Thursday, February 15, 2018

22 கிராமங்களை அகற்றி ஆயுதக்கிடங்கு? - பயந்து கிடக்கும் ராமநாதபுரம் மக்கள்

‘‘ஏர்வாடி முதல் வாலிநோக்கம் வரை சுமார் 6,000 ஏக்கர் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பகுதியில் ஏர்வாடி, வாலிநோக்கம், சிறைக்குளம், இதம்பாடல், சிக்கல் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 22 கிராமங்களைக் காலி செய்யப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. இங்கு சுமார் ஆறாயிரம் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தென்னை மற்றும் பனைமரத் தோப்புகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசுப் பள்ளிகளெல்லாம் அமைந்துள்ளன. எங்களைக் காலிசெய்ய நினைத்தால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று கொந்தளிக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட மக்கள்.
இந்திய கடற்படையின் படைக்கலன் பிரிவு, கேரள மாநிலம் அலுவா என்ற இடத்தில் செயல்படுகிறது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுக்கான உதிரிபாகங்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. அதன் இரண்டாவது பிரிவை, எர்ணாகுளம் மாவட்டம் மஞ்சபரா என்ற பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கக்கோரி, கேரள அரசுக்குப் பாதுகாப்புத் துறை கடிதம் அனுப்பியது. அதற்குக் கேரள அரசிடமிருந்து பதிலே வரவில்லை. எனவே, அந்தத் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தப் பகுதியில் நிலங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஏர்வாடி பகுதி மக்கள், பெரும் அச்சத்திலும் கோபத்திலும் உள்ளார்கள். போராட்டக்குழு ஒன்றையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
போராட்டக்குழு சார்பில் அக்பர் சுல்தான், பாலமுருகன் ஆகியோர் நம்மிடம் பேசினர். ‘‘பல தலைமுறைகளாக இங்கு நாங்கள் வாழ்ந்துவருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம், வழிபாட்டுத்தலங்கள் என எல்லாமே இங்குதான் உள்ளன. இந்தப் பகுதியில், ஆயிரக்கணக்கான மான்களும் உள்ளன. எங்களிடம் எந்தக் கருத்தையும் கேட்காமலேயே, கையகப்படுத்த வேண்டிய நிலங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதே ராமநாதபுரம் மாவட்டத்தில் வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தாமல், சாதாரண ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது. எங்கள் நிலங்களை அரசு கையகப்படுத்த முயன்றால், சிறை செல்வது உள்பட எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றனர்.

ஏர்வாடி கோகுல நகரைச் சேர்ந்த நாகேஸ்வரி, ‘‘வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தில், எங்கள் பகுதியில் மட்டும் ஏதோ கொஞ்சம் மழை பெய்யுது. அதை நம்பி விவசாயம் செய்து பிழைக்கிறோம். என் கணவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலைக்கும் போக முடியாது. ரொம்பக் கஷ்டப்பட்டு ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி, இப்போதுதான் வீடு கட்டிவருகிறோம். அதற்குள், அதை இடிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அப்படி நடந்தால், குடும்பத்துடன் நாங்கள் உயிரை விட்டுவிடுவோம்’’ என்று கண்கலங்கினார்.
ஏர்வாடி தர்கா நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அம்ஜத் உசேன், ‘‘எங்கள் பகுதியைச் சேர்ந்த 22 சதவிகிதம் பேர் மீன் பிடிப்பில்  ஈடுபட்டுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் குடியிருக்கும் எங்களை அப்புறப்படுத்தும் வகையில், ஆயுதக் கிடங்கு கொண்டுவரப்படுவதை எங்களால் ஏற்க முடியாது. ஆயிரக்கணக்கானவர்கள் ஏர்வாடி தர்காவில் வழிபட வருகிறார்கள். மனநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இந்தப் பகுதி, ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், யாத்திரைவாசிகளின் வழிபாட்டு உரிமை பாதிப்புக்குள்ளாகும். இந்த இடத்தைத் தானமாக வழங்கிய ராமநாதபுரம் மன்னர் முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி, தனது செப்புப் பதிவேட்டில் ‘தானம் கொடுக்கப்பட்ட இடத்துக்கு யாரும் பாதகம் செய்யக் கூடாது’ என்று சத்தியவாக்கு அளித்துள்ளார். தற்போது ஆயுதக் கிடங்கு அமைந்தால், அந்தச் சத்தியவாக்கை அரசே மீறுவதாகிவிடும். இது தர்மமாக இருக்காது’’ என்றார்.
இங்கு கடற்படையின் படைக்கலன் பிரிவு அமைய உள்ளதை, கேரளாவின் அலுவா படைக்கலன் பிரிவின் பொது மேலாளர் புனித் உறுதி செய்துள்ளார். ‘‘எங்கள் இரண்டாவது பிரிவு, தமிழகத்தின் ஏர்வாடியில் அமைய உள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சகம் எங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் கேட்டபோது, ‘‘அதுபோன்ற திட்டம் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. அதற்குள்ளாகவே, வதந்திகளைப் பரப்பியுள்ளனர். மேலும், நிலம் தொடர்பாகக் கணக்கெடுப்பு நடத்தி அச்சம் ஏற்படுத்த வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்’’ என்றார்.

இந்த அச்சத்தைப் போக்கி விளக்கம் தர வேண்டியது அரசின் கடமை.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment