Thursday, February 15, 2018

ஆர்.கே.நகர் தேர்தலுக்காக அவசர டெண்டர்!

கைமாறியது 30 கோடி ரூபாய்?
டெண்டரும் கமிஷனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் பிறந்தவை. அதிகார வர்க்கத்தின் பல்வேறு மட்டங்களில் கறுப்புப்பணம் புழங்குவதற்கு மூலகாரணமாக இருப்பது இந்த கமிஷன்தான். ‘தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு கமிஷன் அடிப்படையில் தான் ஒப்பந்தப்பணிகள் விடப்படுகின்றன’ என்ற செய்தி, நாளை பிறக்கப்போகும் குழந்தைக்குக்கூட தெரியும். ஊழலைத் தடுக்க, வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் முறை சில ஆண்டுகளாக அமலுக்கு வந்துள்ளது. ஆனால், அதிலும்கூட முறைகேடுகள் நடக்காமல் இல்லை. ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் செலவுகளுக்காக அவசரமாக ஆன்லைனில் டெண்டர் விட்டு, 30 கோடி ரூபாயை கமிஷனாக வாங்கினர்’ எனப் பரபர குற்றச்சாட்டு இப்போது கிளம்பியிருக்கிறது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் உட்புறச் சாலைகளைப் சீரமைப்பதற்காக, 2017 அக்டோபர் 26-ம் தேதி மாநகராட்சி டெண்டர் விட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நவம்பர் 10-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டு, கடைசியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாளான டிசம்பர் 22-ம் தேதி ஆன் லைன் டெண்டர் விடப்பட்டது. டிசம்பர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கெடு விதிக்கப் பட்டிருந்தது. இதில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் 2,939 சாலைகள் போட டெண்டர் விடப்பட்டது. இந்தப் பணிகளுக்கான டெண்டரின் தோராய மதிப்பீட்டுத் தொகை 175 கோடி ரூபாய். 

‘‘இதற்கான கமிஷன் தொகையாக 30 கோடி ரூபாய் கை மாறியுள்ளது. இந்தத் தொகைதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது’’ எனப் பகீர் குற்றச்சாட்டு எழுப்புகிறார்கள் பல கான்ட்ராக்டர்கள். சென்னை மாநகராட்சியில் முதல்வகை ஒப்பந்த தாரராக இருக்கும் மகாதேவன், இந்த டெண்டரை எதிர்த்து நீதிமன்றப் படியேறியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.
அவகாசமே தரவில்லை!

‘‘டெண்டரில் குறிப்பிட்ட தோராயத் தொகையைவிட குறைந்த தொகைக்குத்தான் டெண்டர் விடுவது வழக்கம். ஆனால், சென்னை மாநகராட்சியில் டெண்டர் தொகையைவிட, அதிக தொகைக்குத்தான் பல டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. கமிஷன் கொடுக்கும் சிலருக்கு மட்டுமே டெண்டர்கள் கொடுக்கப் படுகின்றன. பெரிய தொகைகளுக்கான டெண்ட ருக்கு குறைந்தபட்சம் 21 நாள்கள் அவகாசம் தர வேண்டும். இவர்கள், ஒருவார அவகாசம்கூட தரவில்லை. சில நுணுக்கமான, அதே நேரத்தில் விநோதமான விதிமுறைகளைக் குறிப் பிட்டுள்ளனர். ‘இந்த ஒப்பந்தத்தை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் மிஷினரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று ஒரு விதி உள்ளது. இதை மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளரிடம் வாங்க வேண்டும். ஆனால், டெண்டரில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்தச் சான்றிதழைக் கொடுக்க மாட்டார்கள். டெண்டர் அறிவிப்பு வெளியிடும்போதே, யார் யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்து விடுவார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அந்தச் சான்றிதழைக் கொடுப்பார்கள். அந்தச் சான்றிதழை வாங்கும் நபர்கள், கமிஷன் தொகையை முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும். இதுதான் இந்தச் சான்றிதழில் உள்ள சூட்சுமம். இந்தச் சான்றிதழ் பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதபடி செட் செய்திருப்பார்கள். இது, இந்த டெண்டருக்கு மட்டும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சியில் இந்தச் சூட்சுமப்படிதான் டெண்டர்கள் விடப்படுகின்றன.
அதிகத் தொகைக்கு டெண்டர் 

டிசம்பர் 22-ல் விடப்பட்ட டெண்டரும் இப்படித்தான் நடந்தது. சென்னை மாநகராட்சியில் பதிவுசெய்த ஒப்பந்ததாரர்கள் 2,000-க்கும் மேல் உள்ளனர். அடிக்கடி டெண்டர் எடுப்பவர்கள் சராசரியாக 500 பேர். அதிலும், குறிப்பிட்ட 50 பேருக்கு மட்டும்தான் சுழற்சி முறையில் டெண்டர் கொடுக்கின்றனர்.  

இப்போதுகூட 5-வது மண்டலத்தில் சில பணிகளை டெண்டர் விட்டனர். தோராயமான தொகை 4.20 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 30 சதவிகிதம் குறைத்து ரூ.3.28 லட்சத்துக்கு நான் டெண்டர் கேட்டேன். இன்னொருவர் 25 சதவிகிதம் குறைவாக ரூ. 3.40 லட்சத்துக்குக் கேட்டார். இருவருக்குமே இந்த வேலை கிடைத்திருக்கிறது. இப்படித் தோராய தொகையைவிட குறைவாகத்தான் டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், சாலைகள் போடுவதற்காக விடப்பட்ட டெண்டரில் தோராய மதிப்பைவிட அதிகத் தொகைக்கு டெண்டர் விட்டிருக்கின்றனர். டெண்டர் விடும்போதே, ‘30 சதவிகிதம் அதிகமாகப் போடுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டனர். அப்படிப் போட்டவர்களுக்குத்தான் வேலை கொடுத்தனர். இதனால் மாநகராட்சி பணம் 30 கோடி ரூபாய், சிலருக்கு கமிஷனாக கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறேன்” என்றார் அவர். 
மூன்று நாள்கள்தான் அவகாசம்! 

இதுகுறித்து மகாதேவனின் வழக்கறிஞர் குமாரிடம் பேசினோம். ‘‘ஒரு டெண்டருக்கு ஐந்து நாள்கள்தான் காலக்கெடு என்பது ஏற்கமுடியாத ஒன்று. இந்த ஐந்து நாள்களில் மூன்று நாள்கள் விடுமுறை நாள்கள். வெளிப்படையான டெண்டர் முறையில், தோராய மதிப்பீடுத் தொகையைவிட குறைவான தொகையைக் குறிப்பிடுபவர்களுக்குத்தான் பணியைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான தோராய மதிப்பீட்டை அதிகாரிகள் நிர்ணயிக்கும்போது, பணிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கான செலவு, ஆள்கூலி, பருவநிலை மாற்றத்தால் பிரச்னை ஏற்பட்டால் வரும் இழப்பு, இந்தச் செலவுகள் போக ஒப்பந்ததாரருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று மதிப்பிட்டே தொகையை முடிவுசெய்வார்கள். அதைவிடக் குறைவாக டெண்டர் விட்டால்கூட ஒப்பந்த தாரருக்கு லாபம் கிடைக்கும். இந்த டெண்டரில் மாநகராட்சி தவறிழைத்திருக்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

  கமிஷனுக்காக திணித்த விதி!

சிவில் இன்ஜினீயரிங் கான்ட்ராக்டர் அசோசியேஷனின் பொதுச்செயலாளர் சேரன் சிங்காரத்திடம் பேசினோம். “மாநகராட்சியில் அவசர வேலைகளை, அதாவது சேதம் அடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுக்கூட, அதற்கு ஒப்பந்ததாரர்கள் பணம் வாங்கிக் கொள்ளமுடியும். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் பணிகளை முறையாக டெண்டர் விட்டுத்தான் செய்ய முடியும். அதற்கு 21 நாள்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் குறைவான விலைப்புள்ளி குறிப்பிடுபவர்களை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும். இதுதான் வெளிப் படையான டெண்டர் முறை.
வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் முறையில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இப்படிச் செய்தால், அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கிடைக்காது. அதனால்தான், ஒப்பந்ததாரரிடம், ‘மெஷினரி சான்றிதழ்’ வாங்க வேண்டும் என்ற நடைமுறையை சென்னை மாநகராட்சியில் வலிந்து திணித்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட நபர்களுக்கு டெண்டர் கொடுப்பது என்று முடிவானதும், அவர்களுக்கு மட்டும் மிஷினரி சான்றிதழை அதிகாரிகள் ரெடி செய்துவிடுவார்கள். கமிஷனை முன்கூட்டியே கொடுத்து விட்டு, அந்தச் சான்றிதழை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இது தெரியாமல், மிஷினரி சான்றிதழ் கேட்டு வேறு ஒப்பந்ததாரர்கள் வந்தால், அவர்களை எவ்வளவு அலையவிட முடியுமோ, அவ்வளவு அலையவிடுவார்கள். அதற்குள் டெண்டருக்கான காலக்கெடு முடிந்து விடும். இப்படித்தான் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் டெண்டர் கொடுக்கப்பட்டு கமிஷன் வசூலிக்கப்படுகிறது. இதனால், பல ஒப்பந்ததாரர்கள் நொந்துபோய் உள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்குத் தொடுத்தபோது, ‘இதுபோன்று மிஷினரி சான்றிதழ் வாங்கச்சொல்வது என்பதெல்லாம் தேவையற்ற வேலை. வெளிப்படையான டெண்டருக்கு உதவாது’ என்று நீதிபதிகள் சொல்லியிருக்கின்றனர்” என்றார்.
டெண்டருக்குத் தடை வேண்டும்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘பல கோடி ரூபாய் பணிகள் என்றால், குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விடப்பட வேண்டும். அவகாசம் மறுக்கப்பட்டிருப்பதையும், நிபந்தனை களையும் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்திருக்கும் என்று தெரிகிறது. இந்த டெண் டருக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். முறைப்படி டெண்டர் விட வேண்டும்” என்றார்.  
“இந்த டெண்டர் முடிவுகள் ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், ‘எந்த வேலையை யாருக்குத் தர வேண்டும்’ என்பது டிசம்பர் தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கமிஷனை இந்த ஒப்பந்ததாரர்கள் முன் கூட்டியே கொடுத்துவிட்டனர். அந்தத் தொகையை வைத்துத்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது” என்கிறார் மாநகராட்சி அதிகாரி ஒருவர். 

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விளக்கம் கேட்க அவரது மொபைல் எண்ணுக்கு அழைத்தோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. அவர் விளக்கம் அளித்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம். 

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தெ.அசோக்குமார்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment