Sunday, February 18, 2018

“ரஜினியை முதல்வர் பதவியில் அமர வைப்பேன்!”

ராஜு மகாலிங்கம் அதிரடி
ஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் திடீரென அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவிக்குத் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகியாக இருக்கும் சுதாகர்தான் நியமிக்கப்படுவார் எனப் பேச்சு இருந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சந்தித்தபோது, அதற்கான ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்தவர் சுதாகர். அதனால், சுதாகரை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது. ஆனாலும், ‘சுதாகர் அடிக்கடி டென்ஷனாகிறார்’ என்பதை அறிந்து அன்றாட மன்ற நிர்வாகப் பணிகளை சுதாகரிடமும், அரசியல் திட்ட நகர்வுகளை ராஜுவிடமும் பிரித்து வழங்கியிருக்கிறார் ரஜினி. ‘இருவரும் எனக்கு இரட்டைக் குழல் துப்பாக்கிகள்... இணைந்து செயல்பட்டு மன்றத்தைப் பலப்படுத்துங்கள்’ என ரஜினி கேட்டுக்கொண்டாராம். நிர்வாகிகள் கூட்டங்களை முன்பிருந்தே இருவரும் இணைந்து நடத்துகிறார்கள்.

ராஜு, 42 வயதுக்காரர். தேவகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் படித்தவர். திருமணமானவர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர். ரஜினியின் ‘2.0’ படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அங்கிருந்தபோதுதான், ரஜினியுடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் வெளிநாடுகளுக்குப் பயணித்தார். இவரது செயல்பாடுகளை ரஜினி பார்த்தார். அதே நேரத்தில், ரஜினியின் அரசியல் ஆர்வத்தில் ஈடுபாடு காட்டினார் ராஜு. இருவரின் எண்ண ஓட்டங்கள் ஒரே கோணத்தில் இருக்க... இருவரும் கைகோத்தனர்.
இனி ராஜு தொடர்கிறார்...

“நான் சின்ன வயதிலிருந்தே ரஜினி ரசிகன். கடந்த இரண்டு, மூன்று வருஷங்களாக ‘2.0’ படத்தின் மூலம் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் யார் யாரையோ ‘தலைவர்’ என்கிறார்கள். உண்மையில் அந்த வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் ரஜினி மட்டுமே. ரஜினியை  ‘தலைவர்’ என்றுதான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் அழைக்கிறார்கள். மலேசிய பிரதமர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை ‘தலைவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆக, உலகமே அவரைத் ‘தலைவர்’ என்று ஏற்றுக்கொண்டதாகத்தான் நினைக்கிறேன். 

மொழி, மதம்... போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதநேயம் மிக்கவர் ரஜினி. அதனால்தான், அவரை இன்று உலகமே நேசிக்கிறது. அவருடன் பழகுகிறவர்கள்மீது எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை நேரில் உணர்ந்தவன். அந்த மனிதர், தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ‘சிஸ்டத்தை மாற்ற வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அது நடந்தால்தான்... ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். நம்மூர் இளைஞர்களை உலகம் முழுவதும் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். அந்த அளவுக்கு உழைப்பாளிகள். அவர்களின் ஐடியாக்கள் உதவியுடன் தமிழகத்தில் மாற்றத்தை நிச்சயமாக ரஜினி கொண்டுவருவார். அவருக்கு உறுதுணையாக நான் இருப்பேன். ரஜினியைத் தமிழக முதல்வர் பதவியில் அமர வைப்பதுதான் எனது லட்சியம்’’ என்றார் ராஜு மகாலிங்கம்.

‘‘ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களைப் புதியதாக நியமித்து வருகிறீர்களே? இதில் பணப் பேரமும், பதவி ஆசை உள்ளவர்களின் விளையாட்டும் நடப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறதே?’’ என்ற கேள்விக்கு, “ரஜினி ரசிகர் மன்றத்தில் யார் யாரெல்லாம் விசுவாசத்துடன் உழைத்தார்களோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பதவி தரப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக வடிகட்டித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க நடுநிலைத் தன்மையுடன் தேர்வு நடக்கிறது. இதில் பேரம் நடக்க வாய்ப்பே இல்லை’’ என்றார் ராஜு மகாலிங்கம்.

- ஆர்.பி.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment