Monday, February 12, 2018

மிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி!

திர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எடப்பாடிக்கு அணை போட ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி’’ என்ற படியே, நம் பதிலை எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தார்.
‘‘எடப்பாடி ஆட்சியின் காவலன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு இதுவரை பி.ஜே.பி இருந்தது. 2017 டிசம்பர் 24-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்தது. அன்றே, ‘எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை’ என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்தது. அதிலிருந்தே இறங்குமுகம்தான். குருமூர்த்தி சர்ச்சை, கவர்னர் காட்டும் அதிரடி என எல்லாமே இதை உணர்த்து கின்றன. பிரதமர் மோடியை அழைத்து விழா நடத்த முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி.’’

‘‘ஆமாம்! எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மோடி வந்திருக்க வேண்டுமே?’’
‘‘ஜனவரி 17-ம் தேதியே மோடி வந்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் கொண்டாடிவிட்டு, அவரு டைய பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி சென்னையில் நிறைவு விழாவை நடத்தத் திட்டமிட்டது அ.தி.மு.க. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபமும் அதற்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. எட்டு மாதங்க ளுக்கு முன்பே மோடியைச் சந்தித்த எடப்பாடி, இந்த விழாவுக்காகத் தேதியும் கேட்டார். அத்துடன் சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத் திறப்பு விழாவையும் நடத்த முடிவு செய்திருந்தார்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பிரதமர் மோடி வருவதாக இருந்தது. ஆர்.கே. நகர் தோல்விக்குப் பிறகு மோடி பயணம் ரத்தானது. இதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது மோடியை அழைத்து வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். புதுவை துறைமுக சரக்கு முனையத் திறப்பு விழா மற்றும் ஆரோவில் பொன் விழா ஆகியவை இந்த மாத இறுதியில் நடை பெறுகின்றன. இவற்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அந்தப் பயணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சேர்க்க எடப்பாடி பெரும் பிரயத்தனம் செய்கிறார். ஆனால், ‘ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் விழாவை நடத்தாமல் வேறு நாளில் நடத்தினால் நன்றாகவா இருக்கும்?’ என்று அமைச்சர்கள் சிலரே கொந்தளிப்புடன் கேட்கிறார்கள்.’’

‘‘அப்படியா?”
கதிராமங்கலத்தில் தினகரன்
‘‘பி.ஜே.பி இப்படி முதுகுகாட்ட ஆரம்பித்த நிலையில், எடப்பாடியும் முறுக்கு காட்டத் தொடங்கிவிட்டார். சட்டசபையில் கவர்னர் உரையாற்றியபோது, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். இதைத் தமிழக அரசுதான் உரையில் சேர்த்தது. இந்த நிலையில்தான், துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, ‘ரஜினியும் பி.ஜே.பி-யும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்’ என்றார். தமிழிசையும், ‘ரஜினிகாந்தின் கொள்கை பி.ஜே.பி-யுடன் ஒத்துப் போகிறது’ என்றார். இப்படி ரஜினிக்கு பி.ஜே.பி கொம்பு சீவ ஆரம்பித்த நிலையில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எனப் பேச குருமூர்த்தி என்ன தேவதூதரா?’ எனப் பாய்ச்சல் காட்டினார் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பின், சேலத்தில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது’ என்றார். அவர் தினகரனை வைத்து இப்படிச் சொல்லியிருந்தாலும், அது மறைமுகமாக      பி.ஜே.பி-க்குச் சொல்லப்பட்ட தகவலாகவே கருதப்பட்டது.’’

‘‘ஓஹோ.’’

‘‘அதன்பின் கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும்’ என்றார். ஆர்.கே. நகரில் பி.ஜே.பி நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், 

பி.ஜே.பி-யை வெளிப்படையாகவே கலாய்த்தார் தம்பிதுரை. அதோடு நிற்கவில்லை, ‘தமிழகத்தின் உரிமைகள் பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று தம்பிதுரை பத்திரிகையாளர்களிடம் பேசவும் ஆரம்பித்தார். தம்பிதுரை சொன்னதை ஓ.பன்னீர்செல்வமும் வழிமொழிந்தார். ‘தமிழகத்தில் எந்தக் காலத்திலும் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது’ எனச் செய்தியாளர்களிடம் சொன்னார்.’’
‘‘இப்படியான எதிர்ப்பில் எடப்பாடி அரசு உறுதியாக இருக்கிறதா?’’

‘‘கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ‘டெல்டா பாசனத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கவேண்டும்’ என்று கடந்த மாத இறுதியில் எடப்பாடி கடிதம் எழுதினார். அதன்பிறகு சித்தராமையாவை பெங்களூரு சென்று சந்திக்க எடப்பாடி முடிவு செய்தார். சந்திப்புக்காகத் தலைமைச் செயலாளர் மூலம் கர்நாடக அரசிடம் தேதி கேட்கப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலருக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கப்பட்டது. ‘தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்குவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம்’ என சித்தராமையாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தநிலையில் தான், ‘அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளையும் முதல்வர் தன்னுடன் அழைத்துச் செல்லவேண்டும்’ என்று சொன்னார், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பி.ஜே.பி உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தது.’’

‘‘எதற்காக?’’

‘‘கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சித்தராமையாவை எடப்பாடி சந்திப்பது நல்லதல்ல என்று பி.ஜே.பி நினைத்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழகம் காவிரி தண்ணீர் கேட்டால், விஷயத்தை சாமர்த்தியமாக சித்தராமையா திசைதிருப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என்று பி.ஜே.பி கவலைப்பட்டது. எனவே, ‘இத்தகைய சந்திப்பு நடந்தால் மத்திய அரசு இன்னும் கடுமையாக கோபம் கொள்ளும்’ என்று எடப்பாடி காதுக்குப் போகும் வகையில் செய்தி அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை எடப்பாடி - சித்தராமையா சந்திப்பு நடக்கவில்லை. ‘சித்தராமையா நேரம் ஒதுக்கவில்லையா அல்லது எடப்பாடிக்கு இதில் ஆர்வம் இல்லையா’ என்று பட்டிமன்றம் நடக்கிறது. ‘மத்திய அரசுக்குப் பிடிக்காத இந்தச் சந்திப்பை நடத்த வேண்டுமா’ என்று எடப்பாடி தயங்குவதாகவும் சொல்லப் படுகிறது.’’

‘‘அ.தி.மு.க. - பி.ஜே.பி மோதல் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரிய வில்லையே?’’

‘‘தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. அதைப் பார்த்துவிட்டு முடி வெடுக்க பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அதற்கு முன்பே இந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்த முடிவு செய்திருக்கி றதாம் பி.ஜே.பி. இப்படி முன்கூட்டி தேர்தல் நடந்தால், தமிழக சட்டசபைக்கும் கூடவே தேர்தல் நடைபெறலாம். அது எடப்பாடி அரசு நடந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது என்பது தான் இப்போதைய நிலை.’’

‘‘தன்னுடன் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப் பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரை முதல்வர் ஆக்கப்போவதாக தினகரன் பரபரப்பைக் கிளப்பியுள்ளாரே?’’

‘‘ஆமாம். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிவரும் கதிராமங்கலம் மக்களைத் திடீரென தினகரன், பிப்ரவரி 6-ம் தேதி காலையில் பெரும்படையுடன் சென்று போராட்டத் திடலில் சந்தித்தார். அங்குதான் இந்த அஸ்திரத்தை வீசினார். ‘இப்போது நடப்பது கமிஷன் ஆட்சி. இந்த கமிஷன் கும்பலிடமிருந்து ஆறு பேரைத் தவிர எங்கள் பக்கம் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அப்படி நடந்தால், தமிழகத்தில் தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும். என்னுடன் வந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தியாகம் செய்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும். எனக்கு முதல்வர் பதவி ஆசையில்லை’ என்றார் தினகரன்.’’ 

‘‘ஏன் இப்படிச் சொன்னாராம்?’’

‘‘தினகரன் அணியில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், பழனியப்பன் ஆகியோர்தான் எல்லாமுமாக செயல்படுகிறார்கள். இதில் செந்தில்பாலாஜிமீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. ‘தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்’ என்று தினகரன் கூறியதில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உடன்பாடில்லை. ஆர்.கே. நகர் தவிர வேறு எங்கு தினகரன் போனாலும், அவருடன் வெற்றிவேல் போவதில்லை. பழனியப்பன்மீதும் சில வழக்குகள் உள்ளன. இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்னை.’’

‘‘சரி, மற்றவர்கள்?’’

‘‘இந்த 18 பேரில் ஐந்து பேரைத் தவிர வேறு யார் போன் செய்தாலும் தினகரன் எடுப்பதில்லையாம். தினகரனின் உதவியாளரான ஜனார்த்தனன்தான் போனை எடுக்கிறாராம். இது அவர்கள் அணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன்தான் அவர்களை உற்சாகப்படுத்தி வைத்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்க, இந்த 18 பேரிடமும் எடப்பாடி தரப்பினர் பேசி வருகிறார்களாம். ஏகப்பட்ட வாக்குறுதிகள் அவர்களுக்குத் தரப்படுகின்றன. இதனால், யாரும் சபலம் அடைந்துவிடக்கூடாது என்ப தற்காகவே தினகரன் இப்படிப் பேசியுள்ளார்.’’
‘‘ஓஹோ!’’

‘‘தினகரன் தனது மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் முதல் கட்டத்தை முடித்து விட்டார். அவர் எதிர்பார்த்ததை விட பெரிய கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க-வில் இருக்கும் இளைஞர்கள் பெரிய அளவில் தினகரனுக்கு ஆதரவாக வருவதுடன், அவர்களே செலவழித்து வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்கள். இதை உளவுப்பிரிவு போலீஸார் மேலிடத்துக்க ‘நோட்’ போட்டு அனுப்பியுள்ளனர்.’’

‘‘சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரைக் கூட்டுவது பற்றி சர்ச்சை எழுந்துள்ளதே?’’

‘‘அவசரக் கூட்டத்தைக் கூட்டி, ஒரு வாரம் மட்டுமே சபையை நடத்தி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாமா என ஆலோசனை நடக்கிறது. ஆனால், ‘பெரும்பான்மையை நிரூபிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சட்டமன்றச் செயலாளர் பதவி பற்றிய ஒரு சர்ச்சையும் ஓடுகிறது. தமிழக சட்டமன்றச் செயலாளராக கே.பூபதி இருக்கிறார். அவர் பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஏற்கெனவே, சட்டமன்றச் செயலாளராக பதவி நீட்டிப்பில் இருந்த ஜமாலுதீனுக்குத் திரும்பவும் பதவி நீட்டிப்பு தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தைப் பிடித்தவர் பூபதி. எட்டு மாதங்கள் மட்டுமே அந்தப் பதவியில் இருந்துவிட்டு ஓய்வுபெறும் நிலையில், தன் பதவி நீட்டிப்புக்காக அவர் காய்களை நகர்த்தி வருகிறார் என்று கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். இன்னொருபுறம், சபாநாயகரின் தனிச்செயலாளராக இருக்கும் கே.சீனிவாசன், சட்டமன்றச் செயலாளர் பதவியைப் பிடிக்க முயற்சி எடுக்கிறார். சட்டம் படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்கள். ‘சட்டம் படிக்காத சீனிவாசனுக்கு வாய்ப்பு தரக்கூடாது’ என்ற குரல் எழுந்துள்ளது.’’

‘‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளரை ஏன் மாற்றினார்கள்?’’

‘‘இந்த ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். அவரை பிப்ரவரி 5-ம் தேதி மாற்றிவிட்டு, கோமளா என்பவரை நியமித்துள்ளார்கள். ஆணையத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளும்கட்சிக்கு பன்னீர்செல்வம் சரியாகத் தெரிவிப்பதில்லை என்று புகார் வாசிக்கப் பட்டதாம். ‘ஆளும்கட்சியின் உளவு அதிகாரியாக என்னால் வேலை பார்க்க முடியாது’ என்று கண்டிப்புடன் பன்னீர்செல்வம் சொன்னதாகத் தெரிகிறது. அவரை மாற்றியதற்குப் பின்னால் ‘பணிவு’ அமைச்சர் இருக்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

படம்: கே.குணசீலன்,
ரா.ராம்குமார், பா.காளிமுத்து

ஜெ. நினைவிடம்...  எதிர்த்த நடராஜன்!

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள். அன்று அவரின் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டலாம்; அதையே உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத் தொடக்கமாக பயன்படுத்தலாம் என்று முதல்வர் எடப்பாடி நினைத்தார். அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை ஜனவரி 18-ம் தேதி இதற்காக ரூ.43.63 கோடிக்கு டெண்டர் விட்டது. பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, அன்று மாலையே டெண்டர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு டெண்டர் சட்ட விதி 20-ன் படி, ரூ.2 கோடிக்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்தப் புள்ளிகளைத் தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாள்கள் அவகாசம் வழங்கவேண்டும். 

இதைச் சுட்டிக்காட்டி, அம்பத்தூர் நடராஜன் என்ற கான்ட்ராக்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இதையடுத்து, டெண்டருக்கான இறுதித் தேதி பிப்ரவரி 21 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கல் நாட்டுவிழாவை நடத்த முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ‘நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது’ என ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில், ‘‘இப்படி ஒரு வழக்கு போடும் அளவுக்கு ஏன் அசட்டையாக இருந்தீர்கள்’’ எனப் பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கடிந்துகொண்டாராம் எடப்பாடி.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணையின்போது, தயங்காமல் சொன்ன பெயர்... பழனியை நினைவுபடுத்தும் பெயர். இப்போது தினகரனுடன் வலம் வருகிறார் அவர். உயர்கல்வித் துறையின் கோட்டைப் பிரதிநிதி பதவியில் அவர் இருந்தபோது, ‘8 சி’ கொடுத்ததாக கணபதி சொல்லியிருக்கிறாராம். இதை ‘நோட்’ போட்டு முதல்வரிடம் அனுப்பி, ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று உயர் அதிகாரிகள் கேட்டார்களாம். ‘முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடரச் சொல்லுங்கள்’ என்று பதில் வந்ததாம்.  

பிப்ரவரி 4-ம் தேதியன்று முதல்வருக்குக் கண்புரை ஆபரேஷன் நடந்தது. அன்றைய தினமே வீடு திரும்பிவிட்டார். ‘ஒரு வாரம் சூரிய ஒளி கண்ணில் படக்கூடாது, டி.வி பார்க்கக்கூடாது, கேமரா ஃப்ளாஷ் படக்கூடாது’ என்பவை உட்பட 12 கண்டிஷன்களைப் போட்டிருக்கிறாராம் டாக்டர். இப்போது, பிரத்யேகக் கண்ணாடியை முதல்வர் அணிந்துள்ளார். ஏதாவது முக்கிய ஃபைல் என்றால், அதுபற்றிய விவரங்களை அதிகாரிகள் சொல்ல... வாய்வழி உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்கிறார். ஒரு வாரம் முதல்வர் கோட்டைக்கு வரமாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முக்கால்வாசி அமைச்சர்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள். 

*  
முதல்வராக எடப்பாடி ஆட்சியின் இரண்டாம் ஆண்டு தொடங்குவதை வருகிற பிப்ரவரி 15-ம் தேதியன்று கலைவாணர் அரங்கில் விழாவாகக் கொண்டாட ஏற்பாடு நடக்கிறது. ஓராண்டு சாதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்று ரெடியாகி வருகிறது. துறைரீதியான புகைப்படங்கள், செய்திகளைப் பக்காவாக எடிட்செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டுத்தான் கண் ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குச் சென்றாராம் எடப்பாடி.

*  
தஞ்சாவூர் விசிட்டின்போது டி.டி.வி.தினகரனுக்கு காய்ச்சல். 103 டிகிரி செல்சியஸ். தலைவலி, இருமல், ஜுரம் காரணமாகத்தான், அவர் சோர்வுடன் காணப்பட்டதாக டி.டி.வி. தரப்பினர் மீடியாவிடம் சொல்கிறார்கள்.  

*  
திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவர் சாகுல் ஹமீது. நுரையீரல் பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவரிடம், கடந்த வாரம் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்புகொண்டு 20 நிமிடங்கள் பேசி நலம் விசாரித்திருக்கிறார். கேள்விப்பட்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் மன்ற நிர்வாகிகள் பலர்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment