிகள், ‘‘ரஜினி ரசிகர் மன்றத்தில் பல்லாண்டு காலம் உண்மையாக உழைத்தவர்கள் யார் யார் என்பது அகில இந்திய ரஜினிகாந்த் மன்றத் தலைவராக இருந்த சத்திய நாராயணாவுக்குத்தான் தெரியும். அவர் ஒதுங்கிய நிலையில், அவருக்குப் பதில் சுதாகரை நியமித்துள்ளார் தலைவர். இவருக்கு மாவட்ட நிலவரங்கள் தெரியாது. எனவே, ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்களாக இப்போது இருப்பவர்கள் யாரைப் பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களுக்கே பெரும்பாலும் பொறுப்பு கிடைக்கிறது. இதனால், சிலர் குறுக்கு வழியில் பதவிகளைப் பெற பேரம் பேசுகிறார்கள். ஆரம்பத்தில் மன்ற பொறுப்பில் இருந்து 15 ஆண்டு காலம் வேறு கட்சிக்கு விலகிப்போன ஒருவர், அவர் மனைவிக்கு மகளிர் அணி மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற ஒரு மாவட்டத் தலைவரிடம் பணம் கொடுத்திருக்கிறார். இதுபோல் ஆங்காங்கே நடக்கின்றன. இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் சில மாவட்டத் தலைவர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். ஒன்றிய, நகர பதவிகளில் இருந்த சிலரும் மாவட்டப் பதவிகள் பெற முனைப்பு காட்டுகிறார்கள். இந்தப் பதவிப் போட்டிகளை வைத்து அவர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை செய்யும் வேலையும் மும்முரமாக நடக்கிறது. இது சம்பந்தமில்லாதவர் களை உறுப்பினர்களாக்குவதில் போய் முடியும். இந்தத் தவறுகளை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படக் கூடும்’’ என எச்சரிக்கிறார்கள். 

- மு.இராகவன்

படம்: கே.ஜெரோம்

வேலூர், திருநெல்வேலியைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல், பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டச் செயலாளர், இணைச்செயலாளர் உள்ளிட்ட 12 நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் தூத்துக்குடி மாவட்டத் தலைவராக இருந்துவந்த ஸ்டாலினுக்கு இப்போது மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரி ஒப்பந்ததாரரான இவர், கடந்த 20 வருடங்களாகவே நாக்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இத்தனை காலமும் ரசிகர் மன்றப் பணிகளை இவரின் உறவினரும் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளருமான டக்லஸ்தான் கவனித்து வந்தார். மாவட்டத்திலேயே இல்லாத ஒரு நபரை, மாவட்டச் செயலாளராக நியமித்திருப்பது மன்றத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

- இ.கார்த்திகேயன் 
படம்: ஏ.சிதம்பரம்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment