Friday, February 09, 2018

பொலிட்டிகல் பொடிமாஸ்!

விடாக்கண்டன் செந்தில் பாலாஜி!

தி
னகரனை அழைத்துவந்து, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவை ஜனவரி 29-ம் தேதி கொண்டாட இருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதற்கு கரூர் நகராட்சி நிர்வாகம், காவல்துறை என இரு தரப்பிலும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், விழா நடத்த அனுமதி கேட்டு கோர்ட் படியேறினார் செந்தில் பாலாஜி. ‘ஜனவரி 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோர்ட் கொடுத்த உத்தரவை, நகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறையிடம் காட்டினார் செந்தில்பாலாஜி. ‘இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று கமிஷனர் சொன்னாராம். பொதுக்கூட்டம் குறித்து கரூர் மாவட்டம் முழுவதும் செந்தில்பாலாஜியின் ஆட்கள் சுவர் விளம்பரங்கள் செய்தனர். அதையும் காவல்துறையினர் தடுத்தனர். உடனே, சாலைமறியல் செய்ததுடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறைமீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. தேதி குறிப்பிடாமல், ‘பிப்ரவரியில் விழா’ என்று மட்டும் போட்டு செந்தில்பாலாஜி தரப்பினர் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அரசருக்கு பேட் லக்!

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் இருப்பார் ‘குட்லக்’ ராஜேந்திரன். அவருக்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பதவியைக் கொடுத்தார் திருநாவுக்கரசர். தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ‘குட்லக்’ ராஜேந்திரன், கடந்த ஆண்டு மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இப்போது, அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்குப் பரிந்துரை செய்துள்ளாராம் அரசர். அதை மோப்பம் பிடித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டீம், குட்லக் ராஜேந்திரன் மீது சி.பி.ஐ மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு போட்டுள்ள வழக்குகளின் விவரங்களை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். கூடவே, அரசர் போட்ட மாவட்டத் தலைவர்களில் எத்தனை பேர்மீது  வழக்குகள் உள்ளன என்ற பட்டியலையும் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசருக்கு பேட்லக் ஆரம்பம்..?

‘‘கையைக் கொடுத்து... கழுத்தை அறுத்துவிட்டார்கள்!”

ஜெ
யலலிதா காலத்திலிருந்து அண்ணா தொழிற்சங்கத்தில் அசைக்கமுடியாத சக்தியாக கோலோச்சிய கோவை சின்னசாமியை, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பதவியிலிருந்து இப்போது நீக்கியிருக்கிறார்கள். ‘போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது அரசுக்குப் போதுமான ஆதரவைக் கொடுக்கவில்லை, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்’ என்று சின்னசாமிக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் அடுக்குகிறார்கள்.   

இதுகுறித்து சின்னசாமியிடம் கேட்டோம், “அம்மா இருந்தவரை யாராலும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. என்னை அவர் செல்வாக்கோடு வைத்திருந்தார். அப்போதிருந்தே என்மீது பொறாமையில் இருந்தவர்கள், இப்போது இப்படிச் செய்திருக்கிறார்கள். நான் நீக்கப்படுவதற்கு முன்பு ஓ.பி.எஸ்ஸைப் பார்த்தபோது, சிரித்துக்கொண்டே கைகொடுத்தவாறு, ‘உங்களால்தான் அண்ணே எல்லாம் முடியும்’ என்றார். ஈ.பி.எஸ்ஸைப் பார்த்தபோது, ‘நீங்கதான் அண்ணே சீனியர்... உங்களுக்கு எல்லா மரியாதையும் உண்டு’ எனச் சொல்லிக் கைகொடுத்தார். இடையில், என்ன நடந்ததோ தெரியவில்லை. கையைக் கொடுத்து கழுத்தை அறுத்த கதையாக ஆகிவிட்டது. என்னை நீக்கியதற்கு நியாயமான காரணம் சொல்லும்வரை விடமாட்டேன்” என்றார் அவர்.
சிலை வைக்க கலெக்‌ஷன்!

ஜெ
யலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,  அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒரு சிலை வைக்கப்போகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சேர்ந்து இருப்பது போலவும், அதில் இரட்டை இலைச் சின்னம் இடம்பெறும் வகையிலும் சிலை உருவாகிறதாம். இதற்கான செலவைத் தாம் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தாராம் உள்ளாட்சித் துறை அமைச்சர். இந்தச் சிலைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கான்ட்ராக்ட் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் கலெக்‌ஷன் தொடங்கிவிட்டதாம். சென்னை மாநகராட்சியில் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் ரூ.25 லட்சம்; கோவை, மதுரை மாநகராட்சிகளில் உள்ள கான்ட்ராக்ட்காரர்கள் தலா ரூ. 10 லட்சம்; இதர மாநகராட்சிகளில் உள்ள கான்ட்ராக்ட்காரர்கள் தலா ரூ. 5 லட்சம் தர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். அதிகாரப் புள்ளி ஒருவரின் பி.ஏ., தலைநகரில் வசூலைத் தொடங்கிவிட்டாராம். 

- கே.பாலசுப்பிரமணி, எஸ்.முத்துகிருஷ்ணன், எம்.புண்ணியமூர்த்தி, துரை.வேம்பையன் 
படங்கள்: தி.விஜய், நா.ராஜமுருகன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment