Thursday, February 15, 2018

சபையில் ஜெ... சிறையில் தோழி! - சசிகலா 365

.தி.மு.க என்ற கட்சியின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. ஆனால், அந்தக் கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை யார் வகிப்பது என்பதில் இப்போதும் குழப்பம் நீடிக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுகூட அந்தக் கட்சியில் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்த வில்லை. 2017 பிப்ரவரி 15-ம் தேதி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பிய சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மூன்று முறை அடித்துத் தனக்குள் சபதம் ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக, இணைபிரியாத தோழியாக வலம்வந்த சசிகலாவின் சிறைவாசம், கட்டுக் கோப்பான அ.தி.மு.க-வைக் கலைத்துப் போட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் இடம்பிடித்திருக்கும் அதே நேரத்தில், தனது ஓராண்டு சிறை வாசத்தை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா. இந்த 365 நாள்களில் தமிழக அரசியல், பிரேக்கிங் நியூஸ்களின் தொகுப்பாக இருந்தது என்னவோ நிஜம். 
பி.ஜே.பி Vs சசிகலா குடும்ப  மோதலை உச்சக்கட்டத்துக்குக் கொண்டுசென்றவர் சசிகலாவின் கணவர் நடராசன். 2017 அக்டோபர் 7-ம் தேதி, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவைப் பார்க்க டெல்லியிலிருந்து ராகுல் காந்தியை அப்போலோவுக்கு வரவழைத்தது நடராசனின் தந்திரம். அப்போலோ வந்த ராகுல், “அ.தி.மு.க-வுக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கி றோம்” என்று பேட்டி கொடுத்தார். அதன்பிறகுதான், சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து வேருடன் பிடுங்க பி.ஜே.பி முடிவெடுத்தது.   

பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன், கைதி எண் 9234-ஐ சசிகலாவுக்கும், 9235-ஐ இளவரசிக்கும், 9236-ஐ சுதாகரனுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார். சிறைக்குச் சென்ற நேரத்தில், எப்படியாவது தமிழக சிறைக்கு மாறிவிடலாம் என சசிகலா நினைத்திருந்தார். ஆனால், அதன்பிறகு நடந்த அரசியல் நகர்வுகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. 

ஓசூரில் விநாயகா ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. அதை நடத்துபவர், திவாகரனின் உறவினர் பரத். அவரின் நண்பர் பாலகிருஷ்ணா ரெட்டி. இந்தப் பழக்கத்தில் அ.தி.மு.க-வுக்குள் வந்த பாலகிருஷ்ணா ரெட்டி தான், 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தவர். 2017-ல், சசிகலா மீண்டும் சிறைக்குச் சென்றபோதும், அவர்தான் உதவினார். பெங்களூரூ ரெட்டியார் சமூக சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி, கர்நாடகா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராமலிங்க ரெட்டி, தினகரன் அணியில் இருக்கும் புகழேந்தி ஆகியோர் சசிகலாவுக்குத் தேவையான வசதிகளைக் கவனித்துக் கொண்டனர்.  

ஆரம்பத்தில், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் போன்ற அமைச்சர்கள் சசிகலாவைச் சிறையில் சந்தித்துவந்தனர். மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இங்கு வந்து சசிகலாவைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு இவர்களில் பலரும் பி.ஜே.பி-யின் தூதர்களாக சசிகலாவைச் சந்திக்கத் தொடங்கினர். அதன்பிறகு, அவர்களைச் சந்திப்பதை அறவே தவிர்த்துவிட்டார் சசிகலா. 

ஒரு கட்டத்தில் பி.ஜே.பி-யின் பிடி இறுகத் தொடங்கியது. இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரனும் கைது செய்யப் பட்டார். அது சசிகலாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. தூக்கமின்றி தவித்துப்போனார் சசிகலா. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தது. அப்போது, சசிகலாவுக்குத் தூக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதே பிரச்னை இளவரசிக்கும் ஏற்பட்டது. 

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஏற்பாட்டில், 2017 மே மாதத்தில் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு புதிய ஃபர்னிச்சர்கள் வந்திறங்கின. அதற்குப் பிறகு சிறைக்குள் சசிகலாவை ‘மேடம்’ என்று அழைக்கும் அளவுக்கு சசிகலாவுக்கு மரியாதை கூடியது. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, எந்தவித மனுவும் செய்யாமல் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் செல்வாக்குடன் சென்று வந்தார். 

சசிகலாவின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, இளவரசியின் மகன் விவேக் இங்கு இரண்டு பேரை நியமித்துள்ளார். பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள நாகாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, அவர்களைத் தங்க வைத்துள்ளார். அங்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. சசிகலா வுக்குத் தேவையான உடைகள், மருந்துகள், உணவு என எல்லாமே இந்த அப்பார்ட்மென்ட்டிலிருந்து சிறைக்குச் செல்கின்றன. அதற்கென உள்ள சமையல்காரர்கள், வேலையாட்களை இந்த இரு இளைஞர்களும் மேற்பார்வை செய்கின்றனர். 

2017 ஜூன் மாதம் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக பதவியேற்ற ரூபா நடத்திய திடீர் சோதனையில், சசிகலாவுக்காக சிறைக்குள் செயல்பட்ட சமையலறை கண்டுபிடிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் தயாராகும் உணவுகள் தினமும் காரில் சிறைக்கு வருவது, சிறையில் சசிகலாவுக்கு அவசரத் தேவைகளுக்கான சமையல் செய்ய பெண் கைதிகளுக்கான அறையை ஒதுக்கியது, அங்கிருந்த பொருள்கள் என எல்லாம் பற்றியும் ரூபா அறிக்கை கொடுத்தார். அது பரபரப்பைக் கிளப்பியது. அதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்தார். அந்த நேரத்தில்தான், சசிகலாவுக்குக் கெடுபிடிகள் அதிகரித்தன. 

வினய்குமார் விசாரணை அறிக்கையில்,  ‘15 நாட்களுக்கு மூன்று பார்வையாளர்கள் என்ற விதியை மீறி அதிகளவு பார்வையாளர்களை சசிகலா சந்தித்தார். மாலை 5.00 மணி வரை மட்டுமே பார்வையாளர்களைச் சந்திக்க முடியும் என்ற விதிகளை மீறி, இரவு 7.30 மணி வரை பார்வையாளர்களைச் சந்தித்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
டி.ஐ.ஜி ரூபாவின் அதிரடித் தாக்குதலுக்குப் பிறகும், சசிகலாவுக்காக இளவரசியின் மகன் விவேக் நியமித்த டீம் தீயாக வேலை பார்க்கிறது. ஆரம்பத்தில் இந்த டீமில் ஆனந்த், மற்றொரு ஆனந்த், வினோத் ஆகிய மூவர் இருந்தனர். இந்த மூவர் அணியை வழிநடத்தி வந்தவர், முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் மகன் எழில்மறவன். இந்த டீம், சசிகலாவுக்குத் தேவையான உதவிகளை எஸ்.ஐ ஒருவர் மூலம் செய்து கொடுத்தது. அந்த எஸ்.ஐ விடுமுறை நாள்களில்கூட சிறைக்கு வந்து, உதவிகள் செய்து கொடுத்தார். குற்றச்சாட்டு களுக்குப் பிறகு அந்த எஸ்.ஐ வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு உதவி செய்யும் டீமில் தற்போது இருவர் மட்டுமே உள்ளனர். ஆனந்த் என்பவர் சென்னை சென்றுவிட்டார். 

சிறைக்குள் சசிகலாவை அதிகம் சந்திப்பது இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா, மகன் விவேக் ஆகியோர். தினகரனும், தினகரனின் மனைவி அனுராதாவும் மகளோடு வந்து குறிப்பிட்ட இடைவெளியில்  சந்திக்கின்றனர். திவாகரன் மாதம் ஒருமுறை வருகிறார். 

அதே சிறையில் இருக்கும் சுதாகரனைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியே கசிய வில்லை. சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமிகூட சுதாகரனைச் சந்திக்காமலேயே இருந்துவந்தார். 2017 நவம்பர் 8-ம் தேதி முதல்முறையாக கணவர் சுதாகரனைக் காண சத்தியலட்சுமி வந்திருந்தார். நண்பகல் 1.05 மணிக்குச் சிறைக்குள் சென்றவர், 2.45-க்கு வெளியே வந்தார். இருவரும் பார்த்த அடுத்த நிமிடமே உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தியுள்ளனர். சுதாகரனின் சிறை வாழ்க்கை, மனைவி சத்தியலட்சுமி மீதான அன்பை அதிகப்படுத்தி யுள்ளதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

வழக்கம் போல அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் சசிகலா, தினமும் ஒரு மணி நேரம் யோகாசனங்கள் செய்கிறார். பிறகு, சிறை வளாகத்தில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார். பின்னர், குளித்து முடித்துவிட்டு, சிறைக்குள் ஸ்பெஷலாக கொண்டுவந்து வைக்கப் பட்ட லிங்கத்துக்கு பூஜை செய்கிறார். காலை 8 மணிக்கு உப்புமா அல்லது ரவா இட்லி.சர்க்கரை நோயாளிகளான சசிகலாவும், இளவரசியும் காலை 8 மணிக்கெல்லாம் சிற்றுண்டியை முடித்து விடுகிறார்கள். பிறகு, நாளேடுகளை வாசிக்கிறார். 11 மணிக்கு சர்க்கரை இல்லாமல் டீ மற்றும் சுகர்ஃப்ரீ பிஸ்கட் வரும். மதியம் 1 மணிக்குப் பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் சசிகலா, சில சமயம் மோர் சாதம் மட்டும் சாப்பிடுகிறார். மாலை 5 மணிக்கு வேகவைத்த சுண்டல் அல்லது பருப்பு வகைகள் ஒரு கப், சுகர் இல்லாத டீ உட்கொள்கிறார். இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி அல்லது ராகியில் செய்யப்பட்ட உணவு உண்கிறார்.  

பெங்களூரில் உள்ள பிரபல டெய்லரால் தைக்கப்பட்ட, ஆர்கானிக் காட்டன் சேலைகளை சசிகலா அணிகிறார். இளவரசியையும் சுதா கரனையும் சந்திக்க மனு போடும் பல சொந்தங்க ளும் சசிகலாவையே வந்து சந்திக்கின்றன.   
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாக, தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இதனால் சசிகலா கோபமாக இருந்தார். ஆனால், அந்த வீடியோ வெளியான பிறகு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தின் மீது இருந்த சர்ச்சையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணியினர் அதன்பிறகு ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து வாயே திறக்கவில்லை. இதை சசிகலாவும் புரிந்துகொண்டார். இந்த நேரத்தில், சசிகலாவைச் சந்திக்கச் சென்ற வெற்றிவேல், ‘‘என்னம்மா... நான் வீடியோ வெளியிட்டதால என்மேல கோவமா இருக்கீங்களா?’’ எனக் கேட்டுள்ளார். அதற்கு  ‘நான் வணங்கும் முருகனின் செயல் எல்லாம்’ என எழுதிக்காட்டி பதில் சொன்னார் சசிகலா.  

ஜெயலலிதா இறந்து ஒரு வருட நினைவாக, 2017 டிசம்பர் 5-ம் தேதி மௌனவிரதத்தைத் தொடங்கினார் சசிகலா. பிப்ரவரி 14-ம் தேதிதான் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா மரணமும், அந்தத் தீர்ப்பும்தான் இன்று சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் பாடாய்ப்படுத்துகிறது. அதை மனதில் வைத்து, ஜெயலலிதா மரணம் அடைந்த நாளிலிருந்து அந்தத் தீர்ப்பு வெளியான நாள் வரை மௌனவிரதத்தைக் கடைபிடித்து வந்த சசிகலா, பிப்ரவரி 14-ம் தேதியுடன் மௌன விரதத்தைக் கலைக்கிறார். 

- ஜோ.ஸ்டாலின், எம்.வடிவேல் 
அட்டை ஓவியம்: பாரதிராஜா
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment