Monday, February 12, 2018

“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை!” - ஹெச்.ராஜா

“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை!” -  ஹெச்.ராஜா
துரை மீனாட்சியம்மன் கோயிலில் நிகழ்ந்த தீ விபத்து, அனல் ஏற்படுத்தும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பி யிருக்கிறது. ‘கோயில்களிலிருந்து அரசின் அறநிலையத் துறை வெளியேற வேண்டும். இந்துக் கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என்று கோஷம் கிளம்பியிருக்கிறது. ஏற்கெனவே சின்னச் சின்ன அமைப்பு களாக தனித்தனியாக இதைப் பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஒரே குரலாக இதை எழுப்புகிறார்கள். இவர் களின் பின்னணியில் இருப்பது பி.ஜே.பி மற்றும் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். ‘‘இந்துக்களாகிய நாம், நம் கோயில்களைக் காக்க வீதிக்கு வர வேண்டிய நேரம் இது’’ என்று பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி ‘இந்துக் கோயில் மீட்பு இயக்கம்’ என்ற அமைப்பை அவர் தொடங்கினார்.
‘அறநிலையத் துறையின்கீழ் இயங்கி வரும் தமிழகக் கோயில்களை மீட்பதற் காக ஓர் இயக்கம் இப்போது தேவையா?’ என்ற கேள்வியுடன் ஹெச்.ராஜாவைச் சந்தித்தோம். மிக நீண்ட விளக்கம் தரத் தொடங்கினார் அவர்.
‘‘தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,635 கோயில்கள் தமிழகத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் பல கோயில்கள் இன்று காணாமல் போயுள்ளன. முறையாக வழிபாடு நடந்துவந்த, வருமானம் வரும் கோயில்களை மட்டும்தான் அறநிலையத் துறை கையகப்படுத்தியது. உண்டியல் இல்லாத கோயில்களை ஒருநாளும் நிர்வாகத்துக்குள் கொண்டு வந்ததில்லை அறநிலையத் துறை. இந்துக் கோயில்கள் அறநிலையத் துறையிடம் ‘குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை’ யாகத்தான் இருக்கின்றன. கோயில் சொத்துகளை மீட்க மாட்டார்கள், ஒழுங்காக நிர்வாகம் செய்ய மாட்டார்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாட்டார்கள். சட்டம் இருந்தும் செயல்பட மறுக்கும் அறநிலையத் துறைக்கு மக்கள் சார்பில் அழுத்தம் தரவே இந்த இயக்கம்’’ என்கிறார் ராஜா.  

தனிநபர்களிடம் இருந்த கோயில்களை மீட்டுத்தான் அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது. இப்போது கோயில்கள் மீண்டும் தனிநபர்களின் ஆதிக்கத்துக்குப் போவது எப்படிச் சரியாக இருக்கும்? ராஜா இதற்கும் பதில் வைத்திருக்கிறார். ‘‘அறநிலையத் துறை வசம் உள்ள கோயில்களை ‘இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்ப டைக்க வேண்டும்’ என்று 1985-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசாங்கத்தால் உருவாக்கப் பட்ட கமிட்டி பரிந்துரைத்தது. அதைத் தான் இப்போது செயல்படுத்தச் சொல்கி றோம். ‘கோயில்களின் நிர்வாகத்தில் தவறு நடந்தால், அதை எடுத்து சரி செய்து, மீண்டும் அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என்று அற நிலையத் துறையின் சட்டம் சொல்கிறது. ஆனால், 1959-ம் ஆண்டு முதல் இதுவரை அறநிலையத் துறை எந்தக் கோயில் களையும் திரும்ப ஒப்படைக்கவில்லை. கோயில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. 29 கோடி சதுர அடி மனைக்கட்டு கோயில்களுக்கென இருக்கிறது. அத்தனை நிலங்களும் இப்போது அறநிலையத் துறையிடம் இருக்கின்றனவா, இந்த மனைகளுக்கெல்லாம் பட்டா யார் பெயரில் இருக்கிறது? எதற்கும் பதில் இல்லை. 

கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியைக்கூட முறையாக வசூலிக்கவில்லை. கோயில் நிலங்க ளுக்கான வாடகை நிர்ணயமும் மிக மோசமாக இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு, ஓர் ஏக்கர் நிலத்துக்கு 245 காசுகள்தான் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. பணம் வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ கோயில்களின் நிலங்களை மாற்றித் தருவதுதான் அறநிலையத் துறையின் கடமையாக இருக்கிறது. இந்துக் கோயில்களின் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, முறையாகப் பராமரித்தால் ஆறாயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரும். இதைத்தான் அறநிலையத் துறை செய்ய மறுக்கிறது. இதை முறைப்படுத்தினால், இந்துக் கோயில் தரப்பிலிருந்து இலவசக் கல்வி, மருத்துவ வசதி என எல்லாம் ஏழைகளுக்குக் கொடுக்க முடியுமே’’ என்று கேட்கிறார் ராஜா.
‘‘கலை அறிவியல் கல்லூரிகள் ஐந்து, பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று எனத் தமிழக மெங்கும் 51 கல்வி நிலையங்களை அறநிலையத் துறை நடத்திக்கொண்டிருக்கிறதே?’’ என்றோம். ‘‘நான் அதைச் சொல்லவில்லை. இந்து பண்பாடு, சமயக் கருத்துகள் அனைத்தும் இளம் வயதிலேயே கற்பிக்கப்பட வேண்டும். இந்து அல்லாதோரை ஆசிரியர்களாக நியமித்தால், ‘இந்து சமய கோட்பாடுகள்’ எப்படி சொல்லித் தரப்படும்? அறநிலையத் துறையின்கீழ் செயல்படும் கோயில்களில் சமய வகுப்புகள் நடப்பதில்லையே! பல மதங்கள் தங்களுடைய கோட்பாடுகளைக் கல்வி நிலையங்களில் சொல்லித் தரும்போது, இந்து மதத்தின்கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் மட்டும் ஏன் சொல்லித் தர முடியாது? ஏன் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துச் செயல்பட வேண்டும். இந்துக்கள் என்றால் தமிழகத்தில் அவ்வளவு கேவலமா? மதச்சார்பற்ற அரசாங்கத் துக்கு ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட ஆலயங்களில் மட்டும் என்ன வேலை? திருப்பதி தேவஸ்தானம், அவர்களது செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு செல்ல ஒரு தொலைக் காட்சியை நடத்தி வருகிறது. அப்படி தமிழகத்தில் சமயக் கோட்பாடுகளைப் பரப்ப அறநிலையத் துறை என்ன செய்திருக்கிறது? இந்து மதத்தை அழிப்பதற்காகவே ‘இந்து அதர்மத்துறை’யாகவே அது செயல்படுகிறது’’ எனக் கொதிக்கிறார் ராஜா. 

‘‘தமிழகத்தில் எத்தனையோ துறைகளில் ஊழல் கள் நடந்துகொண்டிருக்கும்போது, அறநிலையத் துறையில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துவது ஏன்?’’ என்றால், ‘‘தமிழகத்தில் மற்ற கட்சிகள் அறநிலையத் துறை விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றன. அதனால் நாங்கள் பேசுகிறோம். கோயில்களுக்கு அடுத்ததாக நான் விவசாயத் துறையில் கவனம் செலுத்தப்போகிறேன். லட்சக் கணக்கான விவசாயிகள் மின்சார இணைப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நீர் ஆதாரங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன.  தமிழகத்தில் அதிக ஏரிகள் உள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டும் சிவகங்கையும் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. சிவகங்கை என்னுடைய சொந்த மாவட்டம். அங்கிருக்கும் ஏரிகள் பட்டா போட்டு விற்கப்படுகின்றன. தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளே இதற்கெல்லாம் காரணம். என் மதம் சார்ந்த பிரச்னைக்கு இப்போது குரல் கொடுக்கிறேன். அடுத்ததாக, தொழில் சார்ந்த விவசாயத்துக்காகக் குரல் கொடுப்பேன்’’ என்கிறார் ராஜா.
“அறநிலையத் துறை இல்லாவிட்டால் சமூக அநீதி நிகழும்!” -  பழனிவேல் தியாகராஜன் 
‘அறநிலையத் துறை வசமே கோயில்கள் இருக்க வேண்டும்’ எனத் தமிழக அரசுத் தரப்பில் சொல்வதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சி வரிசை யிலிருந்து முதல் குரல் எழுந்தது. மீனாட்சியம்மன் கோயில் இருக்கும் மதுரை மத்தியத் தொகுதியின் எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன்தான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். ‘‘கோயில் சொத்துகள் பொதுமக்களுக்கானவை. பொதுச் சொத்தை மேலாண்மை செய்வதில் இருந்த முறைகேடுகளைச் சரிசெய்யவும், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தவுமே அரசு அங்கு நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மதராஸ் மாகாணத்தில் உள்ள கோயில்களைக் கையகப்படுத்த 1922-ம் ஆண்டு மசோதாவை அறிமுகப்படுத்தியது நீதிக்கட்சி. பல்வேறு விவாதங்களுக்குப்பிறகு, 1926-ம் ஆண்டுதான் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது நீதிக்கட்சியின் கொறடாவாக என் தாத்தா தமிழவேள் பி.டி.ராஜன் இருந்தார்.
1932-ம் ஆண்டுதான் ‘இந்து சமய அறநிலையத் துறை’ என்ற அமைச்சகம் பெயர் சூட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்தத் துறையின் முதலாவது அமைச்சராக என் தாத்தா இருந்தார். கோயில்களுக்குள் ஒரு சில மக்கள் மட்டுமே ஆதிக்கம் செய்துவந்த நிலையை மாற்றி, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லவும் வழிபாடு நடத்தவும் முதல் விதையை விதைத்தது நீதிக்கட்சிதான். அறநிலையத் துறை என்ற ஒன்று இல்லையென்றால், தமிழகத்தில் சமூகநீதி மறுக்கப் படும்’’ என்கிறார் அவர்.
‘‘அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்ற வாதம் நியாயமானதா?’’ என அவரிடம் கேட்டோம். ‘‘பல எதிர்ப்புகளைக் கடந்தே, அனைத்துக் கோயில்களும் அரசின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன. இப்போது வந்து, ‘அறநிலையத் துறை சரியில்லை. அதனால் கோயில்களைத் தனிநபர்களிடம் கொடுக்க வேண்டும்’ என்பது சமூக அநீதிக்குத்தான் வித்திடும். பரம்பரையாக இருந்த அறங்காவலர்கள் பலரும் இப்போது உயிருடன் இல்லை. புதிதாக கமிட்டி உருவாக்கினால் அதில் ஊழல் நடக்காதா? திராவிட இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட அறநிலையத் துறையின் சட்டத்தைத்தான் இந்தியாவில் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அறநிலையத் துறை சரியில்லைதான், அதைச் சரி செய்யும் வழியை யோசிக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தை வளர்க்க, தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. ஊழல் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது, அதற்காக அனைத்துத் துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்தால், அரசு எப்படி செயல்படும்?’’ எனக் கேட்கிறார் அவர். 

‘‘மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் கவனம் செலுத்தாத அரசு, கோயில்களில் மட்டும் புகுந்து நிர்வாகம் செய்வதாக இந்துத்வா அமைப்புகள் குற்றச்சாட்டு வைக்கிறார்களே?’’ என்று கேட்டோம். ‘‘அறநிலையத் துறை உருவாக்கப்பட்டபோது இருந்த கோயில்களின் எண்ணிக்கையையும், மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் தனியாரிடம் இருப்பதுபோலவே, இந்து அமைப்புகளிடமும் பல தனியார் மடங்கள் இருக்கின்றன. காஞ்சி மடம், திருவாவடுதுறை ஆதீனம் உள்பட பல்வேறு மடங்களின் நிர்வாகத்தில் எந்த அரசும் குறுக்கிடுவதில்லையே. ஜமாத் தனியாகச் செயல்படுவதுபோல், கிறிஸ்தவ அமைப்புகள் செயல்படுவதுபோல், இந்து அமைப்புகளின் மடங்களும் ஆதீனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல்தான் செயல்படுகின்றன. இந்துக் கோயில்களும் கோயில் சொத்துகளும் பொதுமக்களுடையவை. அதனால்தான் அவை அரசால் கையகப்படுத்தப் பட்டன. இந்து மதத்தை யாரும் கையகப்படுத்த வில்லை. பி.ஜே.பி-யினர் ஜமாத்தையும் கோயில் நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இது தவறு. ஜமாத் நிர்வாகத்தையும் மடத்தின் நிர்வாகத்தையும் வேண்டுமானால் ஒப்பிடலாம். ஆனால், இவர்கள் வேண்டுமென்றே தவறான ஒப்பிடலைச் செய்து வருகிறார்கள். இதைத்தான் இந்துத்வா அமைப்பினர் முன்னெடுத்துச் சொல்லிவருகின்றனர்’’ என்றார் பழனிவேல் தியாகராஜன். 
‘‘பிஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ‘இந்துக் கோயில் மீட்பு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறாரே?’’ என பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டோம். ‘‘இந்திய நாட்டில் எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அவருடைய கருத்தை முன்வைக்க அவருக்கு உரிமை இருக்கிறது. மக்களின் ஆதரவுடன் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைத்தால், அப்போது அறநிலையத் துறையைக் கலைத்துக்கொள்ளட்டும்; முடிந்தால்...’’ என முடித்தார் அவர்

- இ.லோகேஷ்வரி

படங்கள்: வீ.சதீஷ்குமார், ஈ.ஜெ.நந்தகுமார், ரவிக்குமார்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment