Friday, February 09, 2018

குடும்பத்தை நினைத்துக் குமுறும் தினகரன்

குடும்பத்தை நினைத்துக் குமுறும் தினகரன்
த்திய அரசையும் மாநில அரசையும் குதறியெடுக்கிற வகையிலான தன் வழக்கமான நக்கலோ, நையாண்டியோ இல்லாத சாதாரண பேச்சு. ‘‘தண்ணீர் இல்லாமல் சம்பா நெற்பயிர்கள் கருகிக்கொண்டிருக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. விவசாய பூமியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தால், முதல்வரும் ஒரு சில அமைச்சர்களும் வாய்திறக்க மறுக்கிறார்கள். மத்திய அரசிடம், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள்” என்றார் தினகரன். 

இதே விஷயத்தைப் பல ஊர்களிலும் திரும்பத் திரும்ப அவர் பேசினார். பிரசார வேனில் நின்றபடியே 15 நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு அடுத்த இடத்துக்குக் கிளம்பிவிடுகிறார். ‘‘அண்ணனுக்குத் தொண்டை சரியில்லை, அதான் சீக்கிரமே பேச்சை முடித்து விட்டார்’’ என்றனர் நிர்வாகிகள். 
 
காவிரி டெல்டா மாவட்டங்களிலிருந்து  தினகரன் தனது ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயண’த்தைத் தொடங்கியுள்ளார். இப்படி அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்கவிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக ஒன்பது இடங்களில் பேசுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ‘மக்கள் சந்திப்புப் பயணம்’ என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் வேனில் இருந்தபடியே பேசுகிறார். ஆதரவாளர்கள் மாலை அணிவித்தாலும், கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல வந்தாலும் வேண்டா வெறுப்பாகவே ஏற்றுக்கொள்கிறார். ‘மன்னாதி மன்னனே’, ‘முதல்வரே’, ‘ஆண்மகனே’ எனப் பல அடைமொழிகளோடு ஃப்ளெக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சம்பிரதாயத் துக்காக சசிகலா படம் இருந்ததே தவிர, சசிகலாவைப் பாராட்டியோ, புகழ்ந்தோ ஒரு வார்த்தைகூட இல்லை.

முதன்முதலாகச் சுற்றுப்பயணம், போகும் இடங்களிலெல்லாம் சிறப்பான ஏற்பாடுகள், இளைஞர்கள் ஒன்று திரண்டு கொடுக்கும் உற்சாக வரவேற்பு, தன்னைச் சந்திப்பதற்குக் கூடும் பெரும் கூட்டம் என அனைத்தையும்  நினைத்து மகிழ்ச்சியில் இருக்கவேண்டிய தினகரன், அதைக் கொண்டாடும் மனநிலையில் இல்லாமல் வேதனையில் வெம்பி வருகிறார். ‘‘என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எனக்கு எதிராக இருக்கிறார்கள்’’ எனத் தனக்கு நெருக்கமான வர்களிடம் புலம்பியிருக்கிறார். 

தினகரன் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கும்போதே, தனது பாசறை சார்பாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளைச் சந்திப்பதற்காகத் திடீரென தினகரனின் தம்பி பாஸ்கரன் வந்தார். அவரின் ஆதரவாளர்கள் ‘ஏழைகளின் தொண்டனே’, ‘எங்கள் அண்ணனே’ என்று  எம்.ஜி.ஆர் படம் போட்டு ஃப்ளெக்ஸ் வைக்கத் தொடங்கினர். சில இடங்களில் இரு தரப்புக்கும் ஃப்ளெக்ஸ் வைப்பது தொடர்பாக வாக்கு வாதங்களும் ஏற்பட்டன. பாஸ்கரன் தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ‘‘234 தொகுதி களிலும் என் பாசறையைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். நேரம் வந்தால் நானும் தலைமைப் பொறுப்புக்கு வருவேன்’’ எனக் கூறி தினகரனைத் திகைப்படையச் செய்துள்ளார். 

இதன் பின்னணியில், சசிகலாவின் தம்பி திவாகரன் இருக்கிறார் என்று தினகரனுக்குச் சந்தேகம். தினகரனும் திவாகரனும் பெயரளவில் ஒன்றாக இணைந்திருந்தாலும், இந்தப் பயணத் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப் பட்டபோதும், அதற்கான அறிவிப்பு வெளியிட்ட பிறகும் திவாகரனிடம் எதையும் தினகரன் கேட்க வில்லையாம். தினகரனை வரவேற்று வைக்கப் பட்ட ஃப்ளெக்ஸ்களில்கூட, திவாகரனுக்குச் செல்வாக்கு உள்ள இடங்களில் மட்டும் சும்மா பெயரளவுக்குத் திவாகரன் படம் போட்டனர். பல இடங்களில் அவரை இருட்டடிப்பு செய்தனர்.
 
பாஸ்கரன் மகளுக்கும், திவாகரன் மகன் ஜெயானந்துக்கும் திருமணம் செய்ய கடந்த வருடமே முடிவு செய்யப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. சீக்கிரமே சம்பந்திகளாகப் போகிறார்கள் இருவரும். ‘‘தன்னை ஓரம்கட்ட நினைக்கும் தினகரனுக்கு எதிராக, சம்பந்தி பாஸ்கரனைக் கிளப்பிவிடுகிறார் திவாகரன்’’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். 

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பெற்ற வெற்றியை, தன் தனி ஒருவனுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறார் தினகரன். அதை இந்தப் பயணத்தில் இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்க நினைக்கிறார். அதனால்தான் பல இடங்களில் பேசியபோது, சசிகலா பெயரைக்கூட அவர் உச்சரிக்கவில்லை. தான் உச்சத்துக்குப் போவதற்குத் தன் குடும்பத்தினரே முட்டுக்கட்டை போடுவதால், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை ரசிக்க முடியாமல் தவிக்கிறார் தினகரன்.

- கே.குணசீலன், கு.ராமகிருஷ்ணன்

 
ஹைடெக் வேன்!

தி
னகரன் பயன்படுத்தும் பிரசார வேன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘டிஎன்-11 ஏசி-9936’ என்ற எண் கொண்ட அந்த வேன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கே.திவாகர் என்ற தொழிலதிபர் பெயரில்  வாங்கப்பட்டுள்ளது. சிறிய ஹைட்ராலிக் லிஃப்ட், டாய்லெட் உள்ளிட்ட வசதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் உட்காரக்கூடிய இருக்கைகள் உள்ளன. ஹாட் பாக்ஸ், ஃப்ரீஸர் போன்ற வசதிகள் உள்ளன. பயணம் முடிந்து வந்த பிறகு வேனைச் சுத்தம் செய்வதற்கு மூன்று பேர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். திரை நட்சத்திரங்கள் பயன்படுத்தும் கேரவன்களுக்கு சவால்விடும் வகையில், பல ஹைடெக் வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த வேன்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment