Thursday, February 15, 2018

“இந்த மாணிக்கம் வேண்டாம்!” - கம்யூனிஸ்ட்களை வீழ்த்துவாரா மோடி?

கையிருப்பு 1,520 ரூபாய்; ஒரே ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதில் இருக்கும் பணம் 2,410 ரூபாய். ஆகமொத்தம் 3,930 ரூபாய்தான் அவரிடம் இருக்கும் பணம். சேமிப்பு என வேறு எதுவுமில்லை. இதுவரை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் அளவுக்குச் சம்பாதித்ததே கிடையாது. தனக்குக் கிடைக்கும் அரசு சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சியிலிருந்து மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொள்கிறார். சொந்தமாக நிலம், வீடு எதுவுமில்லை. 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரின் சொத்துக் கணக்குதான் இது. ‘இந்தியாவின் ஏழை முதல்வர்’ என வர்ணிக்கப்படும் அவர், மாணிக் சர்க்கார். 69 வயதாகும் மாணிக் சர்க்கார், 1998 மார்ச் 23 முதல் தொடர்ச்சியாக நான்கு முறை திரிபுரா முதல்வராகப் பதவி வகித்து வருபவர். ஐந்தாவது முறையாகவும் வெல்லும் நம்பிக்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தராகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். திரிபுரா சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 18-ம் தேதி தேர்தல்.
மேற்கு வங்காளத்தையொட்டியிருக்கும் திரிபுராவில், அப்படியே வங்காளத்தின் சாயலைப் பார்க்க முடியும். அங்கு போலவே திரிபுராவிலும் காங்கிரஸை வீழ்த்தி கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸிடம் வீழ்ந்ததுபோல இங்கு கம்யூனிஸ்ட்கள் வீழ்ச்சியடையவில்லை. மாணிக் சர்க்காரின் எளிமை, இங்கு ஆட்சிக்கு அரணாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட, மொத்தமுள்ள 60 இடங்களில் 50 இடங்களைக் கம்யூனிஸ்ட் கூட்டணி பிடித்தது. காங்கிரஸ் 10 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சி ஆனது. அவர்களில் ஆறு பேரைத் தங்கள் கட்சிக்கு மாறச் செய்து சட்டமன்றத்துக்குப் போனது திரிணாமுல் காங்கிரஸ். 

தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர் வெற்றி, மாநிலத்தில் இருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தொடர் வெற்றி. (2014 தேர்தலில்கூட, இரண்டு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது!) இந்தச் சூழலில்தான், இம்முறை சவால் விடுகிறது பி.ஜே.பி. இந்த வாரம் வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்புகள், ‘நூலிழை வித்தியாசத்தில் பி.ஜே.பி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என்கின்றன.
சமீபகாலம் வரை இங்கு பி.ஜே.பி சொல்லிக் கொள்ளும்படியான சூழலில் இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை அடித்தபோது, அவர் போன இடங்களிலெல்லாம் பெரும் கூட்டம் கூடியது. திரிபுரா மட்டும் விதிவிலக்கு. தலைநகர் அகர் தலாவில் 40 ஆயிரம் பேர் திரளக்கூடிய அஸ்டபால் மைதானத்தில் வெறும் ஏழாயிரம் பேரே மோடியின் பேச்சைக் கேட்க வந்திருந்தனர். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி இங்கு வெறும் 5.7 சதவிகித ஓட்டுகளையே வாங்கியது. கம்யூ னிஸ்ட்கள் வாங்கிய 64 சதவிகித ஓட்டுகளோடு ஒப்பிட்டால் வித்தியாசம் புரியும். 2013 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி இங்கு 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்கள் வாங்கியது, வெறும் 1.5 சதவிகித ஓட்டு. 
வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும், மற்ற கட்சிகளை உடைத்து பி.ஜே.பி பலம் பெறுகிறது. அதே டெக்னிக்கை திரிபுராவிலும் செய்திருக்கி றார்கள். திரிணாமூல் காங்கிரஸில் இருந்த ஆறு எம்.எல்.ஏ-க்களைக் கட்சி மாறச்செய்து, முதல் முறையாக சட்டமன்றத்தில் பி.ஜே.பி கால் பதித்தது. தொடர் தோல்வியால் விரக்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பலரை இழுத்தார்கள். இப்படி சகல கட்சிகளிலிருந்தும் பலரை வசப்படுத்தி வேட்பாளர்களாக்கி தேர்தலைச் சந்திக்கிறது பி.ஜே.பி. இதன் கூட்டணியில் ஐ.பி.எஃப்.டி என்ற பழங்குடியினர் கட்சி இணைந்துள்ளது. இதற்குப் பழங்குடியினர் மத்தியில் கணிசமான செல்வாக்கு உள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் என்பது தினசரி வாழ்வோடு இணைந்தது. அத்தனை ஆயுதக் குழுக்கள் இங்கே செயல்படு கின்றன. அப்படி நிம்மதியிழந்து கிடந்த திரிபுராவை அமைதிப் பாதைக்குத் திருப்பியதில் கம்யூனிஸ்ட் அரசுக்கு மகத்தான பங்கு உண்டு. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து ராணுவச் சட்டம் திரும்பப் பெறப் பட்டது. இதைத்தான் தனது சாதனையாக மாணிக் சர்க்கார் குறிப்பிடுகிறார். ‘‘பழங்குடி யினருக்குத் தனி மாநிலம் கேட்டு வரும் ஐ.பி.எஃப்.டி கட்சியுடன் இணைந்து பிரிவினைவாதத்தை பி.ஜே.பி தூண்டுகிறது’’ எனக் கம்யூனிஸ்ட்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திரிபுராவில் அமைதி நிலவினாலும், வளர்ச்சி இல்லை. மாநிலத் தலைநகரிலேயே சாலைகள் மோசமாக உள்ளன. வேலையில்லா திண்டாட்டம், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தாதது எனப் பல பிரச்னைகளைச் சொல்லி திணறடிக்கிறது பி.ஜே.பி.
‘‘மாற்றத்தைக் கொண்டுவருவோம். இந்த மாணிக்கம் உங்களுக்கு வேண்டாம். மாணிக் சர்க்காரின் வெள்ளை குர்தாவுக்குப் பின்னால் இருக்கும் கறுப்புப் பக்கம் உங்களுக்குத் தெரியாது. உங்களை இந்த அரசு ஏமாற்றுகிறது. வர்த்த கம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மூலம் நாங்கள் வளர்ச்சியைக் கொண்டுவருவோம்’’ என்று திரிபுரா பிரசாரத்தில் சொல்லியிருக்கிறார் மோடி.

மாணிக் சர்க்காருக்கும் மோடி சர்க்காருக்குமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப் போவது யார் என மார்ச் 3-ம் தேதி தெரியும்.

- தி.முருகன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment