Monday, February 12, 2018

சரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்!

ந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, சரக்குப் போக்குவரத்துக்காக மாநிலங்களின் எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் பொருள்கள் கொண்டு செல்வதற்கு, பொருள்களுக்கான பில்லுடன், இ-வே பில்  வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதேபோல மாநிலத்துக்குள் 10 கி.மீ தூரத்துக்கு அப்பால் பொருள்களை எடுத்துச் செல்வோரும் இ-வே பில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அது என்ன இ-வே பில்?

எப்படிப் பதிவு செய்வது?

ஆன்லைனில் பதிவுசெய்த டிக்கெட்டை நாமே பிரின்ட் எடுத்துக்கொள்வதுபோல, நாமே இந்த இ-வே பில்லை உருவாக்கிக்கொள்ளலாம். இ-வே பில்லை உருவாக்க https://ewaybill2.nic.in/ewbnat3/ என்ற இணையதளத்தில் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்த இணையதளத்துக்குள் சென்ற பின்னர், இ-வே பில் பதிவுக்கான லிங்க்குக்குச் செல்லவேண்டும். அதில் இ-வே பில் பதிவுக்கான படிவம் வரும். அந்தப் படிவத்தில் ஏற்கெனவே தாங்கள் பெற்றிருக்கும் ஜி.எஸ்.டி எண்ணை உள்ளீடு செய்து க்ளிக் செய்ய வேண்டும்.
படிவத்தில், பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், வணிகப்பெயர் (வணிகப் பெயர், நிறுவனத்தின் பெயர் இரண்டும் ஒன்றாக இருந்தாலும், இரண்டு இடங்களிலும் அதே பெயரை டைப் செய்ய வேண்டும்), முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைப் பதிவுசெய்ய வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு, ஒரு முறைமட்டும் பயன்படுத்தக்கூடிய ரகசியக் குறியீடு (OTP) வரும். அந்த ரகசியக் குறியீட்டை உள்ளீடு செய்து, தாங்கள்தான் அந்த வணிக நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

இதன் பின்னர், இ-வே பில் இணையதளத்தை உபயோகிப்பதற்கான பயனாளர் அடையாள எண், அல்லது பயனாளர் பெயர் உருவாக்க வேண்டும். இ-வே பில் இணையதளம் வழியாக லாக் இன் செய்யக்கூடிய பயனாளர் பெயர், எட்டு இலக்க பாஸ்வேர்டு ஆகியவை வழங்கப்படும். இதை வைத்து இ-வே பில் இணையதளத்துக்குள் செல்லலாம். பயனாளர் பெயர், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 

இ-வே பில் உருவாக்கும் முறை

இ-வே பில் முறை இணையதளப் பக்கத்தில் பொருள்களுக்கான ரசீது எண், ரசீது தேதியைக் குறிப்பிட வேண்டும். சரக்குகளை அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் வணிகப் பெயர், ஜி.எஸ்.டி எண், முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இதன் பின்னர் பொருளின் பெயர், பொருளைப் பற்றிய விவரக்குறிப்பு, அளவு, வரி விவரங்கள், பொருளின் மொத்த விலை, மாநில ஜி.எஸ்.டி, மத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
பிறகு... சாலை, ரயில், விமானம், கப்பல் என எந்த வழியில் பொருள் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். வாகனத்தின் பெயர், வாகனத்தின் ஐ.டி அல்லது வாகனத்தின் எண், பொருள்கள் கொண்டு செல்லப்படும் தோராயமான கி.மீ விவரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்தப் படிவத்தை submit செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானவையாக இருக்கும் பட்சத்தில், இ-வே பில் ‘பிரின்ட் ஆப்ஷன்’ தோன்றும். முதலில் க்யூ ஆர் கோடு இருக்கும். அதற்குக் கீழே இ-வே பில் எண், பில் தேதி, யாரால் அந்த இ-வே பில் உருவாக்கப் பட்டது என்பதற்கான பயனாளர் குறியீடு, பொருள்களை வாங்குவோரின் ஜி.எஸ்.டி எண், டெலிவரி செய்யும் இடம், ரசீது எண், பொருளின் மதிப்பு, HSN குறியீடு, பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனத்தின் ஐ.டி அல்லது எண் ஆகியவை இருக்கும். இந்த பில்லில் உள்ள எண்ணை வைத்து, குறிப்பிட்ட பொருள்கள் எங்கு செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 

இ-வே பில் அம்சங்கள் 

இ-வே பில் என்பது, EBN (E-WAY BILL NUMBER) என்று சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. சரக்கு வாகனங்களில் பொருள்களை எடுத்துச் செல்வோர், சரக்குகளுக்கான ரசீதுடன் இ-வே பில் நகல் அல்லது இ-வே பில் நம்பரை வைத்திருந்தால் போதுமானது. மாநிலங்களில் உள்ள வணிகவரித் துறை அதிகாரிகள், இதை வைத்தே இணையதளத்தில் பரிசோதிக்கலாம். இ-வே பில்லை உருவாக்க வணிகவரித் துறை அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. வணிக வரி செலுத்துவோர், தாக்கல் செய்யும் ரிட்டர்ன்களைச் சரிபார்ப்பதில் அதிகாரிகளுக்கு நேரம் மிச்சமாகிறது. 

சந்தேகங்களுக்கு...

 இ-வே பில் தொடர்பான சந்தேகங்களுக்குத் தமிழக அரசின் வணிகவரித் துறையின் தொலைபேசி எண் 044-28290962 அல்லது 1800 103 6751 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம். helpdesk@ctd.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம். 

- கே.பாலசுப்பிரமணி
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment