Friday, February 09, 2018

தலைமறைவு நேரத்திலும் திருமணப் பேச்சுவார்த்தை! கல்யாண மன்னனின் மோசடி

கல்யாண மன்னனின் மோசடி
‘இரண்டாம் திருமணத்தில் ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு, விதவைகள் மற்றும் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ புருஷோத்தமனின் லீலைகள் குறித்து ஒவ்வொரு நாளும் கிடைத்துவரும் புதுப்புதுத் தகவல்களால் கிறுகிறுத்துப் போயிருக்கிறது கோவை காவல்துறை. 

‘நினைச்சா ஒரு கல்யாணம்! போலீஸ் தேடும் 57 வயது மாப்பிள்ளை’ என்ற கட்டுரையை 17.01.2018 ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம். கோயம்புத்தூரை அடுத்த வெள்ளலூரைச் சேர்ந்த 57 வயது புருஷோத்தமன், ‘இரண்டாம் திருமணம்’ என்ற பெயரில்... ‘திருமணம் செய்த ஒவ்வொரு பெண்ணுடனும் சில மாதங்கள் வாழ்வது... அவர்களைப் பாலியல் ரீதியாக அனுபவிப்பது... பிறகு, ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி அந்தப் பெண்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கறப்பது... பணம் கைக்கு வந்ததும் ஏதாவதொரு கதையை அவிழ்த்துவிட்டு அவர்களிடமிருந்து எஸ்கேப் ஆவது’ என்று ‘விளையாடிய’ கொடூரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தோம்.
தலைமறைவாக இருந்த புருஷோத்தமனையும், அவரின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மகள் கீதாஞ்சலியையும் ஜனவரி 31-ம் தேதி போலீஸ் கைது செய்தது. புருஷோத்தமனின் மோசடிகளுக்கு உதவியாக இருந்ததாக காஜா உசேன், ஷெரீஃப் ஆகியோரையும் போலீஸ் வளைத்துப் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்திடம் நாம் பேசினோம். ‘‘இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிச்சதிலிருந்து என்னால நிம்மதியா தூங்க முடியல. கண்ணை மூடினா, புருஷோத்தமன்கிட்ட ஏமாந்த ஒவ்வொரு பெண்ணும் என்கிட்ட கதறும் காட்சிகள்தான் ஓடுது. பெண்கள், பொருளாதாரச் சுதந்திரத்தோட இருந்தா மட்டும் போதாது. உணர்வுரீதியாவும் சுதந்திரமா இருக்கணும். கல்யாண விஷயத்தில ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். அதிலும், முதல் திருமணத்தில் கசப்பான அனுபவத்தைச் சந்திச்சவங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று அக்கறையுடன் பேச ஆரம்பித்தார்.

“புருஷோத்தமன் படிச்சது வெறும் பத்தாவதுதான் என்றாலும், கம்ப்யூட்டர்ல ரொம்பக் கெட்டிக்காரர். புருஷோத்தமனோட அப்பா, நூல் பிசினஸ் செய்திருக்கார். அவர், புருஷோத்தமனை ரொம்பச் செல்லமா வளர்த்திருக்கார். புருஷோத்தமனுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. புருஷோத்தமனோட நடவடிக்கைகள் பிடிக்காததால, அவர்கூட அவங்க பேசறதே இல்லையாம். கோயம்புத்தூர்ல ஒரு பிரபல கடையில சூப்பர்வைசரா வேலைபார்த்த புருஷோத்தமன், அந்தக் கடையில லட்சக்கணக்குல பணத்தைக் கையாடல் பண்ணிட்டு ஓடிவந்து கமிஷன் ஏஜென்டா மாறியிருக்கார். ஆன்லைன் ட்ரேடிங் பிசினஸும் செய்திருக்கார். அப்போ, பல கம்பெனிகளை ஏமாத்தி கோடிக்கணக்குல பணத்தைச் சுருட்டியிருக்கார்.
பாலியல் விஷயங்களில் அதீத ஆர்வத்துடன் இருந்திருக்கார். முதல் திருமணத்தைப் பெற்றோர் செய்துவைத்துள்ளனர். ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. புருஷோத்தமனின் பண வெறியையும், பாலியல் தொல்லைகளையும் சகிக்க முடியாம, முதல் மனைவி விவாகரத்து வாங்கிட்டுப் போயிட்டாங்க. முதல் திருமணத்தை மறைச்சிட்டு, உஷாராணி என்ற பெண்ணை புருஷோத்தமன் 2-வது திருமணம் செய்துள்ளார். உஷாராணிக்குப் பிறந்த பெண்தான் கீதாஞ்சலி. மூளைக்காய்ச்சலில் உஷாராணி இறந்துட்டதாக புருஷோத்தமன் சொல்கிறார். உஷாராணியின் வீடு எங்கே என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மழுப்புகிறார். அதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

கோவை ‘மெட்டி ஒலி மேட்ரிமோனியல்’ மையத்தில், இரண்டாவது திருமணத்துக்குப் பதிவு செஞ்சிருந்த பணக்காரப் பெண்களைத் தன் வலையில் விழவைத்து ஏமாற்றியுள்ளார். இவரிடம் 11 பெண்கள் ஏமாந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவரோட போலி கம்பெனிகளை நம்பி வேலைக்கு வந்த எட்டு இளம் பெண்களையும் மோசம் செய்துள்ளார்.
புருஷோத்தமனிடம் டிரைவராக இருந்த காஜா உசேன், மிகப்பெரிய பங்களாவில் வசிக்கிறார். இவர்தான், புருஷோத்தமனுக்கு எல்லாமுமாக இருந்தவர். கைது செய்யப்பட்டுள்ள ஷெரீஃப், எல்லாவிதமான ஐ.டி புரூஃப்களையும் போலியாக உருவாக்குவதில் கில்லாடி. உஷாராணி இறந்துவிட்டதாக புருஷோத்தமன் வைத்துள்ள டெத் சர்டிஃபிகேட் கூட இப்படிப் போலியாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். உஷாராணி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. இப்படி ஏமாற்றிக் குவித்த பணத்தில் ஏராளமான நிலங்களைப் பினாமி பெயர்களில் வாங்கியிருக்கிறார்கள். அவற்றைத் தேடும் முயற்சியில்தான் இப்போது இருக்கிறோம். தலைமறைவாக இருந்தபோது, சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவர் மறைத்துவைத்துவிட்டார். அவருடைய விலையுயர்ந்த மூன்று கார்கள் எங்குள்ளன என்பது தெரியவில்லை” என்று பல ஆச்சர்யத் தகவல்களைக் கொட்டிய இன்ஸ்பெக்டர், “போலீஸால் தேடப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்கூட, 2-ம் திருமணம் செய்வதற்காக இரண்டு பெண்களிடம் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கார்” என்று அதிர்ச்சியுடன் சொன்னார். 

புருஷோத்தமன்மீது பல மாநிலங்களில் நிதி மோசடி வழக்குகள் உள்ளன. இவருக்கு வழக்குகளிலிருந்து தப்பிப்பது கைவந்த கலையாம். அந்தக் கலை இந்த முறை கைகொடுக்குமா என்று பார்ப்போம். 

- எம்.புண்ணியமூர்த்தி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment