Friday, February 09, 2018

நெடுஞ்சாலைக் கடைகளில் நள்ளிரவுக் கொள்ளை! கலங்கி நிற்கும் கரூர்

கலங்கி நிற்கும் கரூர்
டந்த இரண்டு வாரங்களில் 30-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பது கரூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்-கோவை பைபாஸ் மற்றும் சேலம் பைபாஸ் இணையும் இடத்தில் உள்ள அரிக்காரமங்கலம், பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் லேத் பட்டறைகள், லாரி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் இரண்டு வாரங்களில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கரூர் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள பண்டரி நாதன் ஆலயத்தில், ஜனவரி 23-ம் தேதி பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச்சென்றது. அந்தச் சிலையின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய். ஒயின்ஷாப் காவலாளி ஒருவர், கொள்ளைக் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளைகள் அனைத்தும் ஒரே பாணியில் நடந்துள்ளன. ஜனவரி 31-ம் தேதி, ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஒன்றில் துளையிட்டு, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அருகில் உள்ள மூன்று லேத் பட்டறைகளில் பூட்டைக் கழற்றிக் கொள்ளை யடித்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்க ளால் கரூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கொள்ளை நடந்த ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளரான தமிழ்ச்செல்வன், “இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளையும், திருட்டும் நடக்குது. இதுக்கு முன்னாடி இந்தளவுக்கு நடந்ததில்லை. ரொம்ப தைரியமான கும்பல்தான் இதைச் செய்யணும். ஏன்னா, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள்லதான் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கும். ஆனா, இது ரொம்ப பிஸியான ஏரியா. கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில், 15 நாள்களுக்குள் ஐந்து முறை கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கு. பத்து நாளுக்கு முன்னாடி, நான்கு லேத் பட்டறைகள்ல பூட்டுகளை உடைக்காமலே திறந்து, கொள்ளை யடிச்சிருக்காங்க. அன்னைக்கே, ஒயின்ஷாப் காவலாளி காளியப்பனை அடிச்சுக் கொன்னுட்டு திருட முயற்சி செஞ்சிருக்காங்க. கரூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல. ரெண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு, இந்தப் பகுதியில 15 லேத் பட்டறைகள்ல பூட்டுகளைக் கழற்றிப் போட்டுட்டு, பணத்தைக் கொள்ளையடிச்சிருக்காங்க. ஒரு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்லேயும் கொள்ளையடிச்சிருக்காங்க. அதற்கு மறுநாள் ரெண்டு கடைகள்ல கொள்ளை நடந்துச்சு. பெரியகுளத்துப்பாளையத்துல ஐம்பொன் சிலை கொள்ளைபோன கோயிலுக்குப் பக்கத்தில இருக்கும் ஒரு மளிகைக்கடையிலேயும், சேலம் பைபாஸ்ல உள்ள டீத்தூள் ஏஜென்ஸி உள்பட நான்கு கடைகள்லயும் கொள்ளை நடந்துச்சு. பெரும்பாலும் நள்ளிரவுலதான் இந்தக் கொள்ளைகள் எல்லாம் நடக்குது” என்றார்.
கரூர் மாவட்ட அனைத்து கனரக வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தின் தலைவர் கே.சேகரிடம் பேசினோம். “இந்த மாதிரியான கொள்ளைச் சம்பவங்கள் இதுக்கு முன்னாடி இங்கே நடந்ததில்ல. ஆரம்பத்திலேயே போலீஸ்ல புகார் கொடுத்தோம். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தா, இத்தனை கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்காது. கரூர் மாவட்ட எஸ்.பி-கிட்ட முறையிட்ட அப்புறம்தான், போலீஸ் கொஞ்சம் அலெர்ட் ஆச்சு. போலீஸ்காரர்களோட ஆறு ஆறு பேராக தினமும் நாங்க ரோந்து போறோம். அதுக்காக, எங்களுக்கு அடையாள அட்டையெல்லாம் போலீஸ் கொடுத்திருக்காங்க” என்றார்.
உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான கண்ணன், “என்னோட கடை பூட்டை திறந்து பார்த்துட்டு, ஒண்ணு மில்லைன்னு போயிருக்காங்க. டெக்ஸ்டைல்ல கொள்ளையடிச்சப்போ, அங்கிருந்த சி.சி.டி.வி-யில் ஒரே ஒரு ஆளுடைய உருவம் பதிவாகியிருக்கு. கொள்ளையடிக்க வெளிச்சம் தேவைப்பட்டதால், துணிகளைக் கொளுத் தியிருக்காங்க. அதனால அங்கே இருந்த ரூபாய் நோட்டுகளும் எரிஞ்சுபோச்சு. அந்த நெருப்பு வெளிச்சத்தில, அந்த நபரோட முகம் சி.சி.டி.வி கேமராவுல நல்லா தெரியுது. ‘ஒரு கொலையையும், இத்தனை கொள்ளை களையும் செஞ்சது ஒரே ஒரு ஆள்தான்’ன்னு போலீஸ் சொல்லுது. அதை எங்களால நம்ப முடியலை. கொள்ளைக் கும்பலால, எங்க உயிருக்கு ஆபத்து வந்திரும்மோன்னுதான் பயமா இருக்கு. முன்னாடியெல்லாம், பாரா பீட் போட்டு போலீஸ் ரோந்து வருவாங்க. 2016 டிசம்பருக்குப் பிறகு போலீஸ் ரோந்து வர்றதில்லை. அதனால, கொள்ளைக் கும்பல் சுதந்திரமா கொள்ளையடிக்கிது” என்றார்.
 
கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரனிடம் பேச முயன்றோம். பலமுறை முயன்றும் நம்மை எதிர்கொண்ட அவருடைய உதவியாளர், “சார் மீட்டிங்கில் இருக்கிறார்; பிஸியாக இருக்கிறார்” என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார். அதையே குறுந்தகவலாகவும் நமக்கு அவர் அனுப்பினார்.

“கரூர் மாவட்ட போலீஸாரின் மந்தமான செயல்பாடுகளால்தான், கொள்ளையர்கள் ஆட்டம் போடுகிறார்கள்” என்ற பேச்சு கரூர் மக்கள் மத்தியில் உள்ளது.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment