Thursday, February 15, 2018

“அது மண் குவாரி இல்ல... எங்களுக்குப் புதைகுழி!”

கருணாநிதி தொகுதியில் கதறும் கிராமங்கள்
‘இன்னும் மூன்றே மாதங்களில் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாத நகரம் என்கிற அபாய பட்டியலில் இடம்பிடிக்க இருக்கிறது தென் ஆப்பிரிக்காவின் தலைநகர்களில் ஒன்றான கேப்டவுன்’ என்ற செய்தி உலகம் முழுக்கப் பதற்றத்துடன் விவாதிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் ஏகப்பட்ட ஊர்கள் இடம்பிடித்து வெகுநாள்களாகின்றன. இதில் ஓர் ஊராகப் பதறிக் கொண்டிருக்கிறது... தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் உள்ள எண்கண் கிராமம். மண் குவாரி என்கிற பெயரில், ஆற்றங்கரையையொட்டியுள்ள பகுதிகளைச் சூறையாட அரசின் அனுமதியுடன் ஆளுங்கட்சிக்காரர் ஒருவர் களமிறங்க, ஊரே கலங்கி நிற்கிறது.

‘‘எங்கள் ஊரில் ஓடும் வெட்டாறு, மிகப் பெரிய ஆறு. இதிலிருந்துதான் ஓடம்போக்கி எனும் ஆறு பிரிந்து திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. எட்டு அடி ஆழம் தோண்டினாலே தண்ணீர் பொங்கும். அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை கைமீறிவிட்டது. இப்போது, கொஞ்சநஞ்சமிருக்கும் நிலத்தடி நீருக்கும் வேட்டு வைக்கும் வகையில், ஆற்றங்கரையோரம் மண் குவாரி அமைக்கிறார்கள். இந்த ஆறுகளில் எப்போது வெள்ளம் பெருக்கெடுத்தாலும் எங்கள் ஊர் மூழ்குவது வாடிக்கை. 2008-ல் வெட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது கோணவாய்க்கால் படுகையில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. எண்கண், பூங்காவூர், கொத்தங்குடி, மணக்கால் அய்யம்பேட்டை, தாழ்ப்பாள், காப்பணாமங்கலம், உப்புக்கடை, அரசவனங்காடு உள்பட பல கிராமங்கள் நீரில் மூழ்கின. நாங்கள் எண்கண் முருகன் கோயிலில் 15 நாள்கள் தங்கியிருந்தோம்.
இயற்கையாகவே எளிதில் உடைப்பெடுக்கும் அந்த இடத்துக்கு அருகேதான் மண் குவாரிக்கு (சவுடு மணல்) அனுமதித்துள்ளது அரசு. இது, 10 கிராமங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமம். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சுடுகாடாகிவிடும்’’ என வேதனை பொங்கச் சொன்னார் கிராம விவசாய நலச் சங்கச் செயலாளரான வெங்கடாச்சலம்.

‘ஆற்றில் உடைப்பு எடுக்கும் இடம் என்பதால், மண் குவாரி அமைக்கக்கூடாது’ என்று கடந்த ஆண்டே தாசில்தார் தொடங்கி, முதலமைச்சர் வரை மனு கொடுத்துள்ளனர் மக்கள். மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்தபோது, ‘குவாரி அமைக்க அனுமதி தரமாட்டோம்’ என்று உறுதியும் அளித்துள்ளார். அதையெல்லாம் மீறி மண் குவாரி அமைக்க ஆளும்கட்சிப் பிரமுகருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்குமுன் பொக்லைன், லாரியுடன் மண்குவாரி ஆட்கள் வந்து இறங்கவே, ஊர் மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் வந்து உறுதிமொழி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

‘‘இப்படித்தான் ‘குடிமராமத்துப் பணி’ என்கிற பெயரில் குளங்களில், 30 அடி ஆழத்துக்கும் மேலாகத் தோண்டி, மணலையும் எடுத்து விற்றுள்ளனர். அதனால், நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய்விட்டது. இந்த லட்சணத்தில் ஆற்றங்கரையிலும் மண்குவாரி அமைந்துவிட்டால், நாங்களெல்லாம் ஊரைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்’’ என்று குமுறுகிறார்கள் ஊர் மக்கள்.

குவாரி உரிமையாளர் முருகானந்தத்திடம் பேசியபோது, ‘‘உரிய விலைகொடுத்து நிலம் வாங்கி, முறைப்படி அரசு அனுமதி பெற்றுள்ளேன். ஆற்றில் உடைப்பு எடுக்கும் என்று ஊர்மக்கள் சொல்லும் இடத்தில் கான்க்ரீட் சுவர் கட்டித்தரவும், கோயில் திருப்பணிக்கு நன்கொடை தரவும் தயாராக உள்ளேன். அரசு அனுமதித்த அளவை மீறி மண் எடுக்கமாட்டேன் என்ற உறுதியையும் தருகிறேன்’’ என்றார்.  
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்மல்ராஜிடம் கேட்டபோது, ‘‘மணல் குவாரிக்கு அனுமதி தரமாட்டோம் என்று நான் கூறியது உண்மை. ஆனால், அங்கு சவுடு மண் எடுப்பதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பணிக்கு அந்த மண் முக்கியத் தேவையாக இருக்கிறது. எனினும், கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவதாக மக்கள் புகார் தந்திருப்பதால் ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் ஆகியோரை ஆய்வுசெய்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று சொன்னார்.

‘தூர் வாருகிறோம்’ என்று குளங்களைச் சுரண்டியவர்கள், ‘மண் குவாரி’க்கு அனுமதி வாங்கி ஆற்றையே சூறையாடிவிடக்கூடும். தன் தொகுதிக்குள் நடக்கும் இந்த ஜீவாதாரப் போராட்டம் கருணாநிதியின் காதுகளுக்குக் கேட்டாலாவது ஓர் அறிக்கையை விட்டே உலுக்கியிருப்பார். ஆனால்?

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார், செ.ராபர்ட்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment