Friday, February 09, 2018

ராணுவச் சீருடை தயாரிப்பும் தனியார்வசம்!

கேள்விக்குறியாகும் தேசப் பாதுகாப்பு
மிழகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி, கோவையில் நல்ல லாபத்துடன் இயங்கி வந்த அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. இதே போல, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனின் பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கீழே இயங்கிவந்த ஆவடி ராணுவ உடை உற்பத்தித் தொழிற்சாலைக்கு மூடு விழா நடத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால், தொழிலாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் (H.V.F., O.C.F., E.F.A) ஆவடியில் இயங்கிவருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தத் தொழிற்சாலைகளில், ராணுவத்தினருக்குத் தேவையான பீரங்கி, எந்திரம் மற்றும் சீருடைத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், ஓ.சி.எஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘ராணுவத்தினருக்கான உடை உற்பத்தித் தொழிற்சாலை’யில் (Ordnance Clothing Factory - O.C.F)தயாராகும் உயர் தொழில்நுட்ப ஆடைகளை ‘குறைந்த தொழில் நுட்பமுள்ள பொருட்கள்’ (Non - Core items) என அறிவித்து, தொழிற்சாலை யின் உற்பத்தியையும் தடாலடியாக நிறுத்திவிட்டது மத்திய அரசு.

வேலையிழப்பால் அதிர்ந்துபோன ஓ.சி.எஃப் தொழிலாளர்கள், ‘தொழிற்சாலையை மூடக்கூடாது’ என மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதில், பி.ஜே.பி-யின் தோழமை அமைப்பான ‘பாரதிய மஸ்தூர் சங்கமும்’ அடக்கம்.
 
“தொழிற்சங்கங்களுடன் எந்தவிதப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல், மத்திய அரசு தன்னிச் சையாக எடுத்துள்ள இந்த முடிவால், 800-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 2,121 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி நியமனம் செய்ய அனுமதிக் கப்பட்ட 177 பதவிகளும் ரத்து செய்யப்பட்டுள் ளன. இத்தனை ஆண்டுகளாக உடை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளிக்கு இனிமேல், புதிய வேலைக்கான பயிற்சி கொடுப் பதும், பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு மாற்றல் செய்வதும் வேலையிழப்புக்கு ஈடான செயலாகவே முடியும்.

‘ஓ.சி.எஃப் தொழிற்சாலை மூடப்படுவதாக செய்தி வருகிறதே?’ என ஜனவரி 30-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் கேட்டபோது, ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ எனக் கோபமாக பதிலளித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே, ஜனவரி 16-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘ஆவடி ஓ.சி.எஃப் தொழிற்சாலையில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஆர்மி லோகோ சீருடையை இனி உற்பத்தி செய்ய வேண்டாம். அதை ராணுவம் தனியார் மூலமாகக் கொள்முதல் செய்யலாம்’ என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஏன் இந்த முரண்பாடு?
‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில், பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்தால், அது ‘மேக் இன் இந்தியா’ இல்லை... ‘டேக் இன் இந்தியா’ ஆகிவிடும்” என்று கொதித்தார், அனைத்து இந்தியப் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார்.

அகில இந்திய தொ.மு.ச பேரவையின் அமைப்புச் செயலாளர் வேலுசாமி, ‘‘நம் ராணுவ வீரர்களுக்கு, எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வகையில், 80 சதவிகித காட்டன் - 20 சதவிகித பாலியஸ்டர் கலந்த இழைகளைக் கொண்ட தரமான துணியில் ராணுவச் சீருடை தயாரிக்கப்படுகிறது. இது, பல்வேறு தரச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு ‘பேன்ட் ஜிப்’ நன்றாக செயல்படுகிறதா என்பதை ஆயிரம் முறை பரிசோதித்துப் பார்த்த பிறகே தரம் உறுதி செய்யப்படுகிறது. இப்படி, தனியார் நிறுவனங்களில் அரசால் உறுதிசெய்ய முடியுமா? 
பதன்கோட் தாக்குதலின்போது, நம் ராணுவத்தினரைப் போன்றே தீவிரவாதிகள் உடையணிந்து வந்தனர். ராணுவ உடைத் தயாரிப்புகளில் பல கட்டுப்பாடுகள் இருக்கும்போதே இப்படியொரு தாக்குதலைச் சந்திக்க நேரிடுகிறதே... உடை தயாரிப்பைத் தனியார் வசம் ஒப்படைத்தால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறி ஆகாதா? மும்பை தீவிரவாதத் தாக்குதலில் இறந்துபோன காவல்துறை உயர் அதிகாரி ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டுதுளைக்காத உடை ஒரு தனியார் தயாரிப்பு. அதன் தரம் மோசம் என அப்போதே செய்திகள் வெளியாகின. எனவே, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தனியாரை நுழைக்க வேண்டாம்’’ என்றார்.

“சில தொழிற்சங்கத்தினர் இவ்விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, ஓ.சி.எஃப் உற்பத்தியைத் தொடங்கி, தொழிலாளர்களது வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், எங்களது போராட்டம் தொடரும்’’ என்கிறார் ‘பாரதிய மஸ்தூர் சங்க’ (பாதுகாப்பு) தமிழகப் பொறுப்பாளர் ஸ்ரீனிவாசன்.
‘ஓ.சி.எஃப் ஆலை திறக்கப்படுமா...’ என்ற கேள்விக்கு விடை கேட்டு, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். “அமைச்சர் லடாக்கில் இருக்கிறார். வந்ததும் பேசச் சொல்கிறோம்” என்றனர் அவரின் உதவியாளர்கள். இதழ் அச்சேறும் வரை அமைச்சரிடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை. அவர் தரப்பு விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

- த.கதிரவன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment