Sunday, February 18, 2018

பினு பின்னிய க்ரைம் சாம்ராஜ்ஜியம்!

பினாமி பார்கள்... மசாஜ் ஸ்பாக்கள்... சினிமா பஞ்சாயத்து...
ரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம் போட்ட தாதா பினு, போலீஸில் சிக்கிய மறுநிமிடமே, ‘‘நான் அவ்வளவு வொர்த் இல்லீங்கய்யா’’ என்று கதறிய வீடியோதான் நாடெங்கும் வலம்வருகிறது. ‘‘என்னை மன்னித்துவிடுங்கள்.திருந்த ஒரு வாய்ப்புக் கொடுங்கள். எனக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது... போலீஸில் சரண்டராகவும் பலமுறை முயற்சி செய்தேன்’’ என்றெல்லாம் பினு அழுதுகொண்டே சொல்கிறார். 

வீடியோவில் கதறும் பினு, உண்மையில் அவ்வளவு அப்பிராணியான ஆள்தானா? சூளைமேடு காவல் எல்லையில் தொடங்கி, போரூர், குன்றத்தூர், பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளில் விசாரித்தால், பினுவால் பாதிக்கப்பட்டவர்களின் கதறல், பதறலாக வந்து விழுகிறது. சரண்டருக்கு முதல்நாள் வரை பினு மீதான பிடிவாரன்ட், புகார்கள், வழக்குகள் என்று அணிவகுத்த ‘க்ரைம் ரேட்’டைப் பார்த்து போலீஸார் அதிர்ந்து கிடந்தது தனிக்கதை.
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு குடும்பம் அது. “அந்தக் குடும்பத்தில் மொத்தம் 11 பேர். அனைவரும் அரசுப் பணியில் இருப்பவர்கள். அவர்களுக்குள் சொத்துப் பிரச்னை வந்தது. 11 பேரில் ஏழு பேர், விவகாரத்தை சட்டரீதியாகத் தீர்த்துக் கொள்ள ஒரு வழக்கறிஞரைப் பார்த்தனர். எஞ்சியிருந்த நான்கு பேர் ஓர் அணியாகி, லோக்கல் கட்சிக்காரரைப் பார்த்தனர். கட்சிக்காரர் கைகாட்டி விட்ட ஆள்தான், இன்று போலீஸில் சரண்டர் ஆகியிருக்கும் தாதா பினு. மொத்தத்தில் மூன்று நாள் மட்டுமே டைம் கொடுத்து, அண்ணன் - தம்பிகள் ஏழு பேரை பல கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள அந்த வீட்டிலிருந்து பினு வெளியேற்றிவிட்டார். இப்போது அவர்கள் வீதியில் நிற்கின்றனர். இதேபோல வெளியில் சொல்லமுடியாத பலர், புகார்களை வைத்துக்கொண்டு, சென்னை புறநகர்ப் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் காத்துக் கிடக்கிறார்கள். பினு திருந்திவிட்டார் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கூடவே, பினு பஞ்சாயத்து செய்து பறித்துக்கொண்ட சொத்துகளை மட்டும் போலீஸார் மீட்டுக்கொடுத்தால்போதும்” என்கின்றனர் பலர்.

போலீஸ் வட்டாரங்களில் சில்லிடும் ஹிஸ்டரியைச் சொல்கிறார்கள். ‘‘சிறுவயதிலேயே சென்னைக்குப் புலம்பெயர்ந்த கோழிக்கோடு அப்பச்சனின் மகன்தான் இந்த பினு. மீசை அரும்பும் முன்பே கத்தியை எடுத்தவர். அடிதடி வழக்குகளில் ‘லாக்கப்’ பார்த்தவர். புறநகர் காவல் மாவட்டத்தில் பினுவின் ஆதிக்கம் இருந்தாலும், சூளைமேடு காவல் நிலையத்தில்தான் பினு என்ற பெயருக்குத் தனி ஹிஸ்டரி ஷீட் (ரவுடிகளின் சரித்திரப் பதிவேடு) போட்டு வைத்துள்ளனர். ‘ஏ ப்ளஸ்’ கேட்டகரியில் வருகிற கொடுங்குற்றவாளி அடை யாளம், பினுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ‘ஏ’ கேட்டகரி தாதா என்றாலே, போலீஸ் கண்காணிப்பில்தான் இருப்பார்கள். பினுவோ, ‘ஏ ப்ளஸ்’ கேட்டகரி தாதா. 25-ஐத் தாண்டிய கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளே பினு நல்லவரா, கெட்டவரா என்பதைச் சொல்லிவிடும். இதுதவிர கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்குகள் தனி.
சென்னை சூளைமேடு நமச்சிவாயம் தெரு என்பது போலீஸ் ரெக்கார்டில் இருக்கும் பினுவின் முகவரி என்றாலும், பினுவுக்கென தனியாக எந்த முகவரியும் இல்லை; குடும்பமும் இல்லை. இளம் வயதிலேயே திருமணம், விவாகரத்து எனக் குடும்ப வாழ்க்கைக்கு டாட்டா காட்டிவிட்டு, சுதந்திரப் பறவையாகவே சுற்றி வந்திருக்கிறார்.

அடிதடி வழக்குகளில் தலையிட்டு, மெல்ல வளர்ச்சி பெற்று கொலை வழக்குகள் வரை வந்து நின்றார். அதுதான் பினுவின் வருமானத்துக்கும் கதவைத் திறந்துவிட்டது. உள்ளூர் குட்டி தாதாக்களுக்கு அடிக்கடி பண உதவி செய்ததால், பினு கூப்பிட்ட குரலுக்கு அவர்கள் ஓடிவந்தனர். அடிதடி, கொலைகளைக் குட்டி தாதாக்கள் கவனிக்க... கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் போன்றவற்றை பினு கவனித்தார்.

பினாமிகளை வைத்து நடத்துகிற டாஸ்மாக் பார்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கும் கார்கள், மசாஜ் ‘ஸ்பா’க்கள் என ஏகப்பட்ட தொழில்கள் பினுவுக்கு உள்ளன. சினிமா ஃபைனான்ஸ் நிர்வாகமும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. சினிமாவுலகப் பஞ்சாயத்துகளிலும் பினுவின் பங்களிப்பு உண்டு. சென்னை சாலிகிராமம் பகுதியில் கடந்த மாதம் ஒரு பஞ்சாயத்தை பினுவே ஸ்பாட்டில் இருந்து முடித்துக் கொடுத்துள்ளார். பஞ்சாயத்தை ‘சிறப்பாக’ பேசி முடிக்க, பினுவுக்கு ஒரு ‘வீடு’ கூலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகளுக்கு, ‘டாக் ரவி’ என்ற தாதாவைத்தான் பினு அனுப்பி வைப்பார். இப்போது, ‘டாக் ரவி’யே பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார். நிறைய பஞ்சாயத்துகள் கைவசம் இருப்பதால், டாக் ரவிக்கே ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்கின்றனர்.

பினுவின் செல்வாக்கு சென்னை மாநகரம், சென்னைப் புறநகர் மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்கள் என்ற அளவில்தான் இருந்தது. சமீபத்தில் அரசியல்வாதி ஒருவருக்குத் தேர்தல் பணியாற்ற இறங்கியபோதுதான், மதுரை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டக் கூலிப்படை லீடர்களின் தொடர்பும் பினுவுக்கு ஏற்பட்டது. ‘பிப்ரவரி 6-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட வந்த பினு, போலீஸில் சிக்கிக் கொண்டதற்கு கோயம்பேடு ராதாகிருஷ்ணன் மற்றும் சி.டி மணி ஆகிய தாதாக்களே காரணம்’ என்ற தகவல் ஒரு பக்கம் இருந்தாலும்... அந்தத் தகவலையே, திரும்பத் திரும்ப அழுத்தமாகப் போலீஸ் சொல்லிக் கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கதறக் கதற பினுவை வீடியோ வில் பேசவைக்கும் திட்டத்தின் பின்னால் ‘அதிகார மையம்’ இருந்ததாகவே சொல்லப்படுகிறது.
பிக் பாக்கெட் அக்யூஸ்ட்டுகளைப் பிடித்தால் கூட, அவர்களின் படங்களை போலீஸார் ரிலீஸ் செய்வதில்லை. ‘மக்களை எச்சரிக்க குறிப்பிட்ட குற்றவாளிகளின் படம் வேண்டுமே ஸார்’ என்று செய்தியாளர்கள் கேட்கும்போது, ‘‘குற்றவாளி என்று நிரூபணம் ஆகும் வரையில் அவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு’’ என்றே போலீஸ் தரப்பிலிருந்து பதில் கிடைக்கும். பினு விவகாரத்திலோ, “பினு மீதான மக்களின் பயம் போக வேண்டும் என்பதால்தான் வீடியோவை வெளியிட்டோம்” என்று விளக்கமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இந்த வீடியோவை வைத்தே பினு சுலபமாக வெளியில் வரமுடியும்’ என்கிறார்கள் வழக்கறிஞர்கள். 

என்னங்க சார் உங்க சட்டம்?

- ந.பா.சேதுராமன்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தாதாக்கள் தப்பித்தது எப்படி?
பினு பிறந்தநாள் கொண்டாட்டம் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கப்போகிறது என்பதை பிப்ரவரி முதல் தேதியே சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்மெல் செய்துவிட்டது. எந்த இடம் என்பதும், மொத்த தாதாக்களும் ஒன்று கூடுகிறார்கள் என்ற தகவலும் வாகனத் தணிக்கையில் பல்லு மதன் சிக்கிய பின்னரே வெளியில் வந்தது. மத்தியக் குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ஸ்டீபன் மற்றும் ஏராளமான இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள் ஒரு குழு... இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர் சர்வேஸ்ராஜ், உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோரைக் கொண்ட இன்னொரு குழு என இரண்டு குழுக்கள் இந்த ஆபரேஷன் டீமில் இருந்தன.
ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் என்பது போல், ‘ஸ்பாட்’டுக்குப் போன இடத்தில் டீமில் புதிதாக சில அதிகாரிகள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள்மீது இப்போது சந்தேகம் வலுத்துள்ளது. காரணம், போலீஸ் ரவுண்டு செய்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னரே, தாதாக்கள் சிலர் ஸ்பாட்டிலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கின்றனர். அது மட்டுமல்ல... போலீஸ் டீமில் புதிதாக இடம்பிடித்தவர்கள், அந்த லாரி ஷெட்டில் நுழையும் முன்பே பெரும் கூச்சலும் அதட்டலும் போட்டிருக்கின்றனர். தாதாக்களை உஷார்படுத்தி தப்பிக்க வைக்கவே அந்த அதட்டல் உதவியிருக்கிறது. இப்படித் தப்பியவர்கள் போக, கையில் சிக்கியவர்கள்தான் 73 பேர். ‘தாதாக்கள் தப்பிக்க யார் காரணம்?’ என்ற பஞ்சாயத்து போலீஸ் ஏரியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

பினு சரண்டர் ஆனதாகச் சொல்வதிலும் சர்ச்சை நீள்கிறது. “சரண்டர் ஆவதற்கு முன், ஐந்து நாள்கள் நாங்கள்தான் பினுவைப் பத்திரமாக வைத்திருந்தோம்” என்று இரண்டு பேர் மார்தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment