Thursday, February 15, 2018

ஜெ. படத்தை அவசரமாக வைத்த ரகசியம்!

ழக்கு சர்ச்சைகளுக்கு நடுவே இரண்டு முறை முதல்வராகப் பதவியேற்று விமர்சனங்களுக்கு ஆளானவர் ஜெயலலிதா; நீதிமன்றம் குட்டியதாலும், தீர்ப்பு தந்ததாலும் இரண்டு முறை பதவியையும் இழந்தவர் அவர். அப்படிப் பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில்தான், இப்போது அவர் உருவப்படமாகவும் தமிழக  சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார். காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர் ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையில், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்  ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அடைமொழியோடு பதினோராவது புகைப்படமாகவும், முதல் பெண் தலைவரின் படமாகவும் சட்டசபை மண்டபத்தில் இடம்பிடித்துவிட்டது. ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை வண்ணத்தில் சேலை கட்டிய இந்த உருவப்படம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிராக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அவர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு தண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். இதனால், ஜெயலலிதாவின் படத்தை அரசு சார்பில் பயன்படுத்த முடியாது என்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அரசு அலுவலகங் களில் இருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும், ஜெயலலிதா வுக்கு நினைவிடம் கட்டுவதாகவும், சட்ட சபையில் அவருடைய உருவப்படத்தை வைக்கப்போவதாகவும் அறிவித்தார் எடப்பாடி.

‘ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். மேலும், ‘சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைக்கக்கூடாது, அரசு அலுவலகங்களில் இருக்கும் ஜெ. புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்’ எனவும் அவர் மற்றொரு வழக்கையும் தொடுத்தார். 
பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள். அதற்கு முன்னதாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து, நினைவிடம் கட்ட ரெடியானது எடப்பாடி அரசு. ஆனால், டெண்டர் நடைமுறைச் சிக்கல்களால் வழக்கில் சிக்கித் தாமதமாகிறது அது. இந்த நிலையில், உருவப்படத்தையாவது சட்டசபையில் திறந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் எடப்பாடி அரசு தீவிரமாக இருந்தது. ‘‘இதைப் பிரதமர் மோடி திறந்து வைப்பார்’’ எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பிரதமருக்கு இதுகுறித்துக் கடிதம் எழுதினார் முதல்வர். ‘‘இதில் நீதிமன்றச் சிக்கல் வரக்கூடும் என்ற தயக்கத்தில் அதைத் தவிர்த்துவிட்டார் பிரதமர்’’ என்கிறார்கள்.

பிரதமர் வரமாட்டார் என்பது உறுதியான நிலையில், அதிரடியாக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துவிடும் முடிவுக்கு எடப்பாடி அரசு வந்தது. பிப்ரவரி 12-ம் தேதி திங்கள்கிழமை விழா நடத்த முடிவானது. வெள்ளிக்கிழமை அன்று இதுபற்றி அறிவித்தால் நீதிமன்றத்துக்குச் சென்றுவிடுவார்கள் என்று பிப்ரவரி 10-ம் தேதி சனிக்கிழமை அன்று அறிவிப்பு வெளியானது. உடனடியாக செய்தித் துறை மூலம் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டது. பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அன்று சொந்த ஊரில் இருந்ததால், அனைவருக்கும் போனிலேயே தகவலைச் சொல்லியுள்ளார்கள். சட்டசபை 10 மணிக்குக் கூடுவதே வழக்கம். ஆனால், நீதிமன்றம் செயல்படத் தொடங்கும்முன்பே படத்திறப்பு விழாவை நடத்திவிடவேண்டும் என நினைத்து, காலை 8.30 மணிக்கே சபைக்குள் ஆஜராகிவிட வேண்டும் என்று உத்தர விட்டனர். தினகரனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தாலும், விஜயதாரணி அன்று தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தது, ஆளும்கட்சியி னருக்கு வசதியாகப் போய்விட்டது. அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் அனைவருக்கும் சட்டசபை மண்டபத்தில் அமர வாய்ப்பு கிடைத்து விட்டது. சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், தம்பிதுரை உள்ளிட்டோருக்குத் தனியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள், எம்.பி-க்கள் உள்ளிட்டோர் அமர்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் இருக்கையில் கே.பி.முனுசாமியை அமரச் சொன்னார்கள். அவர் மறுத்தார். மதுசூதனன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை அமரச் சொல்லியும் யாரும் அமர மறுத்து விட்டதால், அந்த இடம் காலியாகவே இருந்தது. அதேபோல், முதல்வரின் இருக்கையும் காலியாக இருந்தது. மற்ற உறுப்பினர்களின் இருக்கைகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் அமர்ந்தனர்.
வழக்கறிஞர் துரைசாமி, ‘‘குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்டசபையில் வைத்தால், அங்கு வருபவர்கள் அனைவருக்கும் ‘குற்றம் செய்தாலும் தப்பில்லை’ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்திவிடும். இதைச் சுட்டிக்காட்டித்தான் வழக்குப் போட்டுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, படத்தைத் திறந்தது நீதிமன்ற அவமதிப்புதான்’’ என்றார்.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை, ‘‘ஜெயலலிதா ஐந்து முறை முதல்வராக இருந்தவர். அவர் மறைந்தபிறகே தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பு அவர்மீதான தண்டனையை விலக்கி வைத்தது. எனவே, படத்தைச் சட்டமன்றத்தில் வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார்.

‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இதனால் ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து வந்துவிடலாம் என கவர்னர் மாளிகையிலிருந்து தகவல் வந்தது. அதனால்தான் அவசரமாகப் படத்திறப்பு விழாவை நடத்தினார்கள்” என்கிறார்கள் ஆளும்கட்சித் தரப்பில். 

- அ.சையது அபுதாஹிர்
படம்: கே.ஜெரோம்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment