Friday, February 09, 2018

30 லட்சம் வாங்கியவர் உள்ளே... 8 கோடி வாங்கியவர்கள் வெளியே...

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்
‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுத்தம் செய்ய வேண்டிய குப்பைகள் வீதிகளில் இல்லை, தமிழகப் பல்கலைக் கழகங்களில் தான் உள்ளன’ என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது கணபதி கைது விவகாரம். ‘துணைவேந்தர் பதவிக்குக் கோடிகள்தான் முக்கியத் தகுதி’ என்றான பின்பு, பல்கலைக் கழகங்களில் ஊழல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. முழுநேர ஊழல், பகுதிநேரக் கல்வி என்ற பாலிஸியில்தான் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுக்க முழுக்கவே ஊழல் மட்டும்தான் நடக்கிறது என்பதற்கு ஆதாரமாக, இன்றைக்குச் சிறையில் இருக்கிறார் துணைவேந்தர் கணபதி.

ஜூ.வி வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் கணபதி. 19.11.17 ஜூ.வி இதழில் ‘எட்டுக் கோடி கொடுத்திருக்கேன், என்னைமீறி எதுவும் நடக்காது’ என்ற கணபதி தலைப்பில் இவரைப் பற்றிக் கட்டுரை வெளியாகியது. ‘பணம் வாங்கிக்கொண்டு விதிகளை மீறி பணி நியமனங்களைச் செய்கிறார்’ என அவர்மீது எழுந்த புகார்களை அப்போது கட்டுரையாக்கினோம். ‘‘பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு வருவதற்காக அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனுக்கு ரூ.8 கோடி கொடுத்ததாக கணபதி கூறியிருக்கிறார்’’ என வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
துணைவேந்தராகப் பதவியேற்றதிலிருந்தே கணபதியைச் சர்ச்சைகள் சுற்றத் தொடங்கின. 2016-ம் ஆண்டு பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல்தான் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. பேராசிரியர் பணிக்காக, 72 இடங்களுக்கு 30 முதல் 60 லட்சம் ரூபாய்வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உயர்கல்வித் துறை இணைச்செயலாளரின் உத்தரவை மீறி சிண்டிகேட் கூட்டம் நடத்தி, அவசர அவசரமாகப் பணியிடங்கள் நிரப்பப் பட்டன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது பதிவாளராக இருந்த மோகன், துணைவேந்தர் கணபதிமீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸின் விசாரணை வளையத்தில் துணைவேந்தர் சிக்கி விட்டார். ஊழல் சம்பந்தமாக நிறைய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினாலும், அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கும் சந்தர்ப்பத்துக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் காத்திருந்தனர்.

இந்த நிலையில்தான், பூனைக்கு மணி கட்ட சுரேஷ் முன்வந்தார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், வேதியியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். அவரிடம் இதற்காக 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் தரவில்லை. இதனால், அவரைத் தொடர்ந்து நச்சரிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஈடுபட்டுவந்துள்ளனர். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சுரேஷ் புகார் அளித்துள்ளார். மேலிடத்தில் க்ரீன் சிக்னல் பெற்றது போலீஸ். பிப்ரவரி 3-ம் தேதி காலை திட்டமிட்டபடி, பணம் கொடுப்பதற்காக துணைவேந்தர் கணபதி வீட்டுக்குக்குச் சென்றார் சுரேஷ். அப்போது பேராசிரியர் தர்மராஜும் உடன் இருந்துள்ளார். ஒரு லட்ச ரூபாயை ரொக்க மாகவும், மீதித்தொகை செக்காகவும் கொடுக்கும் போது, திட்டமிட்டபடி உள்ளே நுழைந்து, கணபதியையும் தர்மராஜையும் கையும் களவுமாகப் பிடித்தனர் போலீஸார்.
பணம் கைக்கு வந்தவுடன், அதைத் தன் மனைவி சொர்ணலதாவிடம் கொடுப்பது கணபதியின் வழக்கம். அதன்படியே, கைதான தினமும் பணத்தை சொர்ணலதாவிடம் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வந்தவுடன், தடயத்தை அழிப்பதற்காக அந்தப் பணத்தைக் கிழித்துக் கழிவறையில் போட்டுள்ளார் சொர்ணலதா. லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவைத் தட்டியதற்கு, “நான் குளிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடுமையாக எச்சரித்தபிறகு வெளியே வந்துள்ளார். கழிவறைக் குழாயை உடைத்து, 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸார் கிளம்பும்வரை, பூஜையறையில் அமர்ந்து தொடர்ந்து பூஜை செய்துள்ளார் சொர்ணலதா.

‘‘நான் வெளியூர்க்காரன் என்பதால் என்னை ஏமாற்றிச் சிக்க வைத்துவிட்டனர். இது திட்டமிட்ட சதி. சுரேஷ் கொடுத்த பணத்தை யதேச்சையாகத்தான் வாங்கினேன். அதை எதற்காகக் கொடுத்தார் என்பதுகூட எனக்குத் தெரியாது’’ என்று மழுப்பியுள்ளார் கணபதி. இந்த வழக்கில், கணபதி மற்றும் தர்மராஜ் சிறையில் அடைக்கப்பட, தொலைமுறைக் கல்விக்கூடத்தின் பொறுப்பு இயக்குநராக உள்ள மதிவாணன் என்பவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிவாணன், துணைவேந்தர் கணபதிக்கு உறவினர். மதிவாணன், பல்கலைக்கழக மானியக்குழுவின் நேரடிக் கட்டுப்பாடு மற்றும் நிதியின் கீழ் இயங்கும், அகாடமிக் காலேஜின் இயக்குநராக உள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் அந்தக் கல்லூரி உள்ளதே தவிர, அதற்கும் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமே இல்லை. தன்னுடைய உறவினர் என்ற காரணத்துக்காகவே மதிவாணனுக்கு தொலைமுறைக் கல்விக்கூட இயக்குநர் பொறுப்பைக் கணபதி கொடுத்துள்ளார் என்றும் புகார் சொல்கிறார்கள். 
மூத்த பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘பாரதியார் பல்கலைக்கழகம் என்றாலே, உலகம் முழுவதும் நல்ல பெயர் இருந்தது. அந்தப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே, துணைவேந்தர் கணபதி வந்தார். இங்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகள் மிகவும் புகழ்பெற்றவை. எப்போதும் டாப் ரேங்கிங்கில் இருப்பதால், இந்தத் துறையினர் சற்று சுதந்திரமாகச் செயல்படுவார்கள். இதற்காக அவர்களை டார்ச்சர் செய்தார் கணபதி. ஒருகட்டத்தில், ‘துணைவேந்தரின் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்லி, கணிதத்துறை தலைவர் சரவணன் விடுப்பில் சென்றார். 

சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலரைத் தன் முடிவுகளுக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவர்களாக மாற்ற லட்சங்களில் செலவழித்தார். சமீபத்தில் நடந்த சிண்டிகேட் உறுப்பினருக்கான தேர்தலில், தனக்கு வேண்டப்பட்டவர்களை நிறுத்தி லட்சக் கணக்கில் செலவு செய்தார் கணபதி. பட்டுப் புடவைகள், பாத்திரங்கள் என்று பரிசுப்பொருள்கள் இறைக்கப்பட்டன. ஆனால், துணைவேந்தர் நிறுத்திய ஆட்கள் வெற்றிபெறவில்லை.

தனக்கு ஒத்துழைப்பவர்களுக்குப் பொறுப்பு, ஷேரிங்... ஒத்துழைக்காதவர்களுக்கு மிரட்டல் என்பதுதான் துணைவேந்தர் கணபதியின் அஸ்திரம். அண்மையில், பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மூத்த ஊழியரின் பெண்ணைக் கடத்தி மிரட்டியதாகப் புகார் எழுந்தது. நியமனங்களில் பணம் விளையாடுகிறது. யார் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே வேலை தரப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வுத் துறைத் துணைக் கட்டுப்பாட்டாளர், தொலை முறைக் கல்விக்கூட இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் காலியாக உள்ளன. இவை கூடுதல் பொறுப்பாகச் சிலருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. தனக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு இந்தப் பொறுப்புகளை வழங்கியுள்ளார் கணபதி. 

கணபதி எப்போதும் வீட்டில் பணத்தைச் சேர்த்துவைக்க மாட்டார். உடனடியாக அந்தப் பணம் திருச்சிக்குச் சென்றுவிடும். கைதாவதற்கு முந்தைய நாள் ஒரு கான்ட்ராக்டர், கணபதியிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அடுத்த நாள் காலை ரெய்டின்போது அந்தப் பணம் இல்லை. முறைகேடுகளைக் கச்சிதமாகச் செய்துமுடிக்கவும், வசூல் செய்யவும் பலர் இந்த வளாகத்தில் திரிகிறார்கள். சில பேராசிரியர்களும் இதில் அடக்கம். கணபதிக்குப் பல விவகாரங்களில் வலதுகரமாக இருப்பவர், வேதியியல் பேராசிரியர் தர்மராஜ். இதற்காக, அண்மையில் அவருக்கு ஹாஸ்டல் சீஃப் வார்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
தொலைமுறைக் கல்வி மையங்கள் (ஸ்டடி சென்டர்கள்) அமைப்பதில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் மீறப்பட்டு மிகப்பெரும் ஊழல்கள் நடந்தன. புதிதாக ஸ்டடி சென்டர்கள் அமைக்க வேண்டுமென்றால், ரூ. 15 லட்சம். ஏற்கெனவே இருக்கும் ஸ்டடி சென்டர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் ரூ. 1 லட்சம். விதிகளை மீறியும் சட்டவிரோத மாகவும் நிறைய இடங்களில் தொலைமுறைக் கல்வி மையங்கள் செயல்பட்டன. தமிழகத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட இவை இயங்கின. 2017 ஜூலையில், ‘தமிழகத்துக்கு வெளியே இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் சட்டவிரோத ஸ்டடி சென்டர்கள் மூடப்பட வேண்டும்’ எனச் சுயநிதிக் கல்லூரிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. நீதிமன்றம் மூடச் சொல்லியும்கூட, அவை உடனே மூடப்படவில்லை. ஷார்ஜா உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆறு தொலை முறைக் கல்வி மையங்கள் செயல்படு கின்றன. இவை அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோத மாகச் செயல்படுவதாக இந்தியத் தூதரகம் அறிவித்து, ‘இவற்றில் யாரும் சேர வேண்டாம்’ என எச்சரித்தது. இதுபோன்ற தலைகுனிவு தமிழகத்தின் எந்தப் பல்கலைக் கழகத்துக்கும் நேர்ந்ததில்லை. பணம் காய்க்கும் மரங்களாக அவை இருப்பதால்தான், துணை வேந்தர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள்.  

‘‘பணம் கொடுத்து வரும் துணைவேந்தர், பணம் எடுக்கத்தான் பார்ப்பார். எனவே, எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் துணைவேந்தர்கள் நியமிக்கப் படவேண்டும். 30 லட்ச ரூபாய் வாங்கியவர் சிறைக்குச் சென்றுவிட்டார். ஆனால், அவரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர்கள் வெளியில்தானே இருக்கின்ற னர்? அவர்களும் தண்டிக்கப்  படவேண்டும். பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இப்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பலரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸின் விசாரணை வளையத்தில் உள்ளனர். சிலர் முன்ஜாமீன் வாங்கவும் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. சிறையிலிருக்கும் கணபதி யிடம், ‘‘அமைச்சர்கள் பற்றியோ, கவர்னர் மாளிகையில் இருந்தபடி உதவும் அதிகாரிகள் பற்றியோ எதுவும் வாக்குமூலம் கொடுத்து மாட்டிவிட்டுவிட வேண்டாம்’’ எனப் பேரம் நடந்து வருகிறதாம். 

- இரா.குருபிரசாத்
ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: க.விக்னேஸ்வரன்

டெல்லிக்குச் சென்ற அழைப்பு!

பே
ராசிரியர் தர்மராஜ் மனைவியின் உறவினர்கள் இரண்டு பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக உள்ளனர். இதில், தர்மராஜின் சகலையான ஒரு ஐ.ஏ.எஸ், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் ஒருவருக்கு பி.ஏ-வாக இருக்கிறார். ரெய்டின்போது அவரைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர். அதேபோல, திருச்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரும் துணைவேந்தரைக் காப்பாற்ற தீவிர முயற்சி செய்துள்ளார். அந்த முக்கியப்புள்ளி, ஏற்கெனவே மற்றொரு விவகாரத்தில் கணபதியைக் காப்பாற்றியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.

சசிகலா குடும்பத்தினரின் ஆதரவால் பதவி பெற்றவர் கணபதி.ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவைச் சந்தித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்களில் கணபதியும் ஒருவர். அதேபோல, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கும் கணபதி நெருக்கம். தனக்குப் பதவி வாங்கித் தந்த முன்னாள் அமைச்சர் போலவே இந்நாள் அமைச்சருக்கும் ‘சகல’ விஷயங்களிலும் விசுவாசமாகவே இருந்து வந்துள்ளார். ஆனால், கவர்னர் மாளிகையிலிருந்து வந்த உத்தரவே அவரைக் காவு வாங்கியதாகச் சொல்கிறார்கள்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment