Monday, February 12, 2018

‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’

பூத் கமிட்டிகள் அமைக்கும் விஜய்
ரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ‘‘தான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படை வேலைகளை நடிகர் விஜய் சத்தமின்றி செய்துவருகிறார்’’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். 

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “உறுப்பினர்களைச் சேர்க்க, தனது இணையதள முகவரியை ஜனவரி 2-ம் தேதிதான் ரஜினி வெளியிட்டார். ஆனால், உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பதற்கான மொபைல் ஆப் உள்ளிட்ட பணிகளை 
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே விஜய் ஆரம்பித்துவிட்டார். அதன் மூலமாக, உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. நிர்வாகிகள் அனைவரும் எங்களுடைய கருத்து களை விஜய்யிடம் சொன்னோம். ‘ரஜினி, கமல், விஷால் என எல்லோரும் ஸ்பீடா போய்க்கிட்டு இருக்காங்க. நீண்ட காலத்துக்கு நாம மௌனமாக இருக்க வேண்டாம்’ என்று ஒட்டுமொத்தக் குரலில் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்தோம். ‘நாம் தனித்து நின்று பலத்தைக் காட்டணும்’ என்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூறினர். மேற்கு மண்டல நிர்வாகிகள், ‘விஜயகாந்த் தனித்து நின்றபோது, அவர் மட்டும்தான் ஜெயித்தார். அ.தி.மு.க-வோட கூட்டணி சேர்ந்தபிறகு தான், அவர் கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெற்றார். அதனால், நாம் கூட்டணி சேருவதுதான் நல்லது’ என்றனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஒருவர், ‘தி.மு.க-வோட கூட்டணி வெச்சா நிறைய எம்.எல்.ஏ-க்களை நாம பெறலாம்’ என்றார். ‘டி.டி.வி.தினகரனுடன் கூட்டுச் சேரலாம்’ என்று திண்டுக்கல், தேனி மற்றும் டெல்டா மாவட்டங்களின் நிர்வாகிகள் கூறினர். நாங்கள் சொன்னதையெல்லாம் கூர்ந்து கேட்டார் விஜய்’’ என்றனர்.
இப்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் விறுவிறுப்பாக பூத் கமிட்டி அமைத்து வருகிறார்கள். ‘‘தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் மட்டும்தான் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிர்வாகிகளை உட்கார வைத்து, வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் அளவுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. அவர்களைப்போல வலுவாக ஆவதற்கு நமக்கு பூத் கமிட்டிகள் வேண்டும். தேர்தலில் வெற்றியை உறுதிசெய்வது பூத் கமிட்டிதான். எனவே, தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் போய் பூத் கமிட்டிகள் அமைக்கும் வேலைகளைச் செய்யுமாறு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இப்போது பூத் கமிட்டிகளை நாங்கள் வலுவாக அமைத்து வருகிறோம். இதற்காக எல்லா மாவட்டங்களுக்கும் பூத் கமிட்டிக்கான படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திலும் எவ்வளவு பூத்கள் உள்ளனவோ, அத்தனை பூத் கமிட்டிகள் அமைக்கிறோம். ஒரு பூத் கமிட்டிக்குத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர் என ஐந்து பேர் இருப்பார்கள். அவர்கள் பயோடேட்டா, புகைப்படம், போன் நம்பர், இ-மெயில் முகவரி என எல்லாவற்றையும் பதிவுசெய்து தலைமைக்கு அனுப்பி வருகிறோம்’’ என்றார், தென்மாவட்ட நிர்வாகி ஒருவர். 
இன்னொரு நிர்வாகி, ‘‘ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்குமாறு தலைமை கூறியுள்ளது. அதில் இப்போது, பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டோம். உறுப்பினர் களைச் சேர்க்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. 2016 தேர்தலிலேயே விஜய்யின் தந்தையுடன் ஒரு பெரிய கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதி நேரத்தில், விஜய் அந்த முயற்சியைத் தடுத்துவிட்டார். இந்த முறை கூட்டணி அமைந்தால், எந்தெந்த தொகுதி களைக் கேட்கலாம் என்ற பட்டியல் தயாரித்துள்ளோம். தஞ்சை, சேலம், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் எங்களுக்குச் செல்வாக்கானவை” என்றார். 
விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் விஜய் சரவணனிடம் பேசினோம். “பூத் கமிட்டிகளை அமைக்குமாறு எங்களிடம் ஆறு மாதங்களுக்கு முன்பே இயக்கத் தலைமை சொன்னது. இது அரசியலுக்காகவா என்பதை இப்போது சொல்ல முடியாது. எங்களின் விருப்பமெல்லாம் விரைவில் அரசியல் களத்துக்கு விஜய் வரவேண்டும் என்பதுதான்” என்றார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த், “பூத் கமிட்டி அமைப்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். அரசியலுக்கு வருவது பற்றி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும், அறிவிக்க வேண்டும். அவர் சொல்வதைச் செய்வதற்கு எங்கள் மக்கள் இயக்கம் தயாராக உள்ளது” என்றார்.

- துரை.வேம்பையன், சே.த.இளங்கோவன்,
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment