Monday, February 12, 2018

பிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை! - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பிறந்த வீட்டுச் சொத்து மறுக்கப்படும் பெண்கள், இனி தயக்கமின்றி நீதிமன்றத்தை நாடலாம். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் சிறப்புமிக்க தீர்ப்பு, அந்தப் பெண்களுக்குச் சொத்துரிமையை உறுதி செய்யும். 

‘குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ என்கிற 2005-ம் ஆண்டு சட்டத்தின் முக்கிய நோக்கத்தை மேற்கோள்காட்டி, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தங்களின் தந்தைவழிக் குடும்பச் சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று நீதிமன்றம் செல்ல, கீழமை நீதிமன்றங்களில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்புதான் அது.
பொதுவாக ஒரு சட்டம் அமலுக்கு வரும்போது, அது இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அமலுக்கு வரும். ஆனால், ‘‘2005-ம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டத்தின் நோக்கப்படி, அந்த ஆண்டுக்கு முன்பே பிறந்திருந்தாலும் பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமையுண்டு. 2005-ம் ஆண்டு சட்ட அமலுக்கு முன்பு சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் இத்தீர்ப்புப் பொருந்தும். பெண்களுக்கான குடும்பச் சொத்தை வழங்குவதில் அவர்கள் பிறந்த ஆண்டை கணக்கில் கொள்ளக்கூடாது” என்கிறது இந்தத் தீர்ப்பு.

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 ஜூன் 17-ம் தேதி அமலுக்கு வந்தது. இதில் திருத்தம் செய்து, பெண்களும் குடும்பச் சொத்தில் பங்கு பெறுவதற்கு வழிவகை செய்யும் ‘இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம்’ 2005 செப்டம்பர் 9-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனா லும், இன்றளவும் பெண்கள் நீதிமன்றத்தை நாடும்போது பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் யதார்த்தச் சூழலை விளக்குகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா.
“முந்தைய தலைமுறைகளில் திருமணத்தின்போது ஒரு பெண் ணுக்கு நகைகள், சீர்வரிசைப் பொருள்களை மட்டும் கொடுத்துவிட்டுச் சொத்தில் பங்கு கொடுக்காமல் இருந்தனர். ஒருவேளை கணவனால் அந்தப் பெண் கைவிடப்பட்டால், தன் பெற்றோர் வீட்டில் வந்து வாழலாம். தவிர, பெற்றோர் அல்லது உறவினர் தாமாக முன்வந்து ஒரு பெண்ணுக்குக் குடும்பச் சொத்துகளை வழங்கலாம்; அல்லது ஒரு பெண் பிறரிடம் சொத்துகளைத் தானமாகப் பெறலாம். மற்றபடி, தன் உழைப்பில் சம்பாதித்த சொத்தில் மட்டுமே ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்தப்பெண் அப்படி உழைத்து சம்பாதித்த சொத்துகள் கணவர் பெயரில் இருந்தால், அதிலும் அப்பெண்ணுக்கு உரிமையில்லை.இப்படித்தான் 1956-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘இந்து வாரிசுரிமைச் சட்டம்’ சொன்னது.

இந்த நிலையில், ‘திருமணமாகாத பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு’ என 1989-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இது முந்தைய நடைமுறையுடன் ஒப்பிடுகையில், நல்ல மாற்றத்துக்கான வழி. ஆனால், ‘சொத்து கேட்கும் அளவுக்கு வந்துவிட்டாயா? இனி, உன் தேவையை நீயே பார்த்துக்கொள். பிறந்த வீட்டுக்கும் உனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்துவிடு’ என்று அப்பா வீட்டில் சொத்துக் கேட்கும் பெண்கள் ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்க்கப்பட்டார்கள்; விரோதிகளாக நடத்தப்பட்டார்கள். இப்படிக் குடும்பச் சூழல் கெட்டுவிடக்கூடாது என்பதால், சட்டமே கூறிய பிறகும் பெரும்பாலான பெண்கள் தங்களின் சொத்துரிமையைக் கேட்காமலே இருந்தனர்’’ என்கிற அஜீதா, 1989 மற்றும் 2005-ம் ஆண்டு சட்டத் திருத்தங்களுக்குப் பிறகான நிலையை விளக்கினார்.

“படித்த பெண்கள் சிலர் மட்டும் தைரியமாக நீதிமன்றங்களை நாடினர். இதனால், 1989-ம் ஆண்டின் சட்டத்திருத்தம் பெண்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தையோ, சமத்துவத்தையோ கொண்டு வருவதற்குப் போதுமானதாக இல்லை. இப்படி இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்களின் சொத்துரிமைக்குப் பல்வேறு வகையில் சட்டத்திருத்தங்கள் நடைமுறையில் இருந்தன. மத்திய அரசு கொண்டுவந்த 2005-ம் ஆண்டின் புதிய சட்டத் திருத்தம் மூலமாக ‘இந்து வாரிசுரிமைச் சட்டம்’ மாற்றப்பட்டது. அதன்படி, ‘பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சரிநிகர் சமத்துவ உரிமை உள்ளது’ என்னும் புரட்சிகரமான சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒரு பெண் தனக்கான குடும்பச் சொத்துரிமையைப் பெற எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை என்றாலும், ‘பாசமா... பணமா?’, ‘சொத்துக் கேட்டால் சகோதரன் உறவில்லை’, ‘சொத்தை வாங்கியபின் கணவர் வீட்டில் பிரச்னை என்றால்கூட, பிறந்த வீட்டுக்கு வரக்கூடாது’ போன்ற உணர்வுச் சிக்கல்கள் இன்றுவரை தொடர்கின்றன. சட்டப்படி பெண்களுக்குச் சொத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுப்பவர்களும் உண்டு’’ என்றவர், இந்தத் தீர்ப்பில் தொடர்புடைய கர்நாடக சகோதரிகளின் வழக்குப் பற்றிப் பேசினார்.
‘‘கர்நாடகாவைச் சேர்ந்த இரு சகோதரிகள் தங்கள் தந்தையின் குடும்பச் சொத்தில் உரிமை கேட்டனர். இவர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது, 2005-ம் ஆண்டு சட்டத்திருத்தத்துக்கு முன்பு. இதைக் காரணம் காட்டியே இவர்களின் சொத்துரிமையை நிராகரித்துக் கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின. அந்தப் பெண்கள் உச்ச நீதிமன்றம் செல்ல, ‘ஒருவர் பிறக்கும்போது சட்டம் நடைமுறைக்கு வந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் வாழும் காலம் மற்றும் தன் உரிமையைக் கோரும் தருணத்திலும் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தாலே பொருந்தும். 2005-ம் ஆண்டு சட்டத்திருத்தத்தில், ‘இச்சட்ட அமலுக்கு முன்பாக குடும்பச் சொத்து பிரிக்கப்பட்டு மற்றவர்களுக்கு விற்கப்பட்டிருந்தாலோ, அக்குடும்பத்தினரே சொத்தை பிரித்துப் பங்கிட்டிருந்தாலோ மட்டும்தான் பெண்கள் சொத்துரிமை கேட்க முடியாது. இதுவரை பிரிக்கப்படாத ஒரு குடும்பச் சொத்தில் அக்குடும்பப் பெண்களுக்கு உரிமையுள்ளது’ எனக் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பெண்களின் கோரிக்கை நியாயமானது’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ‘சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர, அதனுள் இருக்கும் நுணுக்கங்களை ஆராய்ந்து உரிமைகளை மறுப்பதல்ல நீதிமன்றங்களின் வேலை’ எனத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி 2005-ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தத்துக்குப் பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் நீதிபதிகள். இது, முந்தைய 2005-ம் ஆண்டு சட்டத்திருத்தத்தை முழுமையாக உறுதிப்படுத்தி, அதன் நோக்கத்தை நினைவூட்டும் தீர்ப்பு” என்கிறார் அஜிதா.

பெண்களுக்கான சம உரிமையை நோக்கிய பயணத்தில் இது மைல்கல் தருணம்.  

- கு.ஆனந்தராஜ்

பெண்கள் சொத்துரிமை... கடந்து வந்த பாதை!

1956-ம் ஆண்டு ‘இந்து வாரிசு உரிமைச் சட்டம்’ இயற்றப்பட்டது. அந்தச் சட்டம், ‘கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு. பெண்களுக்கு எவ்வித சொத்துரிமையும் இல்லை’ என்றது.

*  தங்களின் சொத்துரிமைக்காக பெண்கள் பல வகையிலும் குரல் எழுப்பினர். 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக அப்போதைய தமிழக அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. அதன் மூலம், ‘இந்தச் சட்ட அமலுக்கு முன்பு பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்தில், திருமணமாகாத பெண்கள் மட்டுமே உரிமை கோரலாம்’ என்றது.

*  2005-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. ‘பெண் என்பவர் அவருடைய குடும்பத்தின் பங்குதாரராகக் கருதப்பட்டு, கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆணுக்கு இணையான உரிமை அவருக்கு (மனைவி மற்றும் மகள்) வழங்கப்பட வேண்டும். மேலும், அந்தச் சட்ட அமலுக்குப் பிறகு பிரிக்கப்படும் சொத்துகளுக்கு மட்டுமே பெண்கள் உரிமை கோரலாம்’ என்கிறது இந்த சட்டத் திருத்தம்.
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment