Monday, February 12, 2018

கமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்!

கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து எனப் பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ‘தாதா’க்கள் உள்பட 73 ரவுடிகள், போலீஸில் பிடிபட்டுள்ள சம்பவம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சென்னை மாநகரில் உள்ள ரவுடிகள் பட்டியலை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சமீபத்தில் கேட்டு வாங்கியுள்ளார். ஒரு காவல் மாவட்டத்தில் 422 ரவுடிகள், இன்னொரு காவல் மாவட்டத்தில் 327 ரவுடிகள்  என ஒவ்வொரு காவல் மாவட்டத்திலிருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த ரவுடிகளில் பலர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், சென்னை புறநகர்ப் பகுதியில் முக்கிய ரவுடிகள் ஒன்றுகூடப்போவதாகவும், அப்போது, எதிர் டீமில் உள்ள இரண்டு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட ஒரு டீம் திட்டமிட்டிருப்பதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. அதையடுத்து, ரவுடிகள் ஒழிப்புப் பிரிவின் கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி, துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் ஸ்டீபன் உள்ளிட்ட அதிகாரிகள் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்த முடிவுசெய்தனர். 

பள்ளிக்கரணையில் பிப்ரவரி 6-ம் தேதி இரவு வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டபோது, பிடிவாரன்ட் நிலுவையில் இருந்த குற்றவாளிகள் சிலர் சிக்கினர். அவர்களைக் காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்று, அவர்கள் வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பல்லு மதன் என்ற ரவுடி தன் செல்போனைத் தர மறுத்துள்ளார். ‘‘சார், நான் அவசரமாகப் போகணும். என்னை விட்டுடுங்க. மாங்காட்டில் என் நண்பன் வீட்டில் ஒரு ஃபங்ஷன்...’’ என்று கெஞ்சியிருக்கிறார். ஆனாலும், அவரிடமிருந்து போலீஸ்காரர் ஒருவர் செல்போனை வாங்கிவிட்டார். அந்த செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. ‘‘பார்ட்டி இருக்கு... வாடா’’ என்று எதிர்முனையில் பேசிய நபர் கூறியுள்ளார். உடனே, பல்லு மதனிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, ‘‘பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் பிரபல தாதா பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்குது. ஒட்டுமொத்த சிட்டி தாதாக்களும் அங்கு வரப்போறாங்க. அங்குதான் நானும் போய்க்கிட்டிருக்கேன்’’ என்று பல்லு மதன் சொல்லியிருக்கிறார். போலீஸ் அலெர்ட் ஆனது.
பல்லு மதனிடம், ‘‘எத்தனை ரவுடிகள் வருவார்கள்? எத்தனை பேரிடம் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் உள்ளன. அந்த இடத்திலிருந்து தப்பிக்க எந்தெந்த ரூட்கள் இருக்கின்றன’’ என்ற விவரங்களை போலீஸார் கறந்தனர். ரவுடிகளைப் பிடிப்பதற்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் திட்டம் வகுக்கப்பட்டது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை மார்க்கமாக மலையம்பாக்கம் போகும் பாதை... பூந்தமல்லி - நசரத்பேட்டை வழியாக மலையம்பாக்கம் போகும் இன்னொரு பாதை... குன்றத்தூர், நத்தம், வழுதலம்பேடு, திருநீர்மலை, முடிச்சூர் வழியாக மலையம்பாக்கம் செல்லும் மூன்றாவது பாதை என அனைத்துப் பிரதானச் சாலைகளும், உள்வட்டச் சாலை வழிகளும் மார்க் செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில், பல்லு மதன் சொன்ன இடத்தை நோக்கி வாடகை கார்களில் ஸ்பெஷல் டீம் பறந்தது. ரவுடிகள் கூடியிருந்த ஸ்பாட்டுக்கு 500 மீட்டருக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு, உள்வட்டச் சாலையில் முன்னேறிய போலீஸார், நடந்தே ரவுடிகள் கூடியிருந்த இடத்தை அடைந்தனர். உள்வட்டச் சாலைவழியாக வந்த ஸ்பெஷல் டீம், துப்பாக்கி முனையில் ரவுடிகளை எச்சரித்தபடி என்ட்ரி ஆனது. அங்கே இருந்த ரவுடிகளில் பலர், போலீஸைப் பார்த்தவுடன் தப்பி ஓடவில்லை. அவர்கள் போதையில் இருந்தனர். ஆனாலும், ‘பர்த் டே பேபி’ பினு உள்ளிட்ட சில தாதாக்கள் தப்பியோடிவிட்டனர். சுமார் 50 ரவுடிகள் தப்பிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. சிக்கிய ரவுடிகள் 73 பேரை, அள்ளிப்போட்டுக்கொண்டு சென்னைக்குத் திரும்பியது ஸ்பெஷல் டீம். பிடிபட்டவர்களின் ஹிஸ்டரியைப் பார்த்து சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மிரண்டுவிட்டார்.
‘‘இத்தனை ரவுடிகள் இவ்வளவு காலம் போலீஸில் சிக்காமல் சுதந்திரமாக எப்படி நடமாடினார்கள்’’ என்பது போன்ற கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள்.

- ந.பா.சேதுராமன்

ரவுடிகளின் வாட்ஸ்அப் குரூப்!

சிக்கியவர்களில் முக்கியமான தாதா, மதுரவாயல் ஜெனிஸன். இவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். ஜெனிஸனின் தம்பி நிர்மல், புளியந்தோப்பு சரவணன், பட்டாபிராம் மாட்டு சங்கர், போலி வழக்கறிஞர் மாதவரம் சரவணன் உள்பட ஹிட் லிஸ்ட்டில் உள்ள 12 பேர் இந்த ஆபரேஷனில் பிடிபட்டுள்ளனர் என்கிறது போலீஸ் வட்டாரம்.

பிரபல அரசியல் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பில் உள்ள ஒருவர், தன் அரசியல் எதிரிக்குத் தன் பலத்தைக் காட்டப்போவதாகச் சொல்லிவந்துள்ளார். சூளைமேடு பினு, அந்த ‘மாவட்ட’த்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால், எச்சரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சியாகவே இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் இருந்ததாம்.

‘‘ஓர் இடத்தை வெற்றிகரமாக விலை பேசி முடித்துவிட்டோம். அதற்கு கமிஷனாக மட்டும் ஒன்றரை ‘சி’ கிடைத்துள்ளது. என் பர்த் டே-க்கு எல்லோரும் வந்தால்,  உங்களைத் ‘தெறிக்க’விடலாம்னு நினைக்கிறேன்’’ என்று சொல்லித்தான் பினு அனைவரையும் அழைத்துள்ளார். கொண்டாட்டத்தில் பங்கேற்ற தாதாக்கள் பலருக்கும் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக பினு அளித்துள்ளார். 

*  பிடிபட்ட ரவுடிகளில் சிலர், ‘பத்திரிகையாளர்’ அடையாள அட்டைகள் வைத்திருந்தனர். இவர்கள், தங்கள் வாகனங்களில் ‘பிரஸ்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சுதந்திரமாக நடமாடியுள்ளனர்.

*  இந்த ரவுடிகள் வாட்ஸ்அப் குரூப்பும் வைத்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ரவுகள் அந்த குரூப்பில் உள்ளனர்.

தப்பியோடிய கனகு என்ற கனகராஜ்,  விக்கி என்ற விக்னேஷ் ஆகியோர் வடசென்னை பார்ட்டிகள். புளியந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கொத்தளம் ஆகிய சுடுகாடுகளில் இரவு நேரத்தில் பள்ளம் தோண்டிவைத்து, ஆட்களைத் தூக்கிவந்து மிரட்டிக் காரியம் சாதிப்பது இவர்களின் ஸ்டைல். 

பினு செய்யவிருந்த இரு கொலைகள்!

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பின்னி என்ற பினு, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் ‘ஏ ப்ளஸ்’ ‘ரேங்க்’கில் உள்ள குற்றவாளி. கொலை உள்பட எல்லா குற்றச்செயல்களிலும் ஈடுபடுபவர்கள், ‘ஏ ப்ளஸ்’ லிஸ்ட்டில் வருவார்கள். பினுமீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. இரு முறை என்கவுன்டரிலிருந்து தப்பியுள்ளார். இவர், சூளைமேட்டில் டான்ஸ் மற்றும் கராத்தே வகுப்புகளை நடத்திவந்துள்ளார். இவருக்குச் சொந்தமான கார் உள்ளிட்ட வாகனங்கள், அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன என்று சொல்லப்படுகிறது. இவருக்கு கால் டாக்ஸிகளும் ஓடுகின்றன.

பினுவும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ‘சி.டி’ மணி என்பவரும் இணைந்து ஆரம்பகாலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில், சி.டி விற்றதால், ‘சி.டி’ மணி என்று பெயர் வந்துள்ளது. வேளச்சேரியில் தி.மு.க பிரமுகர் ஒருவரின் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் சி.டி.மணி குற்றவாளி. பலமுறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுவந்தவர். சில பிரச்னைகளால் பினுவும் மணியும் பிரிந்துவிட்டனர். மணி இப்போது வேளச்சேரி பகுதியில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 

தன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு     ‘சி.டி’ மணிக்கு பினு தூது அனுப்பியிருக்கிறார். ஒரு காலத்தில் தன் கையாளாக இருந்து தற்போது சி.டி மணியிடம் அடைக்கலமாகியுள்ள அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் என்ற ரவுடிக்கும் பினு தூது அனுப்பியிருக்கிறார். இவர்கள் இருவரையும் பிறந்த நாள் விழாவுக்கு வரவழைத்துத் தீர்த்துக்கட்ட பினு திட்டமிட்டிருந்தார் என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அந்தத் தகவல் போலீஸாருக்கு வந்ததால்தான், அன்றைய தினம் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில்தான், பல்லு மதன் போலீஸில் சிக்கியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குக் கடைசிவரை சி.டி மணியும், ராதாகிருஷ்ணனும் போகவில்லை. அதனால், அவர்கள்தான் போலீஸில் தங்ககளைச் சிக்கவைத்ததாக பினு தரப்பு சந்தேகிக்கிறது. சி.டி மணியும் ராதாகிருஷ்ணனும் தற்போது தலைமறைவாக உள்ளனர். பினு தரப்பினரால் இவர்களின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதால், இவர்கள் இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment