Sunday, February 18, 2018

மீண்டும் ராஜபக்சே!

விஸ்வரூபம் எடுக்கவைத்த உள்ளாட்சித் தேர்தல்
ழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, கிட்டத்தட்ட அரசியலிலிருந்தே ஒதுக்கப்பட்டிருந்தார். ஆனால், இப்போது இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் மூலம் மீண்டும் அவர் அரசியலில் முக்கிய இடம் பிடித்திருப்பது அங்கு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி நடந்தது. கூட்டு அரசாங்கத்தின் மூலம் நாட்டை ஆளும் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தரப்பும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பும் தனித்தனியாகப் போட்டியிட்டன. தன் கட்சியை மைத்திரிபாலவிடம் பறிகொடுத்திருந்த ராஜபக்சே தரப்போ, முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் உருவாக்கிய சிறிலங்கா பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் பெயரில் போட்டியிட்டது.
எதிர்பாராத திருப்பமாக, மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளில், 239 சபைகளை ராஜபக்சே தரப்பு கைப்பற்றியுள்ளது. 44.65 சதவிகித வாக்குகளுடன் 3,369 இடங்களை அந்தக் கட்சி பிடித்துள்ளது. தனித்தனியாகப் போட்டியிட்டதில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியானது, மைத்திரியின் தரப்பைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 32.63 சதவிகித வாக்குகளுடன் 2,385 இடங்களை அந்தக் கட்சி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி பிடித்துள்ள உள்ளாட்சி சபைகளின் எண்ணிக்கை, 41. மூன்றாம் இடத்தைப் பிடித்த மைத்திரியின் தரப்பு, 13.38 சதவிகித வாக்குகளுடன் 1,032 இடங்களில் வெற்றிபெற்றது. 10 உள்ளாட்சி சபைகளையே அதனால் பிடிக்கமுடிந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஈழத்தமிழர் கட்சிகளின் கூட்டணி யான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 406 இடங்களைப் பிடித்துள்ளது. வாக்குகளின் அளவு, 3.07 சதவிகிதம்.

‘ஆளும் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பதால், பிரதமர் ரணில் பதவி விலகவேண்டும்’ என்ற குரல் எழுந்துள்ளது. ரணில் கட்சியும், ராஜபக்சே முன்னர் தலைவராக இருந்த - இப்போது மைத்திரியின் தலைமையில் செயல்படும் சுதந்திரக் கட்சியினரும் இடம்பெற்றுள்ள கூட்டணியே இலங்கையை ஆட்சிசெய்துவருகிறது. தேர்தல் முடிவால் கூட்டணியின் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசிவருகின்றன. அத்துடன், ‘ரணிலைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரைப் பிரதமராக நியமிக்கவேண்டும்’ என மைத்திரியின் கட்சியினர் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பதவி விலக மறுத்துள்ள ரணில், மைத்திரியின் கட்சியைக் கழற்றிவிட முடிவெடுத்துள்ளார். 225 உறுப்பினர் களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 106 எம்.பி-களைக் கொண்ட தனது ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கூடுதலாக ஏழு எம்.பி-க்களின் ஆதரவு பெற்றுத் தனியாக ஆட்சியமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ‘ஒருவேளை ரணில் ஆதரவு கேட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தருமா?’ எனும் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன், ‘‘இதுகுறித்து எங்களை இதுவரை அணுகவில்லை; அணுகினால் அதுபற்றி முடிவெடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், கூட்டமைப்பிடம் உள்ள எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. 

சிங்களத் தரப்பினர், ஆட்சிமீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுபோல, தமிழ் மக்களும் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகளால் த.தே.கூ உருவாக்கப்பட்ட காலம்முதல், ஈழத்தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதுவே அதிக இடங்க ளில் வெற்றிபெற்று வந்துள்ளது. இந்த முறை அதிகமாக இடங்களைப் பிடித்தாலும், கூட்டணி அமைத்தால் மட்டுமே உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றமுடியும் எனும் நிலை உருவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மொத்தமுள்ள 406 இடங்களில், கூட்டமைப்பு 126 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதன் வாக்குகளைப் பிரித்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பு, 77 இடங்களைப் பிடித்துள்ளது. தனியாகப் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டிபி கட்சி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிக வாக்குகளைப் பெற்றதுடன், 62 இடங்களைப் பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும்விட, யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக ரணில், மைத்திரி தரப்புகளின் சிங்களக் கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. 
‘‘இது உள்ளூராட்சி மன்றத் தேர்தலாக இருந்தாலும், தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது . மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. மைத்திரிபால – ரணில் ஆட்சியில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி,தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருக்கிறது. இலங்கை அரசியலில் மகிந்த ராஜபக்சே பலமான ஒரு சக்தியாக இன்னும் இருக்கிறார் என்பதை இந்த முடிவுகள் தெளிவாக உணர்த்தியுள்ளன. அதற்கு மேலாக மைத்திரி - ரணில் தலைமையிலான அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவும் இதனைக் கருதலாம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌சே போட்டியிடுவதற்கு அரசியலமைப்பு இடம்கொடுக்காது என்றாலும்கூட, அவரால் நிறுத்தப்படும் ஒருவர் ஜனாதிபதியாக ஆகக்கூடும் என்பது தெளிவாகிறது.  மீண்டும் ஜனாதிபதியாக வரலாம் என்ற மைத்திரிபால சிறிசேனாவின் கனவும், ரணிலின் ஜனாதிபதி கனவும் இந்த முடிவுகளால் தகர்க்கப்பட்டுள்ளன. இனப்பிரச்னைக்கான தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றம் இனி கிடப்பில் போடப்பட்டுவிடும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது” என்கிறார், கொழும்புவில் பணியாற்றி வரும் தமிழ் பத்திரிகையாசிரியரான பாரதி ராஜநாயகம்.

- இரா.தமிழ்க்கனல்
News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment