Friday, February 09, 2018

ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆச்சர்ய வாரிசு!

வுன்சிலர் பதவி முதல் கட்சித் தலைமை வரை வாரிசு அரசியல் ஓங்கியிருக்கும் உலக, உள்ளூர் அரசியலில்... ஒரு நாட்டு அதிபரின் மகன் அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து மறைந்திருப்பது அதிசயம்தான்! 

கியூபா சுதந்திரப் போராட்டத் தலைவரும் அந்தநாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் ஃபிடல் காஸ்ட்ரோ டயஸ் பளார்ட், பிப்ரவரி 1-ம் தேதி 68 வயதில் மரணம் அடைந்தார். கியூபாவுக்கு மட்டுமல்ல, உலக அளவில் வளரும் நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், திடீரென உயிரிழந்தது சோகம். 
உலகத்தையே ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க வல்லரசின் காலுக்குக் கீழே இருந்துகொண்டு, அதற்கு மிகப்பெரும் சவாலாகச் செயல்படும் கியூபாவில், வளர்ச்சிக்கான அணுசக்தி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தவர் ‘ஃபிடலிட்டோ’ என அழைக்கப்படும் பளார்ட். ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் அவரின் முதல் மனைவி மிர்ட்டா டயஸ் பளார்ட்டுக்கும் பிறந்த ஒரே பிள்ளை, ஃபிடலிட்டோ. கியூபப் புரட்சிக்கு முன்னர் காஸ்ட்ரோவிடமிருந்து மணமுறிவுபெற்று அமெரிக்காவுக்குத் திரும்பிய மிர்ட்டா, மகன் ஃபிடலிட்டோவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார். கியூபாவில் புரட்சி அரசாங்கம் மலர்ந்தபின்னர், தாய்நாடு திரும்பிய ஃபிடலிட்டோ, இறுதிமூச்சுவரை அந்த மண்ணிலேயே வாழ்ந்தார். 

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உடற்கல்வி கற்கப் போன ஃபிடலிட்டோ, அணு இயற்பியல் பக்கம் திரும்பினார். மாஸ்கோவின் லொமனோசோவ் அரசுப் பல்கலைக்கழகத்தில் படித்தபின்னர், டப்னாவின் அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றச் சென்றார். 1978-ல் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தாய்நாடு திரும்பியவர், கியூபாவின் அணு ஆராய்ச்சித் திட்டத்துக்குப் பொறுப்பாளர் ஆனார். அது மட்டுமில்லாமல், அணிசேரா நாடுகளில் அணுசக்தியை அமைதிக்குப் பயன்படுத்தும் அமைப்பின் தலைவராகவும் ஃபிடலிட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அணுசக்தியை அடுத்து புதிய ஆராய்ச்சித் துறையான நானோ நுட்பவியலிலும் ஆர்வத்துடன் இறங்கியதுடன், அமைதியான வளர்ச்சிக்கான விஞ்ஞானியாகப் பணியாற்றினார். 

‘‘அமெரிக்கா போன்ற நாடுகள் விண்வெளி, அணுசக்திப் போட்டி என ஈடுபட்டிருக்கையில், அதற்குப் பக்கத்தில் உள்ள கியூபாவில் வேளாண்மை, மருத்துவம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற துறைகளில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தி, வளர்ந்தவர் டயஸ் பளார்ட். உலக அளவில் முதல் என்று சொல்லாவிட்டாலும், இந்தத் துறையில் மெச்சத்தகுந்த இடத்தில் கியூபாவைக் கொண்டுவந்ததில் அவரின் பங்கு முக்கியம். தொழில்நுட்ப இறக்குமதி கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், மண்ணுக்கேற்ற விஞ்ஞானத்துக்காகப் பாடுபட்டார். வளரும் நாடுகளுக்கான ஓர் உதாரணம் அவர்” என ஃபிடலிட்டோவைப் பற்றிக் குறிப்பிடுகிறார், டெல்லி விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேசுவரன்.  

உலகப் புகழ்பெற்ற ‘சயின்ஸ்’ இதழ், அவரின் அரசியல் விருப்பம் பற்றிக் கேட்டதற்கு, ‘‘இன்னொரு வாழ்க்கை இருந்தால், அப்போது பார்க்கலாம். இப்போதைக்கு ஒரு நல்ல விஞ்ஞானியாக இருக்கவேண்டும்” என்றார் ஃபிடலிட்டோ.
உள்ளூரிலிருந்து உலகம்வரை வாரிசு அரசியல் குட்டிச்சுவர்களுக்கு, பளார்ட்டின் பதில் ஒரு பொளேர்!

- இரா.தமிழ்க்கனல்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment