Thursday, February 15, 2018

கல்வி உதவித்தொகையைக் குறைத்த தமிழக அரசு!

ஜெயலலிதா கொடுத்தார்... எடப்பாடி பறித்தார்...
‘தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை முழுவதுமாக அரசே ஏற்றுக்கொள்ளும்’ என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசாணை கொண்டுவந்தார். ‘‘அதற்கு எதிராக இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்’’ என்று கொந்தளிக்கிறார்கள் மாணவர்கள்.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம், சட்டம் உள்பட உயர்கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவந்தது. அதை புதிய அரசாணை மூலமாக, எடப்பாடி பழனிசாமி அரசு குறைத்துவிட்டது. இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். “புதிய அரசாணையை ரத்து செய்யாவிட்டால், பிப்ரவரி 23-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்” என அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மாணவர் விக்னேஷ், “நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகவும், அப்போதைய கூடுதல் தலைமைச் செயலர் கிருஸ்துதாஸ் காந்தி முயற்சியாலும் இந்த அரசாணையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால், அதிகாரிகள் அந்த அரசாணையைக் கிடப்பில் போட்டனர். அதனை எதிர்த்து, ‘வெளிச்சம்’ என்ற மாணவர் அமைப்பின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே அரசாணை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை அரசே செலுத்தியது. இந்த நிலையில்தான், 2017 ஆகஸ்ட்டில் அரசாணை 51 மற்றும் 52 ஆகியவற்றின் மூலம்,  ‘நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் மட்டுமே வழங்கப் படும்’ எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
இப்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 85 ஆயிரத்தை ரூ.50 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளனர். இதனால், ஒன்றரை லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், தமிழகத்தில் 21 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, 44.31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதற்கு, ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்விக் கட்டணத்தை அரசு செலுத்துவதுதான் காரணம்’ எனக் கூறினார். அவர் தலைமையிலான அரசுதான் இப்போது இப்படிச் செயல்படுகிறது” என்றார்.
முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பாரிமைந்தன், ‘‘இந்த அரசாணை வந்தபிறகு, அம்பேத்கர் நூற்றாண்டு கல்வி இயக்கம் மற்றும் ‘அகம்’ மாணவர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக பலகட்ட போராட்டங்களை நடத்திவருகிறோம். இரண்டு முறை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரைச் சந்தித்தோம். 70 எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து மனுகொடுத்துள்ளோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, ‘உதவித் தொகைகள் எதுவும் குறைக்கப்படவில்லை’ எனக் கூறினார். அரசாணை போடப்பட்ட பிறகும் அமைச்சர் சட்டமன்றத்தில் இப்படித் தவறான தகவல் தரலாமா? ‘மத்திய அரசு பணம் தரவில்லை. கல்லூரிகள் மோசடி செய்கின்றன’ என்று காரணங்களைக் கூறி, இந்தப் புதிய அரசாணை வெளியாகியுள்ளது” என்றார் காட்டமாக.
அம்பேத்கர் நூற்றாண்டு கல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், “பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்லூரிக் கனவை இப்போதுதான் நிஜமாக்கத் துவங்கியுள்ளனர். இதை எடப்பாடி அரசு பறித்துள்ளது. புதிய அரசாணை மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குத் துரோகத்தை இழைத்துள்ளது எடப்பாடி அரசு’’ என்றார்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமியிடம் இதுபற்றி விளக்கம் கேட்கப் பலமுறை முயன்றோம். அவருடைய உதவியாளர்தான் பேசினார். ‘‘அமைச்சர் பிஸியாக இருக்கிறார். அவரே உங்களைத் தொடர்புகொள்வார்’’ என்றார். ஆனால், அவர் பேசவே இல்லை.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment