Sunday, February 18, 2018

வயது 30... மனைவிகள் 6 - கம்பி எண்ணும் கல்யாண மன்னன்!

கோவை புருஷோத்தமனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் ஒரு கல்யாண மன்னன் போலீஸில் சிக்கியிருக்கிறார். “ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு மேல் வாழமாட்டான். ஆசை தீர அனுபவித்துவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவான். பூப்பெய்தாத ஒரு பெண்ணைக்கூட தன் வலையில் வீழ்த்தி அனுபவித்திருக்கிறான்” என வேலூர் கல்யாண மன்னனைப் பற்றி கதை கதையாகச் சொல்கிறார்கள் போலீஸார். 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது முதல் திருமணம் 19 வயதில் நடந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த பரிமளா, உமாராணி ஆகிய இரண்டு பெண்களைத் திருமணம் செய்த பாபு, ராமநாயிணி குப்பத்தைச் சேர்ந்த துர்கா, குடியாத்தத்தைச் சேர்ந்த பாலாமணி, வேலூரைச் சேர்ந்த பாரதி மற்றும் பூப்பெய்தாத ஒரு மாணவி என 30 வயதுக்குள் ஆறு பெண்களைத் திருமணம் செய்துள்ளார். 

அகரம் கிராமத்துக்குச் சென்றோம். அங்கு எதிரே வந்த ஒருவரிடம் பாபு பற்றி விசாரித்தபோது, “பொம்பள விஷயத்துல  அவன் ரொம்ப மோசம். அதனால அவனை, ‘காளை’ன்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. ஆளு லட்சணமா இல்லைன்னாலும், பேச்சில் ரொம்பக் கில்லாடி. பேசிப் பேசியே பொண்ணுங்களை மயக்கிடுவான். இதுவரை ஆறு பொண்ணுங்களைக் கல்யாணம் செஞ்சிருக்கான். அதுபோக, கல்யாணமான பல பெண்கள்கிட்ட சகவாசம் வெச்சிருந்தான். அவன் செஞ்ச அக்கிரமங்களால எங்க ஊருக்கே கெட்ட பெயர். அவனை இப்போ போலீஸ் பிடிச்சிட்டதா கேள்விப்பட்டோம். இப்பதான் நிம்மதியா இருக்கு” என்றார்.
பாபுவின் இரண்டாவது மனைவி உமாராணியின் தந்தை சிகாமணியிடம் பேசினோம். “காளை என் மனைவிக்கு அண்ணன் மகன். முதலில், பரிமளா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார்். அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துபோச்சு. அதுக்கப்புறம், ‘பரிமளாவுக்கு அடிக்கடி வலிப்பு வருது. இனி அந்தப் பெண்ணுக்குக் குழந்தையே பிறக்காது. என் மகனுக்கு ஒரு வாரிசு வேணும்’னு காளையின் அப்பாவும், அம்மாவும் என் மனைவியிடம் வந்து அழுதாங்க. அதனால, எங்க மகளைக் கட்டிவெச்சோம். 

ஒரு வருஷம் என் மகள் அவங்க வீட்டுல வாழ்ந்துச்சு. ஒரு குழந்தை பிறந்ததும், என் மகளை சும்மாவே அடிக்க ஆரம்பிச்சார்். மத்தவங்ககூட சேத்துவச்சு தப்பா பேச ஆரம்பிச்சார். மத்த பொண்ணுங்களை பைக்ல உட்கார வெச்சு சுத்த றதைப் பார்த்து, ஒரு தடவை நானே அவரை அடிச்சிட்டேன். அதுக்கப்புறம் என் மகளை அடிச்சுத் துரத்திட்டார். என் மகளுக்கு ரெண்டு குழந்தைங்க. இப்போ, என் மகள் ஷூ கம்பெனிக்கு வேலைக்குப் போய் குழந்தைகளைக் காப்பாத்துது” என்று கண்கலங்கினார்.
பாபுவின் மூன்றாவது மனைவியான துர்காவின் அம்மா விஜயாவிடம் பேசினோம். “ஏழு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு டிராக்டர் ஓட்ட காளை வந்தாரு. எம் பெண்ணு வேலைக்குப் போறப்ப ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்பட்டி ருக்கு. திடீர்னு ஒருநாள் எம் பொண்ணக் கூட்டிட்டுப் போய் தாலி கட்டிட்டாரு. அவருக்கு ஏற்கெனவே கல்யாணமான விஷயம், கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரிய வந்துச்சு. ‘சரி, எம் மகளை நல்லா வச்சுக்கிட்டா போதும்’னு நெனச்சேன். ஆனா, அவர் வீட்லயே சரியா இருக்குறதில்லை. திடீர்னு ஒரு நாள், செங்கல்சூளையில வேலை செய்யிற ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டாருன்னு சொன்னாங்க. இப்போ, எம் மகளோட வாழ்க்கை கேள்விக்குறியா மாறிடுச்சு” என்றார் வேதனையுடன். 

பாபுவின் அப்பா ஏகன், “எனக்கு அவன் ஒரே மகன். நாங்க படிக்காதவங்க. அதனால, எப்படியாவது படிக்க வெக்கலாம்னு பார்த் தோம். ஆனா, அவனுக்குப் படிப்பு வரலை. ‘லாரி ஓட்டப்போறேன்’னு போய்ட்டான். அடங்காம இருக்கானேனு கல்யாணம் பண்ணி வெச்சோம். அவன் வீட்டை விட்டுப் போய் ஏழு வருஷம் ஆகுது. அவன் கெட்டுப்போனதுக்கு அவன்கூட இருக்குற பசங்கதான் காரணம்” என்றார் விரக்தியுடன்.

விருதம்பட்டு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனியிடம் பேசினோம். “விருதம் பட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, கல்லூரியில் படிக்கும் தங்கள் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்தனர். நாங்கள் விசாரித்தபோது, அந்தத் தம்பதியின் வீட்டு மாடியில் குடியிருந்த பாபுவையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. பாபுவின் போன் நம்பரை டிராக் செய்து, கோலார் தங்கவயல் அருகே பேத்த மங்கலம் என்ற இடத்துக்குச் சென்றோம். காணாமல்போன பெண், அங்குள்ள ஒரு செங்கல்சூளையில் வேலை செய்வதைப் பார்த்தோம். அந்தப் பெண்ணை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தோம். அங்கிருந்து தப்பிய பாபுவை, வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கைது செய்தோம்” என்றார். 

காளை என்ற பாபு தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

- கா.முரளி
படங்கள்: ச.வெங்கடேசன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment