Friday, February 09, 2018

திறமையிருக்கு... பணமில்லை! - உறுதியளித்த முதல்வர் உதவுவாரா?

‘‘நாடு கடந்து மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் யோகா, இந்தியாவின் அடையாளம்” என்று பெருமிதம் கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால், யோகா போட்டியில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் சீர்காழியைச் சேர்ந்த சுபானு என்ற மாணவியின் குடும்பம் பரிதாப நிலையில் இருக்கிறது.  

நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த மணிவண்ணன்-சீதா தம்பதியின் இளைய மகளான சுபானு, 9-ம் வகுப்பு படிக்கிறார். எல்லா பாடங்களிலும் முதல் ரேங்க் பெறும் இந்த மாணவி, உலக அளவிலான யோகா போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். ஆனாலும், யோகா போட்டிகளில் பங்கேற்பதற்கு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வ தற்குப் பணமில்லாமல், பெரும்பாலான போட்டி களில் இவரால் பங்கேற்க முடிவதில்லை. சமீபத்தில் நாகையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், யோகாசனங்கள் செய்தார் சுபானு. அதைப் பார்த்த முதல்வர், ‘தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் நடத்தப்படும்’ என்று அறிவித்தார். அப்போது, முதல்வரைச் சந்தித்து உதவிகள் கேட்டார் சுபானுவின் தாய் சீதா. உதவிகள் செய்வதாக முதல்வரும் உறுதியளித்தார். ஆனால், இன்னும் உதவிகள் வந்து சேரவில்லை.
சுபானுவின் தாயார் சீதாவைச் சந்தித்தோம். “என் கணவர் வெளிநாட்டில் கூலி வேலை செய்தார். அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டு, ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார். நிலம், நகைகளை விற்று அவருக்குச் சிகிச்சை அளித்தோம். எங்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் பூஜாவுக்கு யோகாவில் அதிக ஆர்வம். அவளுடன் சேர்ந்து, மூன்று வயதிலிருந்தே சுபானுவும் யோகா கத்துக்கிட்டா. பல போட்டிகளில் மாவட்ட அளவில் பூஜா வென்ற போதிலும், மேற்கொண்டு அவளைத் தேசிய அளவி லான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. 

யோகாவில் சாதனை படைக்க வேண்டும் என்ற உறுதி சுபானுவுக்கு ஏற்பட்டது. நானும் யோகா கற்றுக்கொண்டு, அவளுக்குச் சொல்லித் தந்தேன். அதையடுத்து மாவட்ட, மாநில அளவிலான யோகா போட்டிகளில் சுபானு பங்கேற்றார். உத்தரகாண்டில் நடைபெற்ற தேசியப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். பின், தாய்லாந்தில் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்றார். அப்போதைய நாகை கலெக்டர் பழனிச்சாமி, பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து, பண உதவியும் செய்தார். அந்த வெற்றி மகிழ்ச்சியுடன் ஊருக்குத் திரும்பியபோது, முதல்வர் ஜெயலலிதா இறந்து போனதால், எங்கள் வெற்றி வெளியுலகுக்குத் தெரியாமல் போனது.
நாகையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யைச் சந்தித்து, சுபானு உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டோம். நிச்சயமாக செய்கிறேன் என்று உறுதியளித்தார். சீர்காழி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பாரதி, தனிப்பட்ட முறையில் ரூ.2 லட்சம் வரை கொடுத்து அபுதாபி போட்டியில் கலந்துகொள்ள உதவினார். ஒன்பது நாடுகள் பங்கேற்ற அபுதாபி போட்டியில் சுபானு தங்கப்பதக்கம் பெற்றார். நான் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றேன். இப்போது, அரசு மருத்துவமனையில் யோகா ஆலோச கராக உள்ளேன். மிகக் குறைந்த சம்பளம். அதை வைத்து, குடும்பம் நடத்த முடியவில்லை. மற்ற மாநிலங்களில் சுபானு போன்றவர்களை ஊக்குவிக்க, தனியார் ஸ்பான்சர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அதுபோல யாரும் முன்வரவில்லை. மத்திய-மாநில அரசுகள் அல்லது  தனியார் ஸ்பான்சர்கள் உதவினால் மட்டுமே சுபானு உலக அளவில் சாதனைகள் படைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க முடியும்” என்றார் மிகுந்த எதிர்பார்ப்புடன்.   

இவர்களுக்கு உதவி செய்ய முதல்வர் முன்வருவாரா?

- மு.இராகவன்
படங்கள்: செ.ராபர்ட்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment