Friday, February 09, 2018

மிஸ்டர் கழுகு: தினகரன் மீண்டும் கைது? - அமுக்கும் அமலாக்கத் துறை...

‘‘இரட்டை இலை வழக்கில் புதிய திருப்பமாக அமலாக்கப்பிரிவு தீவிரம் காட்டுவதால் தினகரனுக்குப் புதிய சிக்கல்’’ என்ற தகவலை வீசியபடியே நம் முன் ஆஜரானார் கழுகார்.

‘‘தினகரன் இப்போதுதானே சுறுசுறுப்பாக டூர் கிளம்பியிருக்கிறார். அதற்குள் இப்படி ஒரு சறுக்கலா?’’ என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலோடு தினகரனின் அரசியல் முடிந்துவிடும் என்று நினைத்தார்கள். அங்கு வெற்றி பெற்றது மட்டுமல்ல, அபரிமிதமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுத் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இப்போது, ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயண’த்தையும் தொடங்கித் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறார். போகும் இடமெல்லாம் கூட்டம் திரள்கிறது. இது அ.தி.மு.க தொண்டர்களிடம் மட்டுமல்ல, நிர்வாகி களிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ‘கட்சியின் செல்வாக்கு அவரிடம்தான் இருக்கிறது’ என்று அமைச்சர்கள் சிலரே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் மற்றும் மூத்த அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி தவிர மற்ற அமைச்சர்கள் பலருமே ஒருவித ஊசலாட்ட மனநிலையில்தான் இருக்கிறார்களாம்.’’

‘‘ஓஹோ! தினகரன் தலைமையை  ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலா?’’

‘‘ஆமாம்! இது எதையும் மத்திய அரசோ, பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைமையோ ரசிக்கவில்லை. அதனால், தினகரனுக்கு ‘செக்’ வைக்கத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. இதற்காக, அமலாக்கத் துறை சீரியஸாக களமிறங்கியுள்ளது.”
‘‘பழைய இரட்டை இலை வழக்கா?’’

‘‘ஆமாம்! டி.டி.வி.தினகரனை டெல்லி க்ரைம் பிராஞ்ச் போலீஸார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அது நடந்து 10 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்ட 10 பேரில் முதல் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரைத் தவிர, அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உச்ச நீதிமன்றம் வரை சென்ற பின்னரும் சுகேஷால் வெளியே வர முடியவில்லை. தன்மீது கோவையில் பல வழக்குகள் உள்ளதால், கோவை சிறைக்குத் தன்னை மாற்ற வேண்டும் என்று தற்போது கோரி வருகிறார். அதன்மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. கால தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டது. அதன் பின்னரும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதை நீதிபதியே விசாரணையின்போது பல முறை சுட்டிக்காட்டி, டெல்லி போலீஸாரைக் கண்டித்துள்ளார். அவகாசம் கேட்டுக்கொண்டே இருக்கி றார்கள் டெல்லி போலீஸார். ஜனவரி 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இதே நிலைமை தொடர்ந்தது. ‘வழக்கில் புதிதாக நரேந்திர ஜெயின் என்கிற ஹவாலா ஏஜென்ட்டைக் கைது செய்திருப்பதால் மேலும் அவகாசம் வேண்டும்’ என்று டெல்லி போலீஸார் கேட்டனர். தற்போது, மார்ச் 14-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.’’

‘‘அப்படியானால் அதுவரை தினகரனை எதுவும் செய்ய முடியாதே?’’ 

‘‘இதுதான் மத்திய அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை மாதங்களாகியும், தேர்தல் ஆணையத்தில் உள்ள எந்த அதிகாரிக்கு சுகேஷ் மூலமாக தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்பதைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சொல்ல டெல்லி போலீஸால் முடியவில்லை. இந்தக் குளறுபடிகளால் தினகரன், வழக்கிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது. அதனால் அமலாக்கத் துறை, இப்போது இந்த வழக்கு விசாரணையில் களமிறங்கியுள்ளது.’’

‘‘அமலாக்கத் துறையை இறக்குகிறார்கள் என்றால் சீரியஸாக நினைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்!’’ 

‘‘தினகரனின் நண்பரான மல்லிகார்ஜுனாவை, ஜனவரி 30-ம் தேதி இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. அதுமட்டுமல்ல... தினகரனுக்குச் சட்ட ஆலோசனை வழங்கி வந்த பி.குமார் என்ற மூத்த வழக்கறிஞரையும் ஆஜராக ச்சொல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா, சசிகலாவுக்காக பல வழக்கு களில் ஆஜராகிவந்தவர்.’’
‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான அந்த குமார்தானே?’’

‘‘ஆமாம்! கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினகரன் கைது செய்யப்பட்ட ஓரிரு நாள்களில் வழக்கறிஞர் குமாரையும் டெல்லி போலீஸார் இரண்டு நாள்கள் வெளியே விடாமல், க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அவரைக் கைது செய்யத் தேவையில்லை என்று முடிவுசெய்து விட்டுவிட்டனர். மறுநாளே குமார் அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார். அவரின் மகனைக் காணச் சென்றதாக அப்போது சொல்லப்பட்டது. அன்று கைது செய்யப்படவில்லை என்றாலும் கூட, மூன்று மாதங்களுக்குமுன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது, வழக்கறிஞர் குமார் பெயரும் அதில் சேர்க்கப்பட்டது. தற்போது அமலாக்கத் துறையும் விசார ணைக்கு அழைத்துள்ளதால் அதிர்ந்து போயிருக்கிறார் அவர்.’’ 

‘‘ம்!” 

‘‘சம்மன் மட்டுமல்லாமல், விமான நிலையங்க ளில் அவருடைய பெயர், பாஸ்போர்ட் எண் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து ‘லுக் அவுட் நோட்டீஸ்’ என்று சொல்லப்படும் தேடப்படும் நபர்களுக்கான பட்டியலில் அவரது பெயரையும் சேர்த்துள்ளனர். அந்த நோட்டீஸை அமலாக்கத் துறைத் திரும்பப் பெறும்வரை வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் வாங்கு வதற்குப் பணம் கொடுத்த வழக்கின் விசாரணை யில் முன்னேற்றம் இல்லாததால், சென்னை - பெங்களூரு - கொச்சி ரூட்டில் இதற்காக டெல்லிக்கு வந்த இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்கிறது அமலாக்கத் துறை. இந்த முறைகேடான பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி. அதனால், தினகரன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது. தினகரனைக் கைது செய்து விசாரிப்பதற்கான திட்டமும் இருப்பதாகத் தகவல் கசிகிறது. அவரின் பயணத்தை முடக்கு வதற்கான முயற்சியாக இதைச் சொல்கிறார்கள். ஆனால்...’’
‘‘என்ன ஆனால்..?”

‘‘தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 12-க்குள் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் பதவி கிடைத்துவிடும் என்று தினகரன் தரப்பு நம்புகிறது. இதனால், ஆட்சி கவிழ்ந்து போய்விடும் என்றும் தினகரன் தரப்பு சொல்கிறது.’’ 

‘‘தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று வந்தால்..?’’

‘‘அதற்கும் ஒரு செக் இருக்கிறது. ‘பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ’என்று தி.மு.க. தரப்பு போட்ட வழக்கு இருக்கி றதே...இவர்களை நீக்கி னால் அவர்களையும் நீக்க வேண்டும் என்று கிளம்புவார்கள். மொத்தத் தில் 29 எம்.எல்.ஏ-க்களின் நிலைமை சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. ‘இந்த ஆட்சியை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும், நாமாக எதுவும் செய்ய வேண்டாம்’ என்று மத்திய அரசு நினைப்பதாகவும் சொல்கிறார்கள்’’ என்றபடி கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பெயர் மாற்றம்... பின்னணியில் அதிகாரிகள்!

மிழக அரசின் சார்பில் டெல்லியில் செயல்பட்டு வரும் விருந்தினர் இல்லத்தின் பெயர், தமிழ்நாடு இல்லம். அந்தப் பெயரை, ‘வைகைத் தமிழ் இல்லம்’, ‘பொதிகைத் தமிழ் இல்லம்’ என மாற்றியது தமிழக அரசு. ‘தமிழ்நாடு’ என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள அ.தி.மு.க அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவைத் தமிழக அரசு எடுப்பதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு இல்லத்தில் ரெசிடென்ஷியல் கமிஷனராக ஜஸ்பீர் சிங் பஜாஜ் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கிறார். சின்னதுரை என்பவர்தான் தமிழ்நாடு இல்லத்தின் வரவேற்பாளராகப் பணியாற்றினார். ஜஸ்பீர் சிங் பஜாஜுக்கு இவர் ‘ஆல் இன் ஆல்’ ஆகச் செயல்பட்டு வந்தார். அதனால் சின்னதுரை, துணை ரெசிடென்ஷியல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே வகிக்கவேண்டிய அந்தப் பொறுப்பில் சின்னதுரை நியமிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், முருகானந்தம் என்ற இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தார்கள். அதன்பின், பழைய தமிழ்நாடு இல்லத்தை முருகானந்தமும் புதிய தமிழ்நாடு இல்லத்தை ஜஸ்பீர் சிங் பஜாஜும் நிர்வாகம் செய்து வந்தனர். 

1960-களில் கட்டப்பட்ட பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், இதற்குத் தமிழ்நாடு இல்லத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். பழைய கட்டடத்தை அவ்வப்போது செப்பனிடும் வேலைகளில் அதிகாரிகள் காட்டில் அடை மழை. புதிய கட்டடம் கட்டினால், இப்படியான பணிகள் எதையும் இவர்களால் செய்ய முடியாது. புதிய கட்டடத்தைக் கட்டும் முடிவை அரசு எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு கட்டடங்களுக்கும் தனித்தனி பெயர்கள் வைக்கும் யோசனையை இவர்கள் தெரிவித்தனர். இப்படி தமிழ்ப் பெயர் வைக்கும் விஷயம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கவனத்துக்குப் போகவில்லையாம்.

 முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலையைத் துப்பறிய சி.பி.ஐ களமிறங்கிவிட்டது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள், ‘‘சரிவர விசாரிக்காமல் எதையாவது விட்டீர்களா?’’ என்று கேட்டார்கள். ‘‘ஆமாம். நேருவையும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரையும் சரிவர விசாரிக்கவில்லை’’ என்றார்களாம் சி.பி.சிஐ.டி போலீஸார். இதையடுத்து, சி.பி.ஐ-யின் சம்மன் விரைவில் அவர்களுக்குப் போகப்போகிறதாம். 

‘‘வாரியப்பதவி, கட்சிப்பதவியெல்லாம் வாங்கித் தருகிறேன்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன வாக்குறுதியை நம்பி அவருடைய அணியில் முக்கியஸ்தர்கள் பலர் இதுநாள் வரை இருந்தனர். ஆனால், இதுபற்றி கேட்டாலே... மௌனத்தைப் பதிலாகத் தருகிறாராம் ஓ.பன்னீர்செல்வம். வேறு வழியில்லாமல் தினகரன் வீடு இருக்கும் பெசன்ட் நகர் பக்கம் படையடுக்கத் தயாராகி விட்டார்களாம். 

 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி முடித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி. இறுதியாக, சென்னையில் நடத்தவேண்டியதுதான் பாக்கி. அதில் கலந்துகொள்ள பிரதமர் நேரம் ஒதுக்காமல் தவிர்த்து வருவது தனிக்கதை. விழாச் செலவு, விளம்பரங்கள் என்று ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை விழா நடந்தால், இந்தப்பணிகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க இப்போதே கமிஷன் கேட்கிறாராம் அரசு அதிகாரி ஒருவர்.   

 அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்டவாரியான ஆலோசனைக் கூட்டத்தில், தீர்வு காணும் பெட்டியை மு.க.ஸ்டாலின் வைக்கச் சொன்னார். அதில், நிர்வாகிகளின் புகார்க் கடிதங்கள் குவிந்தன. அவற்றில் 10 கடிதங்களைப் படித்த மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து ‘‘மார்ச் மாதத்துக்குள் திருந்தவில்லையென்றால் கல்தா நிச்சயம்’’ என்று எச்சரித்து அனுப்பினாராம்.  

 ரஜினியை அவரது உள்வட்டத்தில் இருக்கும் யாரோ குழப்பி வருகிறார்களாம். உறுப்பினர் சேர்ப்புக்காக உருவாக்கப்பட்ட ‘ஆப்’ சொதப்பிவருகிறதாம். ஏகப்பட்ட டெக்னிக்கல் பிரச்னை. அதனால், விண்ணப்பங்களை லட்சக்கணக்கில் அச்சடித்து வெளியூர் மன்றங்களுக்கு அனுப்பி வருகிறார்களாம். நண்பர்கள் ஆலோசனையைமீறி திடீரென்று ‘ஆப்’ அறிமுகம் செய்ததுதான் தவறு என ஃபீல் பண்ணுகிறார் ரஜினி.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment