Sunday, February 18, 2018

“வேண்டாம் அட்டெண்டன்ஸ்!” - போராடும் ஆச்சர்ய பல்கலைக்கழகம்

மீண்டும் ஒருமுறை போராட்டக்களமாக மாறியிருக்கிறது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு). இந்தமுறை மாணவர்களுடன் சேர்ந்து பேராசிரியர்களும் போராடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாணவர் தலைவர் கன்னையா குமார் கைதுசெய்யப்பட்டபோது, இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது ஜே.என்.யு. அவர் கைது செய்யப்பட்ட அதே பிப்ரவரி 9-ம் தேதியன்று இந்தப் போராட்டம் இந்த ஆண்டு தொடங்கியது, தற்செயல் ஆச்சர்யம்! போராட்டம் ஏன் என்ற காரணத்தைப் போலவே, இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்விமுறையும் வியப்பு தருகிறது. 

இந்தத் தொடர் போராட்டத்துக்கான காரணம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் ‘கட்டாய வருகைப்பதிவு’ உத்தரவுதான். வருகைப்பதிவு என்பது கல்விக்கூடங்களின் வழக்கமான நடை முறைதான். தினமும் அட்டெண்டன்ஸ் எடுப்ப துடன், குறிப்பிட்ட அளவுக்கு வருகைப்பதிவு இருந்தால்தான், தேர்வு எழுதவே அனுமதிப்பர். ஆனால், ஜே.என்.யு-வில் இளநிலை பட்ட மாணவர்களுக்கு மட்டுமே வருகைப்பதிவு கட்டாயம்; முதுநிலை மற்றும் ஆய்வு மாணவர் களுக்குக் கட்டாய வருகை என்பது ஒரு சடங்காகக் கூட இருந்ததில்லை. ஆரம்ப காலத்திலிருந்து இதுதான் நடைமுறை.
 
வருகைப்பதிவு இல்லை என்பதற்காக இந்தப் பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் சோடை போனதில்லை. இதன் செயல்பாடுகள், இங்கிருந்து வரும் ஆய்வுகள், அவற்றின் தன்மைகளைக் கொண்டு கடந்த ஆண்டுக்கான ‘இந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகம்’ எனும் விருதைக் குடியரசுத்தலைவரிடமிருந்து ஜே.என்.யு பெற்றது. உலகத்தரமான ஆய்வுக்காகவும், இந்தியா முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது ஜே.என்.யு. இது தன்னாட்சி உரிமைகொண்ட பல்கலைக் கழகம். குறைந்த கட்டணத்தில் உயர்தரமான கல்வியை இங்கு பெறமுடியும். முனைவர் பட்ட ஆய்வுக்கே ஒரு பருவத்துக்கு 128 ரூபாய்தான் கட்டணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி என இந்தியத் தலைவர்கள் மட்டுமின்றி, நேபாள முன்னாள் அதிபர் பாபுராம் பட்டாராய் போன்ற ஆசியத் தலைவர்கள் பலரும் ஜே.என்.யு-வின் முன்னாள் மாணவர்களே! 

வருகைப்பதிவு இல்லை என்பதால், எந்த மாணவரும் எந்தப் பேராசிரியரின் வகுப் பறைக்கும் சென்று பாடம் கற்கலாம். தன் துறைக்குத் தொடர்பில்லாத, தனக்கு விருப்பம் உள்ள வேறு பாடங்களையும் கேட்கலாம். இதுதான் ஜே.என்.யு-வின் தனிச்சிறப்பு. இப்படி எந்தவிதத் தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக, பல்துறை அறிவுடன் ஆய்வு செய்யப்படுவதாலேயே இங்கிருந்துவரும் ஆய்வுகள் தனித் தன்மை மிக்கவையாக உள்ளன. இதனால்தான், ஜே.என்.யு-வின் ஆய்வு மாணவர்களுக்கும், அங்கி ருந்து வரும் ஆய்வுகளுக்கும் உலக அளவில் பெரிய மதிப்பு இருக்கிறது.
இப்போது, ‘முதுநிலை மட்டுமல்லாது, ஆய்வு மாணவர்களுக்கும் 75 சதவிகித வருகைப் பதிவு கட்டாயம்; மீறினால் விடுதி வசதி, உதவித்தொகை, மருத்துவ வசதி என எதுவும் தரப்படாது’ என நிர்வாகம் அறிவித்ததே, மாணவர்களைப் போராட்டக் களத்தில் இறங்கச்செய்துள்ளது. ‘‘தொடங்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை வருகைப்பதிவு காரணமாக எந்தப் புகாரும் பதிவுசெய்யப்படவில்லை. வருகைப்பதிவே இல்லை என்றாலும்கூட மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. அப்படியிருக்கும்போது கட்டாய வருகைப்பதிவு எதற்காக?’’ எனக் கேட்கிறார்கள், மாணவர்களும் ஆசிரியர்களும். போராட்ட நேரத்திலும் ஜே.என்.யு-வில் வகுப்புகள் நடக்கின்றன; வகுப்பறை களில் அல்ல, திறந்தவெளியில், கடைகளில், வளாகத்திலுள்ள மற்ற கட்டடங்களின் வாசல்களில். இவையெல்லாம் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடுதான் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுதொடர்பாக ஜே.என்.யு-வின் மாணவர் அமைப்புத் தலைவர் கீதா குமாரியிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் வகுப்பு களுக்குச் செல்வதை எதிர்க்க வில்லை. தொடர்ச்சியாக வகுப்புகளுக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கான பாடம் தவிர்த்து எங்களுக்கு விருப்பமான பாடங் களைக் கேட்பது, முக்கியமான பேராசிரியர்களின் வகுப்புகளில் பங்கெடுப்பது என்று எங்கள் நேரத்தை எப்போதும் வகுப்பறைகளிலேயே செலவிடுகிறோம்.  அப்படியிருக்கும்போது, கட்டாய வருகைப்பதிவைக் கொண்டுவருவது, மாணவர் களுக்கு நெருக்கடி கொடுக்கும் செயல். ஜே.என்.யு-வின் அடையாளங்களாகக் கருதப்படும் மாணவர் போராட்டச் சுதந்திரத்தைப் பறித்தது, தாபாக்களில் நடைபெறும் விவாதங்களைத் தடைசெய்தது, மாணவர் சேர்க் கையின் எண்ணிக்கையைக் குறைத்தது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இருந்த சேர்க்கை முன்னுரிமையை நீக்கியது போன்றவற்றின் தொடர்ச்சியே இது. ஜே.என்.யு என்ற கருத்தாக்கத்தை அழிக்கும் முயற்சி இது. இதைத் திரும்பப் பெற வேண்டும். ஜே.என்.யு-வுக்கு என  ஏற்கெனவே உருவாக்கப்பட்ட செயல்பாட்டு முறைகள் உள்ளன. அதன்படி பல்கலைக்கழகத்தை வழிநடத்த வேண்டும்’’ என்றார்.
‘‘ஜே.என்.யு-வின் கல்விமுறையானது, ‘ஆய்வுகள் வகுப்பறைக்குள் நிகழ்த்தப்படுவதல்ல. சமூகத்தைப் பகுத்தறிந்தே அது செய்யப்பட வேண்டும்’ என்ற அடிப்படையிலானது. அதற்கான வாய்ப்புகளை இந்தப் பல்கலைக்கழகம்தகர்க்கக்கூடாது. முறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தின் தன்மையை மேம்படுத்த, இந்தக் கட்டாய வருகைப்பதிவு என்பது எந்த வகையிலும் பயன்படாது. இது மாணவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் மறைமுக மிரட்டலாகவும் மட்டுமே இருக்கும்’’ என்கிறார்கள் பேராசிரியர்கள். 

- அழகுசுப்பையா ச.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment