Sunday, February 18, 2018

கட்சியில் சேரும் தாதாக்கள்... கடுப்பில் தொண்டர்கள்!

காஞ்சிபுரம் தி.மு.க-வில் சலசலப்பு
‘தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம்’ என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லிவருகிறார். அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பும் வெளியாகலாம் என்பதால், தமிழக அரசியலில் தேர்தல் ஜுரம் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை முன்னிட்டு கட்சிக்குப் புத்துணர்வு கொடுப்பதற்காக, ‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ நிகழ்ச்சியை அறிவித்தார் ஸ்டாலின். கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இதை ஸ்டாலின் செய்துவருகிறார். இந்த நிலையில், ‘‘காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், தாதாக்களை தி.மு.க-வில் சேர்த்து, கட்சியைப் படுகுழியில் தள்ளிவிட்டார்’’ என மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் தி.மு.க-வினர் புலம்பி வருகின்றனர்.

சீனியர் தொண்டர் ஒருவரின் புலம்பல் இது: “காஞ்சிபுரம் தி.மு.க இப்போது குண்டர்களின் கூடாரமாகிவிட்டது. கட்சிக்காக உழைப்பவர்களைப் புறக்கணித்துவிட்டு, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை மாவட்டச் செயலாளர் சுந்தர், கட்சியில் சேர்த்து வருகிறார். இதை உணர்வுள்ள எந்த தி.மு.க தொண்டனும் ஏற்கவில்லை.

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் வலதுகரமாக இருந்த தசரதன் என்பவருக்கு காஞ்சிபுரம் ஒன்றியப் பொருளாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். அவர்மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருக்கின்றன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றுவந்தவர் தசரதன். கட்டப்பஞ்சாயத்து செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளார். தசரதனை அறிவாலயம் அழைத்துச் சென்று ஒன்றியப் பொருளாளர் பதவியை சுந்தர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
எஸ்.கே.பி.சீனுவாசன் என்பவர் கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி என நிழலான தொழில்களைச் செய்கிறார். அவருடன் எப்போதும் 50 அடியாள்கள் உள்ளனர். காரில் அ.தி.மு.க கொடியுடன் அறிவாலயம் சென்றவர், தி.மு.க கொடியுடன் காஞ்சிபுரம் வந்தார். பிறகு, தன் ஆதரவாளர்களுக்குத் தடபுடலாக பிரியாணி விருந்து அளித்தார். கட்சியின் மரபுகளை மதிக்காமல் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் சீனுவாசன்.
‘கோனேரிகுப்பம்’ சேகர் என்பவர்மீது ஆனந்தன் என்பவரைக் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல், கள்ளச்சாராயம் எனப் பல வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளன. புரட்சி பாரதம் கட்சியில் இருந்தவர், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

காஞ்சிபுரம் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த சரவணன், கணேஷ் ஆகியோரை ‘சரவணா பிரதர்ஸ்’ என அழைப்பார்கள். பெருமாள் கோயில் பகுதியில் உள்ள தே.மு.தி.க பிரமுகர் ஒருவரிடம் ரூ. 52 லட்சம் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் சரவணன் ஏமாற்றியுள்ளார். இதனால், அந்த தே.மு.தி.க பிரமுகர் தற்கொலை செய்துகொண்டார். கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் எனப் பல வழக்குகள் இவர்கள்மீது உள்ளன.

இவையெல்லாம் சில உதாரணங்களே. கட்சி நடவடிக்கைகளில் இவர்களே முன்னிறுத்தப்படுவதால், சீனியர்களும் உண்மையான தொண்டர்களும் ஒதுங்குகிறார்கள். தாதாக்கள் தங்களின் சொந்த செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும், சட்ட விரோத தொழிலுக்குப் பாதுகாப்பு வேண்டியும் கட்சியில் இணைகிறார்கள். இதனால் கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. இவர்கள் மேடையேறி மைக் பிடிக்க, முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள். ஆனால், சிறைநிரப்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் வருவதே கிடையாது. சில வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதருக்கு ஒன்றியத் துணைத்தலைவர் பதவியைக் கொடுத்தார்கள். அப்போது எழுந்த எதிர்ப்புக்குரலால், அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். ஸ்ரீதர் இறந்துவிட்ட நிலையில், தாதாக்களின் செயல்பாடுகளைக் காவல்துறை முடக்கி வருகிறது. அவர்கள், பாதுகாப்பு தேடி தி.மு.க-வில் சேரத் தொடங்கி விட்டனர். இதனால், கட்சிக்குத்தான் அவப்பெயர் ஏற்படும்” என்கிறார் ஆதங்கம் நிறைந்த குரலில்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுந்தரிடம் பேசினோம். “2014-ல் தி.மு.க-வின் அமைப்புத்  தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தசரதன், 2015-ல் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியப் பொருளாளராக இருந்தவர். அவர் குற்றவாளியா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதுபோல் ‘சரவணா பிரதர்ஸ்’ கணேஷ் என்பவரின் மனைவி ஏற்கெனவே நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தி.மு.க-வில் இணைந்தவர்கள். இவர்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்கு முழுமை யாகத் தெரியாது. 2015 டிசம்பரில்தான் என்னை மாவட்டச் செயலாளராக அறிவித்தார்கள். அதற்குப் பிறகு ‘கோனேரி குப்பம்’ சேகர் மற்றும் எஸ்.கே.பி.சீனு வாசன் ஆகியோரைச் சேர்த்தது உண்மை. அவர்களைப் பற்றி நல்லமுறையில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் பின்புலம் எல்லாம் எனக்குத் தெரியாது. பொதுவாக, அரசியல் கட்சியில் நல்லவர்களும் சேர்வார்கள்; கெட்டவர்களும் சேர்வார்கள். சேர்ப்பவர்கள் அதற்குக் காரணமாக இருக்க முடியாது” என்றார்.

- பா.ஜெயவேல்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment