Monday, February 12, 2018

உட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா? - சிக்கலில் செல்வகணபதி!

தி.மு.க-வின் மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலாளரான செல்வகணபதியின் சேலம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், செல்வகணபதியின் ஆட்களே கைதுசெய்யப்பட்டிருப்பது தி.மு.க உட்கட்சிப் பூசலின் தீவிரத்தை உணர்த்துகிறது. 

2017 அக்டோபர் 28-ம் தேதி இரவு, செல்வகணபதியின் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் கருகின. இந்த வழக்கை விசாரித்த அஸ்தம்பட்டி போலீஸார், செல்வகணபதியின் ஆதரவாளர்களான அருள்ராம், வரதராஜ், மயில்சாமி, மவுலீஸ்வரன், மணி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் பேசினோம். “செல்வகணபதி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் வடக்குத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். எனக்கு எதிராக நடேசன் என்பவரை அவர் போட்டியிட வைத்தார். 2017 அக்டோபர் 27-ம் தேதி, அரிசிபாளையத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டத்தை செல்வகணபதி நடத்தினார். ‘எங்களிடம் சொல்லாமல் எங்கள் பகுதியில் கூட்டம் போடுகிறீர்களே...’ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகி கேட்டுள்ளார். ‘நீ யாருடா...’ என்று வாய்க்கு வந்தபடி, செல்வகணபதியின் ஆட்கள் பேசியுள்ளனர். அன்று இரவுதான், செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதை நான் செய்ததாக மீடியாவிலும் செல்வகணபதி சொன்னார். ஆனால், என்னை அரசியலிலிருந்து அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அவரே அடியாள்களைத் தூண்டிவிட்டு இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்’’ என்றார்.
செல்வகணபதியிடம் பேசினோம். “யாரையும் கெடுத்து அரசியலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்குக் கட்சியில் உள்ள பல சகோதரர்களில் ராஜேந்திரனும் ஒருவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், குற்றச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மவுலீஸ்வரன், மணி இருவரையும் போலீஸார் துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். நான், அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலிருந்தே, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எதிரும் புதிருமான உறவுதான். எனவே, அரசியல்ரீதியாக என்னைக் களங்கப்படுத்த, போலீஸார் இப்படிச் செயல்பட்டுள்ளனர். இதில், ராஜேந்திரனுக்கும் பெரும் பங்கு இருக்கிறது’’ என்றார் ஆவேசமாக. 

அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் பேசினோம். “சுதந்திரமான விசாரணைக்குப் பின்னர்தான் மவுலீஸ்வரன், மணி இருவரையும் பிடித்தோம். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருள்ராம், வரதராஜ், மயில்சாமி ஆகியோரைக் கைதுசெய்தோம். ‘இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் என்னை நீக்கினார். எனவே, செல்வகணபதிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையிலான பகையைப் பயன்படுத்தி, ராஜேந்திரன்மீது பழிபோடுவதற்காக பெட்ரோல் குண்டு வீசினேன்’ என்று அருள்ராம் வாக்குமூலம் கொடுத்தார். எங்களிடம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ்  படங்கள்: எம்.விஜயகுமார் 
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment