Monday, February 12, 2018

கழுகார் பதில்கள்!

க.தர்மராஜ், விருதுநகர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலிருந்து தப்பிக்க ‘மெளன விரதம் இருக்கிறேன்’ என்று சொல்லி சசிகலா நீதிமன்றம் சென்றால், அதைச் சட்டம் ஏற்குமா? 


மெளன விரதத்துக்குச் சட்ட அங்கீகாரமெல்லாம் இல்லை. மிகமோசமான அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால், விசாரணையிலிருந்து தப்பலாம். தவிர, மெளன விரதமெல்லாம் ஒரு காரணமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அப்படிச் செய்தால், பலரும் மெளன விரதம் என்று சொல்லித் தப்பி விடுவார்களே!
சி.கார்த்திகேயன், சாத்தூர்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் குடும்ப நிகழ்ச்சியில் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மொய்ப் பணம் வந்ததாகச் சொல்லப்படுகிறதே?


நிகழ்ச்சி மூலமாக அல்லாத வகையில் வரும் பணத்தை யாரும் கணக்கெடுக்க மாட்டார்களா?
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவதற்காக அந்த மாநில முதல்வர் சித்தராமையாவுடன் போர் புரியத் தயாராகிவிட்டாரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி?
தமிழக முதல்வர் என்ற நினைப்புடன் செயல்பட்டால் சரிதான். இவருடைய ஒரு பேட்டிக்கெல்லாம் இறங்கிவருபவர் அல்ல சித்தராமையா. ஜெயலலிதாவின் பாணியை எடப்பாடி கடைப்பிடிக்க வேண்டும்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘ரஜினி காட்டுவது பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை’ என்று சரத்குமார் பேசியிருப்பது பற்றி?


சூப்பர் ஸ்டார் - சுப்ரீம் ஸ்டார் மோதலை விரைவில் பார்க்கலாம்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘தேசியக் கட்சிகள் ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறாரே?


பி.ஜே.பி மீது என்ன கோபமோ?

சம்பத்குமாரி, பொன்மலை.
அரசியலில் நேர்மையும் தூய்மையும் வேண்டுமென்பது மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக, நேபாள காங்கிரஸ் தலைவர்கள் சமீபத்தில் பொதுமக்களின் ஷூக்களைத் துடைத்தனர் என்று செய்தி படித்தேன். இங்கும் அப்படிச் செய்தால் என்ன?

அந்தப் பேராசையெல்லாம் நமக்கு இல்லை. நிர்வாகத்தைத் துடைத்துச் சுத்தம் செய்தால் போதும்!

ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி.

இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான விஷயமா?


சமூக வலைதளங்களில் பெரும்பாலும் இருப்பது இளைஞர்கள்தான். சமூக வலைதளங்களில் பெரும்பாலும் விவாதிக்கப்படுவது அரசியல்தான். எனவே, இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இது, ஆரோக்கியமான அரசியலுக்கு எதிர்காலத்திலாவது வழிவகுக்கும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழகத்தில் ஆன்மிக உணர்வு கணிசமாக உயர்ந்துள்ளது என்பது உண்மையா?


ஆன்மிக உணர்வு உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். ‘எது உண்மையான ஆன்மிகம்’ என்ற தெளிவு அதிகரித்துள்ளதா எனத் தெரியவில்லை.

உமரி பொ.கணேசன், மும்பை-37.

வாரிசு அரசியல் என்றாலும், திறமையில்லாமல் திணித்தால் அது எடுபடுமா?


எடுபடாது. வாரிசு அடிப்படையில் திணிப்பது ஒரு சலுகை. அது மட்டுமே போதாது. திறமை, துணிச்சல், தனித்தன்மை, முடிவெடுக்கும் திறன், சமயோசிதம் இருந்தால் மட்டும்தான் அதைத் தக்கவைக்க முடியும். இவை இல்லாததால், பல வாரிசுகள் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். வாரிசு அடிப்படையில் திணிக்கப்படாத பலர், தங்கள் தனித்திறமை காரணமாக முன்னேறியும் இருக்கிறார்கள்.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

நிழல் - நிஜம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?


பல நேரங்களில் நிழல் மறைந்துவிடும். ஆனால், நிஜத்தை மறைக்க முடியாது. நிழல் என்பது ஒன்றின் பிரதிபலிப்பு; நிஜம் என்பதே அசலானது. 

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று கமலும் ரஜினியும் வர வாய்ப்பு இருக்கிறதா?


ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பெயர்களில் படங்கள் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறதா என்ன!?

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஆர்.கே. நகர் மக்களின் கடனைத் தினகரன் அடைத்துவிடுவார் என்று நம்பலாமா?


ஆர்.கே. நகர் மக்கள் எதிர்பார்க்கும் கடனை, 50 ஆண்டுகளானாலும் தினகரனால் அடைக்க முடியாது.

ஜி.வசந்தபாலன் 
திரைப்பட இயக்குநர்


காவிரி நீர் வராமல் பயிர்கள் கருகுகின்றன என்ற செய்திகளை, நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து பத்திரிகைகளில் படித்து வருகிறேன். இன்னும் எத்தனை முதல்வர்கள்தான் ‘காவிரித் தண்ணீருக்காக கர்நாடகத்திடம் பேசுகிறோம்’ என்ற நாடகத்தை நடத்துவார்கள்? இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும், காவிரிப் பிரச்னை தீரப்போவதில்லை. உண்மையில், கண்ணுக்கு எட்டும் தொலைவில் தீர்வு இருக்கிறதா?

! உண்மைதான். தமிழகத்தின் தீராத் தலைவலிகளில் ஒன்றாக காவிரிப் பிரச்னை மாறிவிட்டது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்துவிட்டன. மத்தியிலும் எத்தனையோ பிரதமர்கள் வந்துபோய்விட்டார்கள். ஆனால், கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு உரிய அளவு நீர் வரவில்லை. ஏனென்றால், கர்நாடக அரசிடம் வார்த்தை சுத்தம் இல்லை; மத்திய அரசிடம் அதைத் தட்டிக்கேட்கும் நடுநிலை இல்லை. எந்தளவு நீர் தர வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் சொன்னபிறகும், அதைக் கர்நாடகா தருவதில்லை. ‘இந்தளவு நீரைத் தர வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும், அதை அமல்படுத்துவது இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசை மத்திய அரசு தட்டிக் கேட்பது இல்லை.

நீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை ஏற்று மத்திய அரசு அமைக்கவில்லை. காங்கிரஸாக இருந்தாலும், பி.ஜே.பி-யாக இருந்தாலும், அவர்களுக்கு கர்நாடக மாநில ஆட்சிதான் முக்கியம். அந்த இரண்டு கட்சிகளும் தமிழத்தில் ஆட்சிக்கு வரும் சூழ்நிலை இல்லை என்பதால், தமிழக விவசாயிகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்; எத்தனை நூற்றாண்டு ஆனாலும்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment