Friday, February 09, 2018

ஆட்சியைக் கவிழ்க்குமா மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து?

துரை மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து, பக்தர்களின் மனதில் காயத்தையும், பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும், ஆட்சியாளர்களிடம் பதவி பற்றிய பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2-ம் தேதி, இரவு 10:30 மணி...

மீனாட்சியம்மன் கோயில் பள்ளியறை பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு ஊழியர்கள் கிளம்பிய பிறகு, பைரவ மூர்த்திக்கு இரவு அர்ச்சனை செய்ய வந்த அர்ச்சகரும், கோயில் பணியாளர் களும், சில கடைக்காரர்களும் 
76-ம் எண் கடையில் தீப்பிடிப் பதைப் பார்த்துப் பதறினர். உடன டியாக கோபுர வாசலில் பாது காப்புக்கு நின்ற போலீஸாரிடம் கூற,  தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் பறந்தது. 

திகுதிகுவென தீ பரவியது போலவே, கோயிலில் தீப்பிடித்த தகவல் காட்டுத்தீயாகப் பரவ, அங்கு மக்கள் குவிந்தனர். மேற்கு கோபுரம் அருகே சிறிய தீயணைப்பு வாகனம் ஒன்று இருந்தும், அதில் குறைவாகவே தண்ணீர் இருந்தது. முக்கால் மணி நேரம் கடந்த பிறகு, தீயணைப்பு நிலையங்களிலிருந்து லாரிகள் வந்தன. அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். தீயணைப்புத் துறையினர் மட்டுமன்றி, பொதுமக்களும் குடங்களில் தண்ணீரைக் கொண்டு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில், வசந்தராயர் மண்டப மேற்கூரைப் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தீயை அணைக்க உதவுவதாகச் சொன்ன பொதுமக்களை போலீஸார் உள்ளே அனுமதிக்க வில்லை. அதனால், மாவட்ட நிர்வாகத்தையும் கோயில் நிர்வாகத்தையும் எதிர்த்து இந்து அமைப்பினர் கோஷம் போட்டனர். விடிய விடிய போராடித் தீயை அணைத்தாலும், இரண்டு நாள்களாக அந்தப் பணி தொடர்ந்தது. 

தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட யாருக்கும் அனுமதி இல்லை. ‘‘பெரிய அளவுக்குச் சேதமில்லை’’ என்று அதிகாரிகள் சொல்லிவருகிறார்கள். ஆனால், ஆயிரம்கால் மண்டபம் அருகில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்துவிட்டது. அந்தப் பகுதியிலுள்ள தூண்களும் கூரையும் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘‘பாண்டி கோயிலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆடம்பரமாக நடத்திய தன் குடும்ப விழாவை, மீனாட்சியம்மன் கோயில் போன்ற செட் போட்டு கிடாவெட்டு நடத்தி அமர்க்களப்படுத்தினார். அதனால், அம்மனுக்கு வந்த கோபம்தான் இந்த விபத்து’’ என்கிறார்கள் சிலர். ‘‘ஆட்சியில் ஏற்படும் தவறுகளால் தனக்கு வரும் கோபத்தை அக்னி மூலமாகத்தான் தெய்வம் வெளிப்படுத்தும். மன்னருக்கும் மக்களுக்கும் ஆபத்து என்பதை இதுபோன்ற கோயில் விபத்துகளே உணர்த்தும். இந்த விபத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பாள் மீனாட்சியம்மன்’’ என்றும் சிலர் கூறி வருகிறார்கள். 

இந்த நிலையில், ‘அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும்’ என்று போராடிவந்த இந்து அமைப்புகள், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தீவிரமாகி, பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர். 

மீனாட்சியம்மன் கோயிலில் இதே கிழக்கு கோபுரம் 2015-ம் ஆண்டு மின்னல் தாக்கிச் சேதமடைந்தது. கடந்த அக்டோபரில் பெய்த மழையில், கிழக்கு கோபுரம் வழியாக நுழைந்த மழைவெள்ளம் கோயிலுக்குள் தேங்கியது. பொற்றாமரைக்குளம் அருகே தூண்கள் மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிரச்னை கிளம்பியது. ஜனவரி 26-ம் தேதி மடப்பள்ளியில் தீப்பிடித்தது, அதை அர்ச்சகர்களும் கோயில் நிர்வாகமும் மறைத்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து இங்கே விபத்துகளும் சர்ச்சைகளும் தொடர்கதையாக உள்ளன.
கோயிலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடை நடத்துபவர்கள், நாலைந்து தலைமுறை கடந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன் கடைகளைக் காலி செய்யச் சொன்னபோது, அதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார்கள். இந்தக் கடைகளுக்கான மாற்று இடம் தொடர்பான திட்டமும் உறக்கத்தில் உள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கடைக்காரர்கள்மீது பலரும் பாய்வதால், ‘அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரம் அருகே கடைகள் கட்டிக் கொடுங்கள்’ என்று கடைக் காரர்கள் கேட்கிறார்கள்.
‘‘சந்தேகப்படும்படியான பொருள்களையோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களையோ கோயிலுக்குள் கொண்டுசெல்வதை போலீஸ் அனுமதிப்பதில்லை. ஆனால், ஆயிரம் வாட்ஸ் சக்திக்கும் மேலான ஏகப்பட்ட  விளக்குகளைப் பொருத்தி, அந்த வெப்பத்தில் இளகும் பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் பொருள்கள், காகிதங்கள், அட்டைகள் ஆகியவற்றைக் கடைக்காரர்கள் வைத்திருப்பதைக் காவல்துறையினர் கவனிக்கத் தவறிவிட்டனர். 2010-ல் சுற்றுலாக் கழகம் ஒதுக்கிய நிதி மூலம், குன்னத்தூர் சத்திரத்தில் மூன்று கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்டி முடித்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது’’ என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

‘‘மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள வர்த்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. கட்டடங்களைக் கணக்கெடுக்கும் வேலைகள் நடந்தன. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் வாங்க வேண்டியதை வாங்கி விட்டு அமைதியாகி விட்டார்கள். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. கோயிலுக்குள் உள்ள கடைகளில் என்ன மாதிரியான பொருள்கள் விற்கலாம் என்ற விதிகள் உள்ளது, ஆனால், அதையும் மீறி பல பொருள்களை விற்கிறார்கள். அதனால்தான் தீயை அணைக்க முடியவில்லை’’ என்கிறார் வழக்கறிஞர் முத்துக்குமார்.
பக்தர் சிவக்குமார், ‘‘தரிசனத்துக்குக் கட்டணம் வாங்குவதால், தினமும் கோயில் நிர்வாகத்துக்குப் பல லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால், கோயிலைப் பாதுகாக்க எதையும் செய்யவில்லை. கோயிலுக்குள் நெருக்கமான இடத்தில் கடைகள் வைத்துள்ளனர். விளையாட்டு பொம்மைகள், கைவினைப் பொருள்கள், பூஜைக்குத் தேவையான நெய்தீபம் விற்கும் கடைகள் இருந்ததால்தான் மளமளவென்று தீப்பிடித்தது’’ என்றார்.

இந்து இளைஞர் சேனா மாநிலத் தலைவர் சோலைக்கண்ணன், ‘‘தீ விபத்து சம்பந்தமாக நீதி விசாரணை வேண்டும். இனி கோயிலுக்குள் எந்தக் கடையும் இருக்கக்கூடாது. அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், இணை ஆணையாளர் உடனே பதவி விலக வேண்டும். கோயிலுக்கு வி.ஐ.பி-க்கள் வரும்போது மட்டும் தான் தக்கார் வருவார். மற்றபடி யாரும் அவரைச் சந்திக்க முடியாது. புதுமண்டத்தி லுள்ள கடைகளையும் காலி செய்து வசந் தமண்டபம் ஆக்கவேண்டும். அங்குள்ள சிற்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்’’ என்றார்.

மதுரை ஆதீனமும், ‘‘சிவன் பார்வதியின் கோபத்தினாலும், ஞாநிகளின் சாபத்தினாலும் இந்த விபத்து ஏற்பட்டது. பணத்தைக் குறியாகக் கொண்டுள்ள அறநிலையத் துறை கலைக்கப்பட்டு, செல்வந்தர்களிடம் கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். ‘‘ஆதீன மடம்மீதுள்ள பல புகார்களை அறநிலையத் துறை விசாரித்து வருவதால் அந்தக் கோபத்தை இதில் அவர் பயன்படுத்திக் கொண்டார்’’ என்கின்றனர் பலர்.
பி.ஜே.பி மாநிலச் செயலாளர் சீனிவாசன், ‘‘வழிபாட்டுத்தலத்தை வர்த்தகத் தலமாக்கியதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மீனாட்சி யம்மன் கோயில் நம் பொக்கிஷம்,.அதில் ஏற்பட்டுள்ள சேதத்தை சாதாரணமாகச் சொல்ல முடியாது. கோயிலைப் பாதுகாக்க அறநிலையத் துறை தவறிவிட்டது. அதனால்தான் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறோம். பக்தர்களிடம் பணத்தைப் பிடுங்குவதில்தான் நிர்வாகம் ஆர்வம் செலுத்துகிறது’’ என்றார்.

பா.ம.க-வின் மாநிலத்துணைத் தலைவர் திலகபாமா, ‘‘வழிபாட்டுத்தலத்தை வியாபாரமாக்கி னால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால், இதைக் காரணமாக வைத்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டுமென்று சிலர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிறகு அந்தக் காலம்போல் பிராமணீயமயமாகி சமத்துவமில்லாமல் போய் விடும். அறநிலையத் துறையை முறைப்படுத்தினாலே போதும்’’ என்றார்.

கோயில் அமைந்திருக்கும் மதுரை மத்திய தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘மிகவும் மோசமான சம்பவம் இது. ஒரு விபத்து நடந்தால் அதை உடனே தடுக்கக் கூடிய எந்த வசதிகளும் இல்லை. நான் அது சம்பந்தமாக கற்றவன் என்பதால், இனி இதுபோன்ற நடக்காமல் இருக்க முடிந்த ஆலோ சனைகளைச் சொல்வேன். மற்றவர்களைவிட மீனாட்சியம்மன் கோயிலைப்பற்றி பேச எனக்கு அதிக உரிமை உள்ளது. என் தாத்தா, தந்தை ஆகியோர் அறப்பணிகள் எவ்வளவு செய்தனர் என்பது தெரியும். இதுபோன்ற சம்பவங்களை வைத்து அறநிலையத்துறையிடமிருந்து தனிப்பட்ட நபர்களிடம் கோயிலை ஒப்படைக்க பி.ஜே.பி-யினர் சொல்கிறார்கள். அது ஆபத்தானது, அறநிலையத் துறையைச் சரிசெய்ய வேண்டும். அனைத்து சாதியினரும் கோயிலில் வழிபடவும், அதை நிர்வாகம் செய்யும் வகையிலும் அறநிலையத் துறையை நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கினார் எங்கள் தாத்தா. அந்தச் சமூகநீதிக் கொள்கையை மாற்ற முடியாது’’ என்றார்.
தீப்பிடித்த தகவல் பரவியும் அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ வரவில்லை என்ற கோபம் மக்கள் மத்தியில் எழும்பிய நிலையில், பிப்ரவரி 3-ம் தேதி மாலையில் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் வந்தனர். சேவூர் ராமச்சந்திரன், ‘‘புராதனச் சின்னங்கள், சிலைகளுக்கு எந்தப் பாதிப்புமில்லை. 20 கடைகள் சேதமடைந்துள்ளன’’ என்று பொதுவாகக் கூறிவிட்டுச் சென்றார். 5-ம் தேதி மதுரை வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘சேதங்கள் மதிப்பீடு செய்யப்படும். சேதமான பகுதிகள், ஆறு மாத காலத்துக்குள் ஆகம விதிகளின்படி சீரமைக்கப்படும். கோயிலின் உள்ளே அமைந்துள்ள கடைகளால்தான் விபத்து ஏற்படுகிறது எனத் தெரிந்தால் கடைகள் முற்றிலுமாக அகற்றப்படும். அறநிலையத்துறை வசம் இருந்தால்தான் கோயில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்’’ என்றார். 

மொத்தத்தில் இந்த விபத்து, நாம் பல்லாயிரம் கோயில்களை எவ்வளவு ஆபத்தான சூழலில் வைத்திருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

- செ.சல்மான், படங்கள்: வீ.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment