Monday, February 12, 2018

மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்!

ட்டை உடைசல் தகர டப்பா பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு, அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சத்தமில்லாமல் புத்தம் புது கார்களில் பவனி வருகிறார்கள். சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என ஆட்சி யாளர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்காக 11 கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. 2017 ஜூன் முதல் டிசம்பர் வரை இப்படி வாங்கப்பட்ட புதிய கார்களைப் பற்றிய விசாரணையில் இறங்கினோம்.
எடப்பாடி அமைச்சரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பு, சபாநாயகர் தனபால் முன்னிலையில்தான் நடைபெற்றது. சில மாதங்களில் தினகரனுடன் எடப்பாடி அணிக்கு உரசல் ஏற்பட, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தார்கள். அப்படி மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். அதன்பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அந்தச் சூழலில், தடை செய்யப்பட்ட குட்கா பான் பொருள்களைச் சட்டசபைக்குள் கொண்டு வந்ததற்காக, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்மீது உரிமைமீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. அதை விசாரித்த உரிமைமீறல் குழுவுக்குத் தலைவர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். 

சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோருக்கு ஏற்கெனவே அரசு சார்பில் கார்கள் தரப்பட்டிருந்த நிலையில், இந்த மூன்று பேருக்கும் புதிய இனோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவருக்கும் வாங்கப்பட்ட இனோவா கார்களின் மொத்த மதிப்பு 58 லட்சத்து 48 ஆயிரத்து 350 ரூபாய்.
‘‘எடப்பாடி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது’’ எனக் கர்ஜித்த ஓ.பன்னீர்செல்வம், ரிவர்ஸ் கியர் போட்டு எடப்பாடியுடன்  கைகுலுக்கித் துணை முதல்வர் ஆனார். ஜெயலலிதா சமாதியில் ஞானோதயம் பெற்று, தர்மயுத்தம் தொடங்கி பல்டியடித்த பன்னீருக்குப் பரிசு தர வேண்டாமா? அவருக்கும் புத்தம் புது இனோவாவை பார்சல் செய்திருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்ற அவரின் ஆதரவாளர் ‘மாஃபா’ கே.பாண்டியராஜனுக்கும் புதிய இனோவா. இந்த இரண்டு கார்களின் விலை 38.93 லட்சம் ரூபாய்.

கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் துறையின் முதன்மைச் செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ் உள்ளார். இவரின் அலுவலகப் பயன்பாட்டுக்காக புதிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. 2013-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உள்துறைச் செயலாளராக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. அவர், சில பிரச்னைகளால் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும், மீண்டும் இவர் உள்துறைச் செயலாளர் ஆனார். இவருக்கு டொயோடா ஆல்டிஸ் கார் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 14.40 லட்சம் ரூபாய். 

கவர்னரின் செயலாளராக ராஜ்பவனில் பல ஆண்டுகள் சேவை செய்து, பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்தவர் ஷீலா ப்ரியா. 2017 டிசம்பரில் இவர், மாநிலத் தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவருக்கு, 17.64 லட்சத்துக்கு புதிய கார் ஒன்றைத் தமிழக அரசு வாங்கிக் கொடுத்திருக்கிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத் தலைவர் ஆகியோருக்கும் புதிய கார்கள் தரப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கும் இனோவா கிரிஸ்டா கார் 17.42 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது. 

இப்படி வாங்கப்பட்ட 11 கார்களின் மொத்த மதிப்பு, ஒரு கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 811 ரூபாய். கேரளாவில், அரசுப் பணத்தில் 49 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடியை சபாநாயகர் வாங்கி அணிந்தார் என மாநிலமே கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டிலோ, எந்தச் சலனமும் இல்லை!  

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

படம்: ரா.ராம்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment