Friday, February 09, 2018

பவர் இல்லாத பன்னீர்... பலம் காட்டிய பழனிசாமி!

‘‘அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலையில்தான் அவர் இருக்கிறார் என்பது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது’’ என்று புலம்புகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தினகரன் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயண’த்தை தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிய அதே நேரத்தில், அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர் களின் கூட்டமும் தொடங்கியது. உறுப்பினர் சேர்க்கை குறித்தும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிப்பதற்காக இந்தத் திடீர் கூட்டம் நடைபெற்றதாகக் கூறினாலும், கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் தினகரனின் ஆதரவாளர்கள் வரிசையாக நீக்கப்பட்டு வருகிறார்கள். அந்த இடங்களில் இதுவரை புதிய நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்துக் கடும் விவாதம் எழுந்துள்ளது. ‘‘அதற்காகத்தான் கட்சித் தேர்தலை விரைவில் நடத்த உள்ளோம்’’ என்று சொல்லி சமா ளித்துள்ளார்கள் ஒருங்கிணைப்பாளர் பன்னீரும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமியும். ‘‘கட்சியை விட்டு தினகரன் அணிக்குச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வாருங்கள்’’ என்று சிலர் சொல்ல, அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அம்மா இருந்தபோது, ஒரு கோடியே இரண்டு லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். அந்த எண்ணிக்கையைத் தாண்டி நாம் உறுப்பினர் களைச் சேர்க்க வேண்டும். ஸ்மார்ட் அட்டையாக உறுப்பினர் அட்டை வழங்க இருப்பதால், போலியாக உறுப்பினர் எண்ணிக்கையைக் கணக்குக் காட்ட முடியாது. ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் தோல்வி அடைந்ததற்குக் கட்சியின் கட்டமைப்புச் சரியில்லாமல் போனதும் ஒரு காரணம். ஒரு வட்டச் செயலாளரின் கீழ் 20 பூத்கள் வரை வருகின்றன. அதனால் நாம் ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு கிளைச்செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும். நகரங்களிலும் கிளைக்கழகங்களை உருவாக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார். 
பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் கண்டிப்பாக வரும். அதேபோல் டிசம்பர் மாதத் துக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதனால் பிப்ரவரி மாதத்துக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்து, உள்கட்சித் தேர்தலையும் நடத்திவிட வேண்டும். அதற்குத் தயாராக இருங்கள்’’ என்றார். 

அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எழுந்து, ‘‘கட்சிக்காரர்கள் கொடுக்கும் கோரிக்கை எதையும் அமைச்சர்கள் செய்துதருவ தில்லை என்ற ஆதங்கம் தொண் டர்களிடம் உள்ளது’’ என்று சொன்னார். உடனே பன்னீர் செல்வம் எழுந்து அமைச்சர்கள் பக்கம் பார்த்து, ‘‘இப்படியான புகார் தொடர்ச்சியாக வருகிறது. சொந்தபந்தங்களுக்கு அரசு வேலைக்காக வந்திருக்கும் இன்டர்வியூ கார்டுகளுடன் வரும் கட்சிக்காரர்களுக்குக்கூட சலுகை காட்டுவதில்லை என்று புலம்புகிறார்கள். கட்சியின் தொண்டர்கள் நமக்கு முக்கியம். எனவே கட்சிக்காரர்களை அனுசரித்துப் போங்கள்’’ என்று அட்வைஸ் செய்துள்ளார். அதே போல் கட்சிக்காரர்கள் கொண்டுவரும் டிரான்ஸ்ஃபர் போன்ற சிபாரிசுகளையும் செய்துகொடுக்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது அ.தி.மு.க ஐம்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்தவேண்டும் என்ற பேச்சு எழுந்தது. இதற்கு மாவட்டச் செயலாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே எடப்பாடி எழுந்து, ‘‘முதலில் கட்சியின் கீழ்மட்டத்தை வலுப்படுத்திவிட்டு அதன்பிறகு பார்க்கலாம்’’ என்று இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டினார். ஆட்சியில் மட்டுமில்லை, கட்சியிலும் எடப்பாடியே பவர்ஃபுல் இடத்தில் இருக்கிறார் என்பதை இந்தக் கூட்டம் மீண்டும் நிரூபித்தது.
இந்தக் கூட்டம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 110 நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ஓ.பி.எஸ் அணியினர் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே என்கிறார்கள். குறிப்பாக பன்னீர் அணியில் முக்கி யப் பொறுப்பில் இருந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன் எனப் பலருக்கும் அழைப்பு இல்லை. அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாததால் அழைப்பு இல்லை என்று சொல்லப் படுகிறது. பன்னீரும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். 

‘‘இரண்டு அணிகளும் இணைவதற்கு முதல் நாள் இரவு எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பன்னீர் மறந்துவிட்டார். அணிகள் இணைந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கே.பி.முனுசாமியைத் தவிர வேறு யாருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை. பத்து பேரைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. எடப்பாடி அணியினர் எங்களை ஓரம்கட்டுவதைப் பார்த்துக் கொண்டு பன்னீரும் அமைதியாக இருப்பதுதான் வேதனை. கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்குக்கூடப் போக முடியாத நிலையில் இருக்கிறோம். கட்சித் தேர்தல் நடத்திப் பொதுச்செயலாளர் ஆகும் திட்டத்தில் இருக்கிறார் பன்னீர். அவரை நம்பிய எங்கள் நிலை என்ன? தினகரன் ஆளுமை செலுத்திவரும் நேரத்தில் இவர்களின் இந்தப் பாராமுகம், எங்களைத் தினகரன் பக்கம் தள்ளிவிடும்’’ என்று குமுறுகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள். 

- எஸ்.முத்துகிருஷ்ணன்,  அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.ஜெரோம்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment