Friday, February 09, 2018

கொல்லப்பட்ட குழந்தை வயது 5... கொலை செய்த குற்றவாளி வயது 14

“விஷயம் கேள்விப்பட்டு பதறியடிச்சு வீட்டுக்கு ஓடினேன். என் செல்லம் தீயில எரிஞ்சுக்கிட்டி ருந்துச்சு. பார்த்ததும் என் உயிரே போயிடுச்சு. உடனே தீயை அணைச்சிட்டு, ‘அப்பா வந்துருக் கேன்டா செல்லம்’ன்னு சொன்னேன். எந்த அசைவும் இல்லை. முகத்திலிருந்து நெஞ்சு வரை தீயில கருகிப் போச்சு. குழந்தையைப் பறிகொடுத்துட்டு நடைபிணமா ஆயிட் டோம்” என அழுவதற்குக்கூட ஜீவனின்றி பேசினார், அந்தக் குழந்தையின் தந்தை சின்னத்தம்பி.

பதினான்கே வயதான சிறுவன் ஒருவன், ஐந்து வயதுப் பெண் குழந்தையான சிவகாமியைப் பாலியல் பலாத்காரம் செய்யப் போய், அந்தக் குழந்தையைத் தீவைத்து எரித்துக் கொலையும் செய்திருப்பது தூத்துக்குடி வட்டார மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழத்தட்டப்பாறைதான் சிவகாமியின் ஊர். அங்கு சென்று, குழந்தையின் தந்தை சின்னத்தம்பி, தாய் லெட்சுமி ஆகியோரைச் சந்தித்தோம். “மகளே போயிட்டா. இனி பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றவாறு மயங்கி விழுந்தார் லெட்சுமி. தந்தை சின்னத்தம்பி, “எங்களுக்கு மூணு குழந்தைங்க. அன்னைக்கு என் மகள் அங்கன்வாடி முடிஞ்சு வந்தா. வழியில என்னைப் பாத்து, ‘அப்பா, எனக்கு முட்டாய் வாங்கிட்டு வாப்பா’ன்னு சொன்னா. ‘சரிடா கண்ணு, நீ வீட்டுக்குப் போ’ன்னு அனுப்பி வெச்சேன். அந்தத் தெருவுல ஒரு வீட்டுல விசேஷம். அங்கே என் மகள் போயிருக்கா. அப்போ அந்தப் பாவிப்பய கண்ணன், ‘உன்னை உங்க அப்பா கூட்டிட்டு  வரச்சொன்னார்’ன்னு சொல்லி, என் பிள்ளையை என் வீட்டுக்கே கூட்டிட்டுப்போய், பலாத்காரம் பண்றதுக்கு முயற்சி செஞ்சிருக்கான். என் மகள் சத்தம் போட்டதால, ஒரு துணியை எடுத்துக் கழுத்தை இறுக்கி, எம் புள்ளையைத் தூக்கித் தரையில அடிச்சிருக்கான். அதுல என் மகளுக்கு மூச்சுப்பேச்சு இல்லாம போயிருக்கு. அந்தப் பய வீட்டுக்குப் போய், மண்ணெண்ணெய் கேன் எடுத்துட்டு வந்து, என் மகளோட உடம்பு முழுக்க நியூஸ் பேப்பரைச் சுத்தி, தீ வெச்சுட்டு, கதவைச் சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டுட்டு போயிட்டான். என் மகன்கள் படிக்கிற பள்ளிக்கூடத்துல போய், ‘வீட்டுல தீப்பிடிச்சு எரியுது’ன்னு சொல்லிட்டு அந்தப் பாவிப்பய ஓடிட்டான். அதுக்கப்புறம்தான், எனக்கு விஷயம் தெரிஞ்சு ஓடினேன்” என்று கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய துயரத்துடன் பேசி முடித்தார்.
ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயிலிடம் பேசினோம். “இது எவ்வளவு கொடூரமான செயல். அதுவும், 14 வயது சிறுவன் இப்படிச் செய்ததைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனோம். இதை ஒரு சாதாரண கொலை வழக்காகவே போலீஸார் முதலில் பதிவுசெய்திருந்தனர். பாலியல் பலாத்காரம் செய்து கொலை நடந்தது என்று வழக்குப் பதிவு செய்தால் தான், குழந்தையின் உடலை வாங்குவோம்னு சொல்லிப் போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு, அதைப் பாலியல் வழக்காகவும் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது” என்றார் ஆதங்கத்துடன்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திர னிடம் பேசினோம். ‘‘பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அந்தச் சிறுவன் ஒப்புக்கொண்டான். அவனைக் கைதுசெய்து பாளையங் கோட்டை கூர்நோக்கு இல்லத்தில்வைத்துள்ளோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்’’ என்றார்.
சிறுவன் கண்ணனைப் பற்றி ஊர் மக்கள் சிலரிடம் விசாரித்தோம். “அந்தப் பையன் 9-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிக்குப் போகவில்லை. அவனுக்கு அப்பா இல்லை. அவனுடைய அம்மா, தூத்துக்குடி டோல்கேட்டில் சமையல்காரராகவும், அவனுடைய பாட்டி ஒரு பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமையலராகவும் இருக்கிறார்கள். வீட்டில் கண்டிப்பு இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித் திரிவான். ஏற்கெனவே, இரண்டு குழந்தை களைத் தூக்கிட்டுப் போய் சில்மிஷம்  செய்திருக்கிறான். அதைப் பார்த்த ஒருவர், அவனைக் கண்டித்து, அவன் பாட்டியிடமும் சொல்லி எச்சரித்துள் ளார். அதன்பிறகும் எந்தக் கண்டிப்பும் இல்லா ததால் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது’’ என்றனர்.

எங்கே போகிறது நம் சமூகம்?

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்

“கண்காணிப்பு அவசியம்!”

தூ
த்துக்குடியைச் சேர்ந்த மனநல சிறப்பு மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம். “ஆண்ட்ராய்டு போன் வருகைக்குப் பிறகு, இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாசப் படங்களைப் பார்க்கும் சிறுவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. 10 வயது சிறுவனுக்கு, 16 வயது சிறுவனின் சிந்தனை வந்துவிடுகிறது. குழந்தைகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்கு, வீட்டில் பெற்றோருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் நேரம் இல்லை. பெற்றோர்கள் அன்போடு கண்டிப்பையும் செலுத்த வேண்டும். மனநல மேம்பாட்டுக்கென தனி அமைப்புகளை ஏற்படுத்தி, மனநல மருத்துவர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையென்றால், இளம் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேதான் இருக்கும்” என்றார்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment