Sunday, February 18, 2018

பொலிட்டிகல் பொடிமாஸ்!

அரசியல் டிரான்ஸ்ஃபர்!

திருச்சி மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 12-ம் தேதி, எட்டு இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பணியிட மாற்றம் செய்தார். கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்த சீதாராமன் டி.எஸ்.பி-யாக பதவிஉயர்வு பெற்றதால், ‘செழிப்பான’ இந்த இடத்தைப் பிடிக்க இன்ஸ்பெக்டர்களுக்குள் கடும் போட்டி. இதில், தில்லைநகர் இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்குமார் வெற்றிபெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாக, இந்தப் பணியிட மாற்றலில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் கோபால், ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் பெரியய்யா ஆகியோரின் பணியிட மாற்றம் பிப்ரவரி 14-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இன்னும் மூன்று பேருக்கும் முதலில் போட்ட டிரான்ஸ்ஃபரை மாற்றி உத்தரவு வெளியானது. காவல்துறையை அரசியல் ஆட்டிப் படைக்கிறது.

கனிமொழி கடுகடு!

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகக் கடலூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் எண்ணிக்கையைவிட, தொண்டர்கள் எண்ணிக்கைக் குறைவாகவே இருந்தது. மேடையில் ஏறி கூட்டத்தைப் பார்த்தவுடனே கனிமொழியின் முகம் சுருங்கிவிட்டது. கூட்டம் முடிந்து செல்லும்போது, ‘‘இரண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்பட நான்கு எம்.எல்.ஏ-க்கள் மேடையில் இருந்தும், இத்தனை பேரைத்தான் கூட்ட முடிந்ததா? கூட்டணிக் கட்சிகளிலிருந்து தலைக்கு 500 பேர் என்று அழைத்து வந்திருந்தாலும் பெரிய கூட்டம் கூடியிருக்குமே? தெருமுனைப் பிரசாரம் போல குறுகிய தெருவில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு என்னை அழைக்காமலே இருந்திருக்கலாமே” என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடுகடுத்துள்ளார் கனிமொழி.

அழகிரி கடைக்கு வாடகை அதிகம்!

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில், தான் வைத்துள்ள மூன்று கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்துள்ளார். இது, மதுரை மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. மதுரைக்கு அழகிரி வந்த புதிதில், இங்குதான் வீடியோ கடையைத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் இங்குதான் அழகிரி இருப்பார். ஆதரவாளர்களும் அவரைப் பார்க்க இங்குதான் வருவார்கள். பிறகு அதன் அருகில், தயா மருத்துவப் பரிசோதனைக் கூடம், காந்தி சில்க்ஸ் ஆகியவற்றைத் திறந்தார். தற்போது அந்தக் கடைகளை வேறு நபர்கள் நடத்தினாலும், கடைகளின் வாடகைதாரராக அழகிரியே உள்ளார். ரூ. 10,565 என இருந்த வாடகையை ரூ. 13,358 என மதுரை மாநகராட்சி சமீபத்தில் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் கட்டத் தவறினால், கடைகள் மீண்டும் ஏலத்துக்கு விடப்படும் என்று மாநகராட்சி கூறியுள்ளது. இதை எதிர்த்துதான், அழகிரி நீதிமன்றம் போயுள்ளார்.

வைகோவுக்கு கமென்ட் கொடுத்த குடிமகன்!

‘‘மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே என் தலையாய பணி’’ என்ற ரீதியில் மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு, தி.மு.க-வினரை மட்டுமன்றி, ம.தி.மு.க-வினரையும் கிறுகிறுக்க வைத்துள்ளது. அந்தக் கூட்டத்தில் வைகோவை மூடு அவுட் ஆக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. 9.15 மணிக்குத்தான் வைகோவுக்கு மைக் கிடைத்தது. வைகோ பேசப் பேச, மேடைக்கு அருகே இருந்த போதை ஆசாமி ஒருவர், கமென்ட் கொடுத்துக்கொண்டே இருந்தார். வைகோ எச்சரித்தும், அந்தக் ‘குடிமகன்’ தன் சேட்டையைத் தொடர்ந்தார். அதனால், அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு வைகோ சொன்னார். கட்சிக்காரர்கள் அவரைத் துரத்திவிட்டார்கள்.
சில நிமிடங்களில் மீண்டும் அந்த ஆசாமி வந்துவிட, “மது வேலை செய்கிறது’’ என்றார் வைகோ. அதன் பிறகும் குடிமகனின் எதிர்ப்பாட்டு தொடரவே, “ஒண்ணுமில்லை... திடீரென ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவேன் என்று நான் பேசியதைக் கேட்டுக் கொஞ்சம் குழம்பி விட்டார், அவ்வளவுதான்...” என்றார். அப்போது, மேடையில் இருந்த கோ.தளபதி, “இன்னும் 15 நிமிடங்களே உள்ளன’ என வைகோவுக்கு நேரத்தை நினைவுபடுத்த... டென்ஷனான வைகோ, “எனக்குத் தெரியும். நான் எப்பவுமே கடிகாரத்தில் 15 நிமிடங்களை வேகமாக வைத்திருப்பவன். அதற்குள் முடித்துவிடுவேன்” என்றார். அதன்பின், டென்ஷனில் மோடியைப் பற்றி கடுமையான வார்த்தையில் பேசிய வைகோ, ‘‘உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’’ என்றார்.

மரங்களின் காதலர் 

திவாகரனின் மகன் ஜெயானந்த், ‘போஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். பல நிகழ்ச்சிகளில், இந்த அமைப்பின் சார்பில் ஜெயானந்த் கலந்துகொள்கிறார். திருத்துறைப் பூண்டியில் ‘நம் நாட்டு மரங்கள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு விழிப்புஉணர்வு’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட ஜெயானந்த், அனைவருக்கும் நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது, “இது அரசியல் மேடை அல்ல, பொது மேடை. இயற்கையைப் பாதுகாத்தால்தான், மனித இனம் நன்றாக இருக்கும். ‘ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டோம்’ எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். மரக்கன்றுகளை வைத்து அவற்றை முறையாகப் பராமரித்துக் காப்பாற்ற வேண்டும். அதுதான் முக்கியம். அப்படிச் செய்தால், இயற்கையைப் பாதுகாக்கலாம்” என்று பேசி பலத்த கைத்தட்டலைப் பெற்றார். 

- செ.சல்மான், ஜெ.முருகன், சி.ஆனந்தகுமார், கே.குணசீலன்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார், எஸ்.தேவராஜன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment