Thursday, February 15, 2018

“இதைச் செய்தால் போதும்... மின் கட்டணம் குறையும்!”

அமெரிக்கர் தரும் ஐடியா
‘‘தமிழகம் இதைச் செய்தால், அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெறலாம். மின்தடையே இருக்காது. இதனால், பல தொழிற்சாலைகள் ஆர்வத்தோடு தமிழகத்தை நோக்கி வரும். மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். எல்லாவற்றையும்விட முக்கியமாக நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக மின் வாரியமான ‘டான்ஜெட்கோ’ (TANGEDCO) நிறுவனத்தை லாபகரமாக மாற்ற முடியும்’’ என்கிறது அந்த அறிக்கை. தமிழக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கும் சூழலில், மின் வாரியத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற வழி தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த நிபுணர் குழு அறிக்கையைக் கொண்டாடியிருக்க வேண்டும் அரசு . ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.  

மின்சார உபயோகத்தில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து 3-வது பெரிய நாடு இந்தியா. இந்தியாவின் மின் தேவை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்கு கூடும். நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.
இந்தியாவின் மின்சாரத் திட்டங்களும், கொள்கைகளும் உலக எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சான்று தான் மேற்கூறிய மூன்று விஷயங்கள். இந்தியாவின் மின்சக்தித் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது நிலக்கரிதான். இந்தியா, வருடத்துக்குத் தோராயமாக 70 கோடி டன் நிலக்கரியைத் தோண்டியெடுக்கிறது. நிலக்கரி என்பது தீர்ந்து போகும் வளம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தோண்ட முடியும்? ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனம், கடந்த ஆண்டு 37 நிலக்கரி சுரங்கங்களை மூட முடிவு செய்தது, இதன் நிலையைத் தெளிவாக விளக்கும். சரி... எதிர்கால மின் தேவை களுக்கான தீர்வுதான் என்ன?

‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி’ (Renewable Energy) என்பதுதான் ஒரே பதில். அழிவில்லாத ஆற்றல் மூலங்களான காற்று, சூரியன், நீர், கடல் அலை ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. இதில் உலக அளவில் சிறந்து விளங்கும் நாடுகள்: ஸ்வீடன், ஐஸ்லாந்து, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, ஜெர்மனி. இதை நோக்கித்தான் பல நாடுகளும் நகர்கின்றன. இந்தியாவும் நகர்ந்தே ஆக வேண்டும். 

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வக நிறுவனம்’ (Institute for Energy Economics and Financial Analysis) எனும் அமைப்பு, தமிழ்நாட்டில் மின் சூழல் பற்றி ஆராய்ச்சி செய்து ஓர் அறிக்கை யைத் தந்தது. அந்த அறிக்கைதான் நாம் மேலே குறிப்பிட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் டிம் பக்லி, ‘‘இன்னும் 10 ஆண்டுகளில் காற்றாலை மின்சார உற்பத்தியை இரண்டு மடங்காகவும், சூரியசக்தி மின் சாரத்தை ஆறு மடங்காகவும் உயர்த் தும் அளவுக்கு வளங்கள் தமிழகத்தில் உள்ளன. காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்திட்டங்களுக்கு நல்ல முதலீடு களும் கிடைக்கின்றன. ஆனாலும்கூட, தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டாமல், அதிக செலவு பிடிக்கும், இயற்கைக்குப் பெரும் கேடு விளைவிக்கிற நிலக்கரி மின் நிலையங்களைக் கட்டுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது’’ எனக் குற்றம் சாட்டுகிறார்.
தமிழகத்தில் இப்போதுள்ள நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களை இரு மடங்காக உயர்த்துவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. 22,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு மின் நிலையங்களை அமைக்க உள்ளார்கள். செய்யூரில் 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மெகா மின் நிலையம் அமையவுள்ளது. ஆனால், ‘‘நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய கேடு” என்கிற டிம் பக்லி, ‘‘தமிழகத்தில் இப்போதுள்ள பல காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், காலாவதியான பழைய தொழில்நுட்பத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றினால், மின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தலாம்’’ என யோசனை சொல்கிறார்.  

இந்தியாவின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் சக்தியில், ஐந்தில் ஒரு பங்கைத் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 35 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து கிடைக்கிறது. இந்திய அளவில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், அது இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. தமிழக அரசு இன்று மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள்தான், நாளைய தலைமுறைக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும்.
சற்று பின்னோக்கிப் போய், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மின்வெட்டுச் சூழலை நினைத்துப் பாருங்கள். புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கு மாறவில்லை என்றால், அடுத்த பத்தாண்டுகளில் அந்தக் காலம் மீண்டும் திரும்ப வருவது மட்டுமல்ல, அதுவே நிரந்தரமாகும் ஆபத்தும் உண்டு. அப்படி இல்லையென்றால், பெரும் பணம் செலவழித்து அரசு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்; அதன் கடன் சுமையை மக்கள்தான் சுமக்க நேரிடும்.

‘காற்றிலும், சூரிய சக்தியிலும் பணம் கிடைக்காது; நிலக்கரியை வாங்குவதில்தான் சம்பாதிக்க முடியும்’ என நினைக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மனம் மாறினால், தமிழகமே மாறிவிடும். 

- இரா.கலைச்செல்வன்

‘‘மின் வாரியத்துக்கு லாபம் கிடைக்கும்!’’

‘‘த
மிழ்நாட்டுக்கு இன்றைய சூழலில் ஒரு நாளைக்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதில், 4,300 மெகாவாட் மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடமிருந்துதான் நாம் பெறுகிறோம். குறிப்பாக, 3,300 மெகா வாட் மின்சாரத்தை அதானி, டிபி பவர் உள்பட 11 நிறுவனங்களிடமிருந்து வாங்க 15 வருட ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விலையைவிடவும் மிக அதிகமாகப் பணம் கொடுத்து மின்சாரத்தை வாங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல், 2016-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தங்க ளில் நிறைய விதிமீறல்கள் உள்ளன. குறிப்பாக, அதானி நிறுவனத்தினர் டெண்டர் தேதி முடிந்த பின்னர்தான் வந்தனர். ஆனால், அவர்களுக்கும் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதுபோல சுய லாபங்களுக்காகச் செயல்படாமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் நேர்மையாக கவனம் செலுத்தினால், அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் மின் தேவையில் 80 சதவிகிதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் பெற முடியும். மின்சார வாரியமும் நஷ்டத்தைச் சரிசெய்துவிட்டு, நல்ல லாபத்தில் இயங்க முடியும்’’ என்று சொல்கிறார், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் நாகல்சாமி.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment